பிரதமர் அலுவலகம்

முன்னாள் குடியரசுத் துணைத்தலைவர் திரு எம் வெங்கையா நாயுடுவின் வாழ்க்கைப் பயணம் குறித்த மூன்று நூல்களைப் பிரதமர் வெளியிட்டார்


"நாட்டின் முன்னேற்றத்திற்கான திரு எம் வெங்கையா நாயுடுவின் தொலைநோக்குப் பார்வையும் ஆர்வமும் போற்றப்படுகிறது"

"அவரது இந்த 75 ஆண்டுகள் வாழ்க்கைப் பயணம் அசாதாரணமான மற்றும் அற்புதமான நிகழ்வுகளை உள்ளடக்கியது"

"வெங்கையா நாயுடுவின் வாழ்க்கை, சிறந்த சிந்தனைகள், தொலைநோக்குப் பார்வை மற்றும் ஆளுமை ஆகியவற்றின் மிகச் சிறந்த கலவையாகும்"

"வெங்கையா நாயுடுவின் அறிவாற்றல், விரைவான செயல்திறன் ஆகியவற்றுக்கு யாராலும் ஈடுகொடுக்க முடியாது"

"வெங்கையா நாயுடு கிராமங்கள், ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கு சேவை செய்ய விரும்பினார்"

"வெங்கையா நாயுடுவின் வாழ்க்கைப் பயணம் இளைய தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்கும் ஆதாரமாக உள்ளது"



Posted On: 30 JUN 2024 1:59PM by PIB Chennai

முன்னாள் குடியரசுத் துணைத்தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடுவின் வாழ்க்கைப் பயணம் குறித்த மூன்று புத்தகங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி அவரது 75-வது பிறந்தநாளை முன்னிட்டு காணொலிக் காட்சி மூலம் இன்று (30-06-2024) வெளியிட்டார்.

 (i) தி இந்து நாளிதழின் ஹைதராபாத் முன்னாள் ஆசிரியர் திரு எஸ் நாகேஷ் குமார் எழுதிய "வெங்கையா நாயுடு சேவையில் வாழ்க்கை"

(ii) "இந்தியாவின் 13-வது குடியரசுத் துணைத்தலைவர் எம் வெங்கையா நாயுடுவைக் கொண்டாடுதல்" என்ற தலைப்பில் குடியரசுத் துணைத்தலைவரின் முன்னாள் செயலாளர் டாக்டர் .வி.சுப்பாராவ் தொகுத்த புகைப்படத் தொகுப்பு நூல்

 (iii) திரு சஞ்சய் கிஷோர் எழுதிய "எம் வெங்கையா நாயுடுவின் வாழ்க்கை மற்றும் பயணம்" என்ற தெலுங்கு சுயசரிதை ஆகிய 2 நூல்களைப் பிரதமர் வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், திரு எம். வெங்கையா நாயுடு நாளை ஜூலை 1-ஆம் தேதியன்று 75 ஆண்டுகளை நிறைவு செய்வதைக் குறிப்பிட்டார். இந்த 75 ஆண்டுகள் அசாதாரணமானவை என்றும் திரு. எம். வெங்கையா நாயுடுவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட புத்தகங்களை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைவதாகவும் பிரதமர் தெரிவித்தார். இந்த புத்தகங்கள் மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் ஆதாரமாக அமையும் என்றும், தேசத்திற்கு சேவை செய்வதற்கான சரியான பாதையை இது காட்டும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

