பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லியில் நடைபெற்ற எகனாமிக் டைம்ஸ் உலகத் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் உரையாற்றினார்

Posted On: 31 AUG 2024 10:13PM by PIB Chennai

​புதுதில்லியில் நடைபெற்ற எகனாமிக் டைம்ஸ் உலகத் தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி  கலந்து கொண்டார். 

நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியா இன்று ஒரு புதிய வெற்றிக் கதையை எழுதி வருவதாகவும், சீர்திருத்தங்களின் தாக்கத்தை பொருளாதாரத்தின் செயல்திறன் மூலம் காண முடியும் என்றும் குறிப்பிட்டார். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 90 சதவீத வளர்ச்சியையும், உலகப் பொருளாதாரம் 35 சதவீத வளர்ச்சியையும் அடைந்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். 

கடந்த ஆண்டுகளில் மக்களின் நலனுக்காக அரசு கொண்டு வந்த அனைத்து மாற்றங்களையும் சுட்டிக்காட்டிய பிரதமர், இந்த முயற்சிகள் கோடிக்கணக்கான குடிமக்களின் வாழ்க்கையில்  தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்றார். "மக்களுக்கு நல்லாட்சியை வழங்குவதே அரசின் தீர்மானம்" என்று கூறிய பிரதமர் மோடி, "சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் ஆகியவை எங்கள் மந்திரமாகும்" என்று கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் அரசின் சேவை உணர்வையும், நாட்டின் சாதனைகளையும் இந்திய மக்கள் கண்டுள்ளனர் என்று பிரதமர் கூறினார். 
மூன்று புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தது, இந்தியாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை குறிக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார். "இந்தியாவை உலக உற்பத்தி மையமாக மாற்றுவதே ஒவ்வொரு இந்தியரின் விருப்பம்" என்று திரு மோடி அடிக்கோடிட்டுக் காட்டினார். இந்தியாவிடம் இருந்து உலகத்தின் எதிர்பார்ப்பும் இதுதான் என்றும், இன்று இதை நோக்கி நாட்டில் ஒரு புரட்சி ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். 

திறன், அறிவு, ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளின் மையமாக இந்தியாவை உருவாக்க தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களை அரசு உருவாக்கி வருவதாக அவர் வலியுறுத்தினார். இந்த ஆண்டு பட்ஜெட்டில் இதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்றும், இது ரூ .1 லட்சம் கோடி ஆராய்ச்சி நிதியில் பிரதிபலிக்கிறது என்றும் திரு மோடி மேலும் கூறினார். நடுத்தர வர்க்க குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் வெளிநாடுகளில் படிப்பதற்காக பெருமளவில் பணம் செலவிடுவதை சுட்டிக்காட்டிய திரு மோடி, அதிகப்படியான செலவினங்களிலிருந்து மக்களுக்கு உதவுவதற்காக இந்தியாவில் உள்ள தலைசிறந்த வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் வளாகங்களை திறப்பது போன்ற நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகக் கூறினார். 

2047 க்குள் வளர்ந்த பாரதமாக  மாறுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை  பிரதமர்  மீண்டும் வலியுறுத்தினார். இந்த பயணத்தில் அனைத்து குடிமக்களையும் பங்குதாரர்களையும் தீவிரமாக பங்கேற்க ஊக்குவித்த அவர், இந்தியாவில் மேலும் பல நிறுவனங்கள் உலகளாவிய பிராண்டுகளாக மாறுவதைக் காணும்  தனது ஆர்வத்தை வெளிப்படுத்தினார். உலகளவில் ஒவ்வொரு துறையிலும் இந்தியா முன்னிலை வகிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று அவர் கூறினார். 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2050533


****************

BR/KV


(Release ID: 2050571) Visitor Counter : 55