நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடந்த 5 ஆண்டுகளாக வேளாண் துறை ஆண்டுக்கு சராசரியாக 4.18% வளர்ச்சி அடைந்துள்ளது

Posted On: 22 JUL 2024 2:59PM by PIB Chennai

இந்தியாவில் குறைந்த அளவு நிலம் வைத்திருக்கும் விவசாயிகள், மதிப்புமிக்க பொருட்கள் சாகுபடியில் ஈடுபட வேண்டும் என பொருளாதார ஆய்வறிக்கை வலியுறுத்தியுள்ளது. இந்த வகை விவசாயிகளின் வருவாய் அதிகரித்தால்தான், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் தேவை அதிகரித்து, உற்பத்திப் புரட்சிக்கு வழிவகுக்கும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 42.3% பேருக்கு வேளாண் துறை தான் வாழ்வாதாரம் அளித்து வருகிறது.

நாட்டில் எண்ணெய் வித்துக்கள் சாகுபடி பரப்பளவு 2014-15-ல் 25.60 மில்லியன் ஹெக்டேராக இருந்த நிலையில், 2023-24-ல் 30.08 மில்லியன் ஹெக்டேராக அதிகரித்து 17.5% வளர்ச்சியை எட்டியுள்ளது. வேளாண் துறையில் தனியார் முதலீட்டை அதிகரிப்பதன் மூலமே இத்துறைக்கு உத்வேகம் அளிக்கும் எனவும் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2022-23-ம் ஆண்டில் வேளாண் ஆராய்ச்சிப் பணிகளுக்கு ரூ.19.65 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது.  உணவு தானிய உற்பத்தி இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்து 2022-23-ல் 329.7 மில்லியன் டன்னாகவும், எண்ணெய் வித்துகள் உற்பத்தி 41.4 மில்லியன் டன்னாகவும் உள்ளது. அதே வேளையில் 2023-24-ல் பருவமழைக் குறைவு மற்றும் தாமதமாக பெய்ததால் உணவு தானிய உற்பத்தி சற்றுக் குறைந்து 328.8 மில்லியன் டன்னாக உள்ளது. உள்நாட்டில் உற்பத்தியாகும் சமையல் எண்ணெய் அளவு 2023-24-ல், 121.33 லட்சம்  டன்னாக உள்ள நிலையில், எண்ணெய் வித்துகள் சாகுபடி பரப்பளவும், 30.08 மில்லியன் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெயின் அளவு,  2022-23-ல் 57.3% அளவிற்குக் குறைந்துள்ளது. இ-நாம் எனப்படும் மின்னணு சந்தை இணையதளத்தில், 1.77 கோடிக்கும் அதிகமான விவசாயிகளும் 2.56 லட்சம் வியாபாரிகளும் பதிவு செய்துள்ளனர்.

பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு நிதியுதவித் திட்டத்தின் கீழ், 60 வயதை எட்டிய விவசாயிகளுக்கு மாத ஓய்வூதியமாக 3,000 ரூபாய் வழங்கப்படுகிறது.  இது தவிர கரீஃப், ரபி பயிர்கள் மற்றும் பிற வணிகப் பயிர்களுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

வழக்கமான உரங்களுக்கு மாற்றாக நானோ யூரியா, நானோ டிஏபி, இயற்கை உரங்கள், பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது. விவசாயிகள் சாகுபடி செய்யும் பயிர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக பிரதமரின் பயிர்க் காப்பீடு திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.15,05,589.10 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாகவும் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்   https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2034943

*** 

SMB/MM/KPG/DL


(Release ID: 2035229) Visitor Counter : 92