முன்னாள் குடியரசுத் துணைத்தலைவருடன் தமக்கு இருந்த நீண்டகால உறவை நினைவுகூர்ந்த பிரதமர், திரு வெங்கையா நாயுடுவுடன் நீண்ட காலம் பணியாற்றும் வாய்ப்பு தனக்குக் கிடைத்ததாகக் கூறினார். பாரதிய ஜனதா கட்சியின் (பிஜேபி) தேசியத் தலைவராக திரு வெங்கையா நாயுடு இருந்த காலத்தில் இந்த நட்பு தொடங்கியது என்று அவர் கூறினார். அதைத் தொடர்ந்து அமைச்சரவையில் அவர் வகித்த பொறுப்புகள், நாட்டின் குடியரசுத் துணைத்தலைவராக அவரது பதவிக்காலம், மாநிலங்களவைத் தலைவராக அவர் பதவி வகித்தது போன்றவற்றையும் பிரதமர் நினைவு கூர்ந்தார்ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளை வகித்துள்ளதாகவும் மிகப் பெரிய அனுபவத்தை அவர் கொண்டிருப்பதாகவும் பிரதமர் கூறினார். திரு வெங்கையா நாயுடுவிடம் இருந்து தாம் நிறைய கற்றுக் கொண்டிருப்பதாகப் பிரதமர் மேலும் கூறினார்.

திரு வெங்கையா நாயுடுவின் வாழ்க்கை, சிறந்த சிந்தனைகள், தொலைநோக்குப் பார்வை மற்றும் ஆளுமை ஆகியவற்றின் சிறந்த கலவை என்று திரு நரேந்திர மோடி தெரிவித்தார். ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் பிஜேபி-யின் தற்போதைய நிலை குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர், பல ஆண்டுகளுக்கு முன்பு வலுவான அடித்தளம் இல்லாமல் இருந்தது என்று கூறினார். திரு வெங்கையா நாயுடு "தேசமே முதன்மையானது" என்ற சித்தாந்தத்துடன் ஏபிவிபி அமைப்பில் இணைந்து செயல்பட்டதாகவும்  அவர் கூறினார். திரு வெங்கையா நாயுடு அவசரநிலைக் காலத்தில் சுமார் 17 மாதங்கள் சிறையில் இருந்ததைக் குறிப்பிட்ட பிரதமர், 50 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் அமல்படுத்தப்பட்ட அவசர நிலையை எதிர்த்து கடுமையாகப் போராடியதற்காக அவரைப் பாராட்டினார். அவசர நிலையின் போது சிறப்பாகச் செயல்பட்ட துணிச்சலான மனிதர் திரு வெங்கையா நாயுடு என்றும் திரு நரேந்திர கூறினார்.

அதிகாரம் என்பது வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்துவது இல்லை என்றும் அது, சேவையின் மூலம் திட்டங்களை நிறைவேற்றும் சாதனமாக இருக்கிறது என்றும் பிரதமர் கூறினார்அடல் பிகாரி வாஜ்பாய் அரசில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றபோது திரு வெங்கையா நாயுடு தன்னை நிரூபித்தார் என்றும், அவர் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக மிகச் சிறப்பாகச் செயல்பட்டார் என்றும் பிரதமர் கூறினார். வெங்கையா நாயுடு கிராமங்கள், ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கு சேவை செய்ய விரும்பினார் என்று திரு நரேந்திர மோடி தெரிவித்தார். தமது அமைச்சரவையில் மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக திரு வெங்கையா நாயுடு பணியாற்றியதைக் குறிப்பிட்ட பிரதமர், நவீன இந்திய நகரங்கள் குறித்த அவரது உறுதிப்பாட்டையும் தொலைநோக்குப் பார்வையையும் பாராட்டினார். தூய்மை இந்தியா இயக்கம், பொலிவுறு நகரங்கள் இயக்கம் மற்றும் திரு வெங்கையா நாயுடு தொடங்கிய அம்ருத் திட்டம் ஆகியவற்றைப் பிரதமர் குறிப்பிட்டார்.

