நிதி அமைச்சகம்
மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில் பொதுத்துறை வங்கிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்
Posted On:
19 AUG 2024 5:05PM by PIB Chennai
மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில் புதுதில்லியில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், பொதுத்துறை வங்கிகளின் நிதி நிலை, வைப்புத் தொகை திரட்டுதல், டிஜிட்டல் பணப் பட்டுவாடா, சைபர் பாதுகாப்பு கட்டமைப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் செயலாளர் டாக்டர் விவேக் ஜோஷி, நிதி சேவைகள் துறை செயலாளர் (நியமனம்) திரு எம் நாகராஜு, பொதுத்துறை வங்கிகளின் தலைவர்கள், நிதிச் சேவைகள் துறையின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
2024 நிதியாண்டின் போது நிகர வாராக்கடன்கள் 0.76 சதவீதமாக குறைந்தது. மேலும் பங்குதாரர்களுக்கு ரூ.27,830 கோடி ஈவுத்தொகையுடன் பொதுத்துறை வங்கிகள் ரூ. 1.45 லட்சம் கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளன என்ற தகவல் இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
பொதுத்துறை வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுடன் சிறந்த உறவை வைத்துக் கொண்டு திறமையான வாடிக்கையாளர் சேவை வழங்க வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் இந்தக் கூட்டத்தில் அறிவுறுத்தினார். குறிப்பாக கிராமப்புற மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஊழியர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுடன் இணக்கமாக செயல்படுவதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் வலியுறுத்தினார். வளர்ந்து வரும் துறைகளில் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் தத்தம் வலிமையை மேம்படுத்திக் கொள்வதற்கும், வங்கித் துறையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக் கொள்வதற்குமான ஒத்துழைப்பை பொதுத்துறை வங்கிகள் ஆராய வேண்டும் என்றும் திருமதி சீதாராமன் கேட்டுக்கொண்டார்.
சைபர் பாதுகாப்பு பிரச்சினைகளை முறையான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்திய மத்திய நிதியமைச்சர், இணைய அபாயங்களுக்கு எதிராக தேவையான தடுப்புகளை ஏற்படுத்த வங்கிகள், அரசு, கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் பாதுகாப்பு முகமைகள் இடையே கூட்டு அணுகுமுறை அவசியம் என்றார். வங்கி அமைப்புகளின் பாதுகாப்பு மீறப்படவோ அல்லது சமரசம் செய்யப்படவோ இல்லை என்பதை உறுதி செய்வதற்காக, தகவல் தொழில்நுட்ப அமைப்பின் ஒவ்வொரு அம்சமும் அவ்வப்போதும் பாதுகாப்பு கோணத்திலும் முழுமையாக மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும் என்றும் மத்திய நிதியமைச்சர் வலியுறுத்தினார்.
பல்வேறு திட்டங்கள் மூலம், அடித்தட்டு நிலையில் உள்ள குடிமக்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவளிக்கவும், வாழ்க்கையை மேம்படுத்தவும் அவர்களுக்கு கடன் வசதி செய்து தர அரசு எப்போதும் முயற்சித்து வருகிறது என்று திருமதி நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார் . டிஜிட்டல் தடம் மற்றும் பணப்புழக்கத்தின் அடிப்படையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான புதிய கடன் மதிப்பீட்டு மாதிரி உட்பட சமீபத்திய பட்ஜெட் அறிவிப்புகளை விரைவாக செயல்படுத்துமாறு அவர் வங்கிகளை கேட்டுக்கொண்டார். பிரதமரின் சுரிய சக்தி இலவச மின்சாரத் திட்டம், பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் போன்ற மத்திய அரசின் பல்வேறு முயற்சிகளின் கீழ் தகுதியான பயனாளிகளுக்கு கடன் வழங்குவதை அதிகரிப்பதில் கவனம் செலுத்துமாறு வங்கிகளை நிதியமைச்சர் அறிவுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2046670
****
SMB/RS/DL
(Release ID: 2046737)
Visitor Counter : 75
Read this release in:
Odia
,
Khasi
,
English
,
Urdu
,
Hindi
,
Hindi_MP
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Telugu
,
Kannada