குடியரசுத் தலைவர் செயலகம்

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு ஆற்றிய உரை

Posted On: 27 JUN 2024 12:13PM by PIB Chennai

மாண்புமிகு உறுப்பினர்களே,

1.18-வது மக்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது உளங்கனிந்த வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டின் வாக்காளர்களின் நம்பிக்கையை வென்று நீங்கள் அனைவரும் இங்கு அமர்ந்துள்ளீர்கள்.

நாட்டுக்கும், மக்களுக்கும் தொண்டாற்றும் இந்த வாய்ப்பு சிலருக்கே கிட்டும்.

நாடு முதலில் என்ற உணர்வுடன் உங்களது பொறுப்புக்களை நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

மக்களவைத் தலைவராக சிறப்பாக பணியாற்றிய திரு ஓம் பிர்லா அவர்களை நான் வாழ்த்துகிறேன்.

பொது வாழ்க்கையில் அவர் நீண்ட அனுபவம் பெற்றுள்ளார்.

அவரது திறமைகள் மூலம் ஜனநாயக பாரம்பரியங்களை புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்வதில் அவர் வெற்றி பெறுவார் என்று நான் நம்புகிறேன்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

2. கோடிக்கணக்கான இந்தியர்கள் சார்பில் இன்று தேர்தல் ஆணையத்திற்கு நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகின் மிகப் பெரிய தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

சுமார் 64 கோடி வாக்காளர்கள் தங்களது கடமையை உற்சாகத்துடனும், வைராக்கியத்துடனும் நிறைவேற்றியுள்ளனர்.

இந்தத் தேர்தலிலும் பெண்கள் மிக அதிகளவில் தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனர். இந்தத் தேர்தலின் மிகவும் மகிழ்ச்சியான அம்சம் ஜம்மு-காஷ்மீரிலிருந்து உருவெடுத்தது.

காஷ்மீர் பள்ளத்தாக்கு பல தசாப்த கால வரலாற்றில் இல்லாத அளவுக்கு வாக்காளர்கள் பெருமளவில் வாக்களித்ததன் மூலம் சாதனைகளை முறியடித்துள்ளது.

கடந்த 40 ஆண்டுகளில், காஷ்மீரில் கடையடைப்புகள், வேலை நிறுத்தங்களுக்கு இடையே மிகக் குறைந்த அளவு வாக்கு சதவீதத்தையே நாம் கண்டு வந்தோம்.

இந்தியாவின் பகைவர்கள் உலக அரங்குகளில் ஜம்மு-காஷ்மீர் குறித்த தவறான பிரச்சாரத்தைத் தொடர்ந்து பரப்பி வந்தனர்.

ஆனால் இந்த முறை நாட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள அத்தகைய சக்திகளுக்கு காஷ்மீர் பள்ளத்தாக்கு, சரியான பதிலடியை வழங்கியுள்ளது.

முதன் முறையாக இந்த மக்களவைத் தேர்தலில் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதி வாக்காளர்களுக்கு கிடைத்தது.

மக்களவைத் தேர்தலுடன் தொடர்புடைய அனைத்துப் பணியாளர்களின் பணிகளுக்கு நான் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதுடன் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் கூறிக் கொள்கிறேன்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

3. 2024 ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தல் உலகம் முழுவதும் பேசு பொருளாகியிருக்கிறது.

இந்திய மக்கள் தொடர்ந்து 3-வது முறையாக ஒரு நிலையான அரசை, தெளிவான பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுத்துள்ளதை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது.

60 ஆண்டுகளுக்குப் பின்னர் இது நடந்துள்ளது.

இந்திய மக்களின் விருப்பங்கள் எப்போதுமில்லாத அளவுக்கு உச்சத்தில் இருக்கும் நேரத்தில், எனது அரசு மீது தொடர்ந்து 3-வது முறையாக மக்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.

எனது அரசால் மட்டுமே அவர்களது விருப்பங்களை நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கையை மக்கள் கொண்டுள்ளனர்.

எனவே, 2024 ஆம் ஆண்டின் இந்தத் தேர்தல் கொள்கை, நோக்கம், அர்ப்பணிப்பு, முடிவெடுப்பதில் உறுதி ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட தேர்தலாக மாறியுள்ளது.