முன்னாள் குடியரசுத் துணைத் தலைவரின் மென்மையான குணம், சொற்பொழிவுத்திறன் மற்றும் புத்திசாலித்தனத்தைப் பாராட்டிய பிரதமர், வெங்கையா நாயுடுவின் அறிவுத்திறன், இயல்பான தன்மை மற்றும் விரைவான செயல்பாடுகள் ஆகியவற்றுக்கு யாராலும் ஈடுகொடுக்க முடியாது என்று தெரிவித்தார். அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் கூட்டணி அரசு அமைக்கப்பட்டபோது வெங்கையா நாயுடுவின் செயல்பாடுகளைத் திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார், இது ஒரு கையில் கட்சியின் கொடியையும் மறு கையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல் திட்டத்தையும் கொண்டு அவர் செயல்பட்டதாகப் பிரதமர் தெரிவித்தார். திரு வெங்கையா நாயுடுவின் வார்த்தைகளில் ஆழம், தீவிரம், தொலைநோக்கு, துடிப்பு, துள்ளல் மற்றும் விவேகம் இருப்பதாகவும் அவரது சிந்தனைகளால் தான் ஆச்சரியம் அடைந்துள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

திரு வெங்கையா நாயுடு மாநிலங்களவைத் தலைவராக இருந்தபோது உருவாக்கிய நேர்மறையான சூழலைப் பாராட்டிய பிரதமர், அவரது பதவிக் காலத்தில் அவர் எடுத்த பல்வேறு முக்கிய முடிவுகளையும் எடுத்துரைத்தார். மக்களவையில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு, மாநிலங்களவையில் 370-வது பிரிவை ரத்து செய்வதற்கான மசோதா அறிமுகப்படுத்தப்பட்டதை நினைவு கூர்ந்த பிரதமர், அவையின் கண்ணியத்தை பராமரித்து இதுபோன்ற உணர்வுப்பூர்வமான மசோதாக்களை நிறைவேற்றியதில் திரு வெங்கையா நாயுடுவின் அனுபவம் மிக்க செயல் திறனுக்குப் பாராட்டுத் தெரிவித்தார். திரு வெங்கையா நாயுடு நீண்ட ஆயுளுக்கு, சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வாழ்த்துவதாகப் பிரதமர் கூறினார்.

வெங்கையா நாயுடுவின் உணர்வுபூர்வமான தன்மையை எடுத்துரைத்த திரு நரேந்திர மோடி, அவரது முடிவெடுக்கும் திறனைப் பாராட்டினார். எளிமையான வாழ்க்கை முறையையும், மக்களுடன் தொடர்பில் இருப்பதில் சிறப்பான வழிகளை அவர் கையாண்டதையும் பிரதமர் எடுத்துரைத்தார். பண்டிகைகளின் போது வெங்கையா நாயுடுவின் இல்லத்தில் தாம் நேரத்தை செலவிட்டதையும் பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார். இந்திய அரசியலுக்கு திரு வெங்கையா நாயுடு போன்ற ஆளுமைகள் ஆற்றிய பங்களிப்புகளை பிரதமர் சுட்டிக் காட்டினார். இன்று வெளியிடப்பட்ட மூன்று நூல்கள் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், இவை வெங்கையா நாயுடுவின் வாழ்க்கைப் பயணத்தை சித்தரிப்பவை என்றும், இவை இளைய தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்கும் ஆதாரமாக உள்ளன என்றும் கூறினார்.

திரு வெங்கையா நாயுடு, வாழ்க்கைப் பயணத்தின் 75 ஆண்டுகளை நிறைவு செய்வதை முன்னிட்டு திரு நரேந்திர மோடி மீண்டும் ஒருமுறை அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். 2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா சுதந்திரத்தின் நூற்றாண்டைக் கொண்டாடும் என்றும், வெங்கையா நாயுடுவும் நூற்றாண்டு மைல்கல்லைக் கொண்டாடுவார் என்றும் திரு நரேந்திர மோடி தெரிவித்தார். மாநிலங்களவையில் ஒருமுறை திரு வெங்கையா நாயுடுவுக்காகக் கூறப்பட்ட ஒரு கவிதையின் சில வரிகளை நினைவுகூர்ந்து பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

***

 

AD/PLM/KV

 



(Release ID: 2029717) Visitor Counter : 14