வலிமையான, உறுதியான அரசு மீது நம்பிக்கை

நல்லாட்சி, நிலைத்தன்மை, தொடர்ச்சி ஆகியவற்றில் நம்பிக்கை

பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தில் நம்பிக்கை

அரசின் உத்தரவாதம், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நம்பிக்கை

வளர்ந்த பாரதத்திற்கான இந்தியாவின் தீர்மானத்தின் மீதான நம்பிக்கை

கடந்த 10 ஆண்டுகளில் எனது அரசின் சேவை மற்றும் நல்லாட்சி இயக்கத்திற்கான அங்கீகார முத்திரையாகும் இது.

இது, இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு தடையற்ற தொடர் பணிகளுக்கான ஆணையாகும். இதன் மூலம் இந்தியா இலக்குகளை எட்டும்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

4. 18-வது மக்களவை பல வழிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக திகழ்கிறது.

அமிர்த காலத்தின் தொடக்க ஆண்டுகளில் இந்த மக்களவை அமைக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசியல் சாசனம் ஏற்றுக் கொள்ளப்பட்டதின் 75-வது ஆண்டை இந்த மக்களவை காண உள்ளது.

மக்களின் நலனுக்கான முடிவுகளை எடுப்பதில் இந்த மக்களவை புதிய வரலாறு படைக்கும் என்று நான் நம்புகிறேன்.

வரவிருக்கும் கூட்டத் தொடரில் எனது அரசு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது.

இந்தப் பட்ஜெட் அரசின் தொலைநோக்குக் கொள்கைகள் மற்றும் எதிர்கால கண்ணோட்டத்திற்கான செயல்திறன் மிக்க ஆவணமாக இருக்கும்.

மிகப் பெரிய பொருளாதார சமூக முடிவுகளுடன் பல வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைகளையும் இந்தப் பட்ஜெட்டில் காணலாம்.

அபரிமித வளர்ச்சிக்கான இந்திய மக்களின் விருப்பங்களுக்கு இணங்க சீர்திருத்தங்களின் வேகம் மேலும் அதிகரிக்கப்படும்.

உலகம் முழுவதிலுமிருந்து முதலீட்டாளர்களை ஈர்ப்பது தொடர்பாக மாநிலங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி இருக்க வேண்டுமென எனது அரசு நம்புகிறது.

இது போட்டி நிறைந்த கூட்டுறவு கூட்டாட்சியின் உண்மையான உணர்வாகும்.

மாநிலங்களின் வளர்ச்சியிலேயே நாட்டின் வளர்ச்சி உள்ளது என்ற நம்பிக்கையுடன் நாம் தொடர்ந்து முன்னேறி செல்வோம்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

5. சீர்திருத்து, செயல்படுத்து, மாற்றம் ஏற்படுத்து என்னும் தீர்மானம் இன்று இந்தியாவை உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக மாற்றியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா பொருளாதாரத்தில் 11-வது இடத்திலிருந்து, 5-வது பெரிய பொருளாதார நாடு என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது.

2021 முதல் 2024 வரை, இந்தியா ஆண்டுக:கு 8 சதவீத சராசரி விகிதத்துடன் வளர்ந்துள்ளது.

இந்த வளர்ச்சியை வழக்கமான சூழ்நிலைகளுக்கு இடையே நாம் அடையவில்லை.

சமீபத்திய ஆண்டுகளில், 100 ஆண்டுகளில் இல்லாத மிகப் பெரிய பெருந்தொற்றை நாம் பார்த்தோம்.

உலகப் பெருந்தொற்று, உலகின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் மோதல்களுக்கு இடையே இந்தியா இந்த வளர்ச்சியை அடைந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் தேசிய நலனுடன் எடுக்கப்பட்ட முக்கிய பெரிய முடிவுகள் மற்றும் சீர்திருத்தங்கள் காரணமாகவே இதனை அடைய முடிந்தது.

இன்று இந்தியா மற்றும் உலக வளர்ச்சியில் 15 சதவீதத்தை பங்களித்துள்ளது.

இப்போது எனது அரசு உலகின் 3-வது பொருளாதாரமாக இந்தியாவை மாற்ற பாடுபட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த இலக்கை அடைவதன் மூலம் வளர்ந்த இந்தியாவுக்கான அடித்தளத்தை வலுவுடன் அமைக்க முடியும்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

6. உற்பத்தி, சேவைகள் மற்றும் விவசாயம் என்னும் பொருளாதாரத்தின் அனைத்து 3 தூண்களுக்கும் எனது அரசு சமமான முக்கியத்துவத்தை அளித்து வருகிறது.

உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டங்கள், எளிதாக வர்த்தகம் புரிதல் ஆகியவை முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகளை பெருமளவில் அதிகரிப்பதில் பங்களித்துள்ளன.

பாரம்பரிய துறைகளுடன் புதிதாக உருவாகியுள்ள துறைகளும் அதிவேகத்தில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

குறைக் கடத்தி அல்லது சூரிய சக்தியாக இருந்தாலும்,

மின்சார வாகனங்கள் அல்லது மின்னணு பொருட்களாக இருந்தாலும்,

பசுமை ஹைட்ரஜன் அல்லது மின்கலன்களாக இருந்தாலும்,

விமானம் தாங்கிகள் அல்லது போர் விமானங்களாக இருந்தாலும்,

அனைத்துத் துறைகளிலும் இந்தியா வளர்ந்து வருகிறது.

போக்குவரத்து செலவைக் குறைப்பதில் எனது அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

சேவைகள் துறையையும் அரசு வலுப்படுத்தி வருகிறது.

இன்று இந்தியா, தகவல் தொழில்நுட்பம் முதல் சுற்றுலா வரை, சுகாதாரம் முதல் நலவாழ்வு வரை ஒவ்வொரு துறையிலும் முதலிடத்திற்கு முன்னேறும் வகையில் உருவெடுத்து வருகிறது.

இது வேலைவாய்ப்பு மற்றும் சுயவேலைவாய்ப்புக்கு பெருமளவிலான புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

7. கடந்த 10 ஆண்டுகளில் எனது அரசு ஊரகப் பொருளாதாரத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் பெரும் உறுதிப்பாட்டைக் கையாண்டு வருகிறது.

வேளாண்மை சார்ந்த தொழில்கள், பால்பண்ணை, மீன்வளம் சார்ந்த தொழில்கள் ஆகியவை கிராமங்களில் விரிவாக்கப்பட்டு வருகின்றன.

இவற்றிலும் கூட்டுறவுத் துறைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களை போல் விவசாயிகள், உற்பத்தியாளர் அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளை கொண்ட மிகப் பெரிய கட்டமைப்பை அரசு உருவாக்கி வருகிறது.

சேமிப்புக் கிடங்கு என்பது சிறு விவசாயிகளுக்கு மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது.

எனவே எனது அரசு, கூட்டுறவுத் துறையில் உலகின் மிகப் பெரிய சேமிப்புக் கிடங்குகளை உருவாக்கும் ஒரு திட்டத்திற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது.

விவசாயிகள் தங்களது சிறிய அளவிலான செலவுகளை செய்வதற்கு ஏதுவாக, பிரதமரின் உழவர் நல நிதியின் கீழ் 3,20,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக அவர்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசு பதவியேற்றவுடன், எனது அரசு விவசாயிகளுக்கு 20,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை விடுவித்துள்ளது.

கரீப் பருவத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு சாதனை அளவாக உயர்த்தியுள்ளது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

8. இன்றைய இந்தியா, அதன் வேளாண் முறையில், தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப மாற்றங்களை செய்து வருகிறது.

நாம் அதிக தற்சார்பு மற்றும் ஏற்றுமதியை அதிகரிப்பதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது என்ற சிந்தனையின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படுவதுடன், கொள்கைகளும் வகுக்கப்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டாக, பருப்பு வகை மற்றும் எண்ணெய் வித்துக்களுக்கு பிற நாடுகளை நம்பியிருப்பதை குறைக்கும் வகையில், விவசாயிகளுக்கு இயன்ற அனைத்து உதவிகளையும் அரசு அளித்து வருகிறது.

உலகச் சந்தையில் அதிகமாக தேவைப்படும் உணவுப் பொருட்களை கருத்தில் கொண்டு புதிய உத்திகள் வகுக்கப்பட்டு வருகின்றன.

இப்போதெல்லாம் உலகில் இயற்கை வேளாண் பொருட்களுக்கான தேவை அதிவேகமாக அதிகரித்து வருகிறது.

இந்தத் தேவையை சமாளிக்கும் திறன் இந்திய விவசாயிகளுக்கு அதிகமாக உள்ளது.

எனவே, இயற்கை வேளாண்மையையும்,  அது தொடர்பான பொருட்களின் விநியோக சங்கிலியையும் அரசு வலுப்படுத்தி வருகிறது.

இந்த முயற்சிகளுடன், பண்ணை நடவடிக்கைகள் மீதான விவசாயிகள் செலவழிக்கும் செலவு குறைவதுடன், அவர்களது வருமானமும் மேலும் அதிகரிக்கும்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

9. இன்றைய இந்தியா உலகம் எதிர்நோக்கும் சவால்களுக்கு பணிந்து போகாமல், அவற்றுக்கான தீர்வுகளை உலகத்துக்கே வழங்குவதற்கு பெயர் பெற்றுள்ளது.

விஸ்வ பந்து என்ற அடிப்படையில் உலகின் பல பிரச்சனைகளுக்கு தீர்வுகளை வழங்கும் முன்முயற்சிகளை இந்தியா எடுத்துள்ளது.

பருவநிலை மாற்றம் முதல் உணவுப் பற்றாக்குறை வரை, ஊட்டச்சத்து முதல் நீடித்த வேளாண்மை வரை, பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வுகளை நாம் வழங்கி வருகிறோம்.

ஸ்ரீ அன்னா எனப்படும் சிறுதானிய உணவு வகைகளை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தும் பிரச்சாரத்தையும் நாம் நடத்தி வருகிறோம்.

இந்தியாவின் முன்முயற்சியின் கீழ், 2023 ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.

சர்வதேச யோகா தினமும் அண்மையில் உலக நிகழ்வாக கொண்டாடப்பட்டதை நீங்கள் பார்த்தீர்கள்.

இந்தியாவின் பெருமைமிகு பாரம்பரியத்தின் கௌரவம் உலகளவில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

யோகா, ஆயுஷ் ஆகியவற்றை ஊக்குவிப்பதன் மூலம் இந்தியா ஆரோக்கியமான உலகை உருவாக்க உதவி வருகிறது.

எனது அரசு புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன்களை பலமடங்கு அதிகரிக்கிறது.

பருவநிலை தொடர்பான நமது இலக்குகளை, அறிவிக்கப்பட்ட கால கெடுவுக்கு முன்னதாகவே நாம் அடைந்து வருகிறோம்.

நிகர பூஜ்ஜியத்தை நோக்கிய நமது முன்முயற்சிகள் பல நாடுகளுக்கு உந்து சக்தியாக உள்ளன.

சர்வதேச சூரிய சக்தி கூட்டணி போன்ற நமது முன்முயற்சிகளுடன் சாதனை அளவாக ஏராளமான நாடுகள் தொடர்பு கொண்டுள்ளன.

மாண்புமிகு உறுப்பினர்களே,

  1. எதிர்காலம்  பசுமை சகாப்தமாக  இருக்கப் போகிறது.

இந்த திசையில் எனது அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

பசுமைத் தொழிற்சாலைகளின்  முதலீடுகளை  நாங்கள் அதிகரித்து வருகிறோம். இது பசுமை வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வழி வகுக்கும்.

பசுமை எரிசக்தியாக இருந்தாலும், பசுமை போக்குவரத்தாக இருந்தாலும் அனைத்து முனைகளிலும் நாங்கள் லட்சிய இலக்குகளுடன் பணியாற்றுகிறோம்.

நமது நகரங்களை உலகிலேயே மிகச் சிறந்த வாழ்விட     ங்களாக மாற்றுவதற்கும் எனது அரசு உறுதிபூண்டுள்ளது.

மாசுபாடு இல்லாமல்,  தூய்மையாக, அடிப்படை வசதிகளுடன் நகரங்களில் வாழ்வது  இந்தியக் குடிமக்களின் உரிமையாகும்.

கடந்த 10 ஆண்டுகளில் முதலீடுகள் குறிப்பாக சிறு நகரங்களிலும் பேரூராட்சிகளிலும் முன் எப்போதும் இல்லாத அளவில் வந்துள்ளன.

உலகின் மூன்றாவது பெரிய உள்நாட்டு விமானப்போக்குவரத்து சந்தையை இந்தியா கொண்டுள்ளது.

2014 ஏப்ரலில், 209 விமான வழித்தடங்களை மட்டுமே இந்தியா கொண்டிருந்தது.

இந்த எண்ணிக்கை 2024 ஏப்ரல் வாக்கில் 605 ஆக அதிகரித்துள்ளது.

விமான வழித்தடங்களின் இந்த அதிகரிப்பு 2-ம் நிலை  மற்றும் 3-ம் நிலை நகரங்களுக்கு நேரடியாக பயனளித்துள்ளது.

10 ஆண்டுகளில் மெட்ரோ ரயில் 21 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

வந்தே மெட்ரோ போன்ற பல திட்டங்களுக்கான பணி நடைபெற்று வருகிறது.

இந்தியாவின் பொதுப் போக்குவரத்து முறையை உலகிலேயே மிகச் சிறந்த ஒன்றாக மாற்றுவதற்கு எனது அரசு பாடுபட்டு வருகிறது.

 

மாண்புமிகு உறுப்பினர்களே,

  1. வளர்ச்சி அடைந்த நாடுகளுடன் இந்தியா சமமாக நிற்பதற்கு  ஏற்ற வகையில், நவீன வசதிகளுக்காக எனது அரசு பணியாற்றுகிறது.

இந்த திசையில், மாறிவரும்  இந்தியாவின் புதிய முகத்திற்கு ஏற்ப அடிப்படைக் கட்டமைப்பு மேம்படுத்தப்படுகிறது.

10 ஆண்டுகளில் எனது அரசு  பிரதமரின் ஊரக சாலைத் திட்டத்தின் கீழ்  3,80,000 கிலோ மீட்டருக்கும் அதிகமாக கிராமச் சாலைகளை அமைத்துள்ளது.

தற்போது நாட்டில் தேசிய  நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகள் வலைப்பின்னலை நாங்கள் விரிவுபடுத்தி இருக்கிறோம்.

தேசிய நெடுஞ்சாலைகளின் கட்டமைப்பு இருமடங்கிற்கும் அதிகமாக உள்ளது.

அகமதாபாதுக்கும் மும்பைக்கும் இடையே அதிவேக ரயில் போக்குவரத்துக்கான பணியும் அதிவேகமாக நடைபெற்று வருகிறது.

நாட்டின்  வடக்கு, தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் புல்லட் ரயில் பாதைகளுக்கான சாத்தியக் கூறு ஆய்வுகளை நடத்த எனது அரசு முடிவு செய்துள்ளது.

முதல் முறையாக பெருமளவில் உள்நாட்டு நீர்வழிப் பாதைகளுக்கான பணி தொடங்கியுள்ளது.

இந்த முன்முயற்சி காரணமாக வடகிழக்குப் பகுதி  பெரிதும் பயனடையும்.

கடந்த 10 ஆண்டுகளில் வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீட்டை எனது அரசு நான்கு மடங்குக்கும் அதிகமாக உயர்த்தியுள்ளது.

கிழக்கு நோக்கிய கொள்கைச் செயல்பாட்டின் கீழ்  இந்தப் பிராந்தியத்தை உத்திப்பூர்வ நுழைவாயிலாக மாற்ற இந்த அரசு பணியாற்றுகிறது.

வடகிழக்கில் அனைத்து வகையான போக்குவரத்துத் தொடர்பும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கல்வி, சுகாதாரம், சுற்றுலா, வேலைவாய்ப்பு உட்பட அனைத்துத் துறைகளிலும் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அசாமில் 27,000 கோடி  ரூபாய் செலவில் குறைக் கடத்தி தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தயாரிப்பு  என்பதன் குவி மையமாகவும் வடகிழக்கு இருக்கும்.

வடகிழக்கில் அமைதியை நிலைநிறுத்த எனது அரசு தொடர்ந்து பாடுபடுகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் பல பழைய பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளன,  பல முக்கிய ஒப்பந்தங்கள் எட்டப்பட்டுள்ளன.

வடகிழக்கின் பிரச்சனைக்குரிய பகுதிகளில் வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதன் மூலம் படிப்படியாக ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப் பெறுவதற்கான பணியும் நடைபெறுகிறது.

நாட்டில் வளர்ச்சியின் ஒவ்வொரு அம்சத்திலுமான இந்தப் புதிய முன்முயற்சிகள், இந்தியாவின் எதிர்காலத்தை முன்னறிவிக்கின்றன.

மாண்புமிகு உறுப்பினர்களே,

  1. பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு உறுதிபூண்டுள்ள எனது அரசு பெண்கள் அதிகாரம் கொண்ட புதிய சகாப்தத்தைத் தொடங்கியுள்ளது.

நீண்டகாலமாக மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் மாபெரும் பிரதிநிதித்துவத்தை நமது நாட்டின் பெண்கள் கோரி வந்தார்கள்.

தற்போது மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தின் மூலம் அவர்கள் அதிகாரம் பெற்றுள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளில் அரசின் பல்வேறு திட்டங்கள் பெண்களின் மகத்தான பொருளாதார அதிகாரத்திற்கு வழிவகுத்துள்ளன.

கடந்த 10 ஆண்டு காலத்தில் பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின்   கீழான 4 கோடி வீடுகளில் பெரும்பாலானவை பெண் பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள்.

இப்போது எனது அரசு மூன்றாவது பதவிக்காலம்  தொடங்கியிருக்கும் நிலையில், 3 கோடி புதிய வீடுகள் கட்டுவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வீடுகளில் பெரும்பாலானவை பெண் பயனாளிகளுக்கு ஒதுக்கப்படும்

கடந்த 10 ஆண்டுகளில் 10 கோடி பெண்கள் சுயஉதவிக் குழுக்களில் திரட்டப்பட்டுள்ளனர்.

3 கோடி பெண்  லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்குவதற்கு  விரிவான இயக்கத்தை  எனது அரசு தொடங்கியுள்ளது.

இதற்காக  சுயஉதவிக் குழுக்களுக்கான நிதி  ஆதரவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த முயற்சி பெண்களின் திறமைகளை மேம்படுத்தும், வருவாய் ஆதாரத்தை அதிகரிக்கும், மதிப்பை உயர்த்தும்.

இந்த இலக்கை எட்டுவதை நோக்கிய பங்களிப்பாக நமோ ட்ரோன் சகோதரிகள் திட்டம்  உள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்களுக்கு  ட்ரோன்கள் வழங்கப்படுவதுடன், ட்ரோன் விமானிகளாகவும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

அண்மையில்  எனது அரசு வேளாண் தோழி முன்முயற்சியையும் தொடங்கியுள்ளது.

இந்த முன்முயற்சியின் கீழ் தற்போது வரை சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 30 ஆயிரம் பெண்களுக்கு வேளாண் தோழி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

வேளாண் தோழிகளுக்கு நவீன வேளாண் நடைமுறைகள் பயிற்றுவிக்கப்படுவதால் வேளாண்மையை மேலும் நவீனப்படுத்த அவர்கள் விவசாயிகளுக்கு உதவ முடியும்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

  1. பெண்களின் சேமிப்பை அதிகரிக்கவும் எனது அரசு முயற்சி செய்கிறது.

நாம் அனைவரும் நன்கு அறிந்த பிரபலமான செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ் சிறுமிகளின்  வங்கி வைப்புத் தொகைகளுக்கு அதிகபட்ச வட்டி வழங்கப்படுகிறது.

விலையில்லா ரேஷன் பொருட்கள், குறைந்த விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் போன்ற திட்டங்கள் மூலமும் பெண்கள் பெரிதும் பயனடைகின்றனர்.

இப்போது எனது அரசு மின்கட்டணமே இல்லாத நிலையைக் கொண்டு வரவும் மின்சாரத்தை விற்பதன் மூலம் வருவாய் ஈட்டுவதற்குமான திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.

பிரதமரின் சூரிய சக்தி இலவச மின்சாரத் திட்டத்தின் கீழ்  வீடுகளின் கூரைகள் மீது சூரிய மின் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.

இதற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் 78,000 ரூபாய் நிதியுதவி வழங்குகிறது.

மிகக் குறுகிய காலத்திற்குள்  இந்தத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் பதிவு செய்துள்ளன.

மேற்கூரையில் சூரிய மின் தகடு பொருத்தப்பட்ட வீடுகளுக்கான மின் கட்டணம் பூஜ்யமாகியுள்ளது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

  1. நாட்டின் ஏழைகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும் போது மட்டுமே வளர்ச்சியடைந்த இந்தியா இலக்கை எட்டுவது சாத்தியமாகும்

எனவே, எனது அரசின் திட்டங்களில் இந்த நான்கு தூண்களுக்கு மிக உயர்ந்த முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

அரசின்  திட்டங்கள் ஒவ்வொன்றின் பயனும் இவர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்வது எங்களின் முயற்சியாக இருக்கிறது. இதுவே எங்களின் நிலையான அணுகுமுறை.

அரசு திட்டங்களிலிருந்து எந்தவொரு நபரும் விடுபடக்கூடாது என்ற நோக்கத்துடன் அரசின் பணிகள் இருப்பது  அனைவருக்கும்  பயனளிக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளில் நிலையான அணுகுமுறையுடன் அரசின் திட்டங்கள் அமலாக்கப்பட்டதன் காரணமாக 25 கோடி இந்தியர்கள் வறுமையிலிருந்து வெளியேறி உள்ளனர். 

இது ஷெட்யூல்டு வகுப்பினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் இதர சமூக, பிராந்தியக் குழுக்களின் குடும்பங்களை உள்ளடக்கியது.

கடந்த 10 ஆண்டுகளில் கடைக்கோடி வரை  பயன் கிடைப்பதில் கவனம் செலுத்தியதால் இந்தப் பிரிவினரின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த மாற்றம் கண்கூடாகும் - குறிப்பாகப் பழங்குடியின சமூகங்களில்.

24,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான ஒதுக்கீடு கொண்ட பிஎம் ஜன்மன் போன்ற திட்டங்கள் பெரும்பாலான  பின்தங்கிய பழங்குடி சமூக     ங்களின் வளர்ச்சிக்கு வழி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

நலிந்த பிரிவினருக்கு வாழ்வாதார வாய்ப்புகளை அளிப்பதற்கு பிஎம்- சூரஜ் போர்ட்டல் மூலம் குறைந்த வட்டியிலான கடனை அரசு வழங்குகிறது.

மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகளுக்கு குறைந்த செலவில்  உள்நாட்டிலேயே உதவி உபகரணங்களை எனது அரசு தயாரிக்கிறது.  

பிரதமரின் மாற்றுத்திறனாளி மையங்கள் நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் விரிவாக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் இந்த உறுதிப்பாடு உண்மையான சமூக நீதியாகும்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

  1. நாட்டின் தொழிலாளர் சக்திக்கு மதிப்பளிப்பதன் குறியீடு என்ற வகையில், தொழிலாளர்களுக்கு நலத்திட்டம் மற்றும் அதிகாரமளித்தல் எனது அரசின் முன்னுரிமைகளாக இருக்கின்றன.

தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் அனைத்தையும் எனது அரசு ஒருங்கிணைத்துள்ளது.

டிஜிட்டல் இந்தியா மற்றும் அஞ்சலகங்களில் வலைப்பின்னல்களை இணைப்பதன் மூலம் விபத்து மற்றும் ஆயுள்காப்பீட்டுத் திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

பிஎம் ஸ்வநிதி திட்டம் விரிவாக்கப்பட்டு கிராமங்கள் மற்றும் சிறுநகரப் பகுதிகளில் சாலையோர வியாபாரிகளின் இந்த வரம்புக்குள் கொண்டுவரப்படுவார்கள்.

 

மாண்புமிகு உறுப்பினர்களே,

  1. சமூகத்தில் அடித்தளத்தில் உள்ளவர்களின் முன்னேற்றத்தைச் சார்ந்தே எந்தவொரு சமூகத்தின் முன்னேற்றமும் இருக்கும் என்பதை பாபா சாஹேப் டாக்டர் பி ஆர் அம்பேத்கர் நம்பினார்.

கடந்த 10 ஆண்டுகளில்  தேசத்தின் சாதனைகள் மற்றும் முன்னேற்றங்களின் அடித்தளமாக ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தல் இருந்துள்ளது.

முதல் முறையாக, அரசு தங்களின் சேவைக்காக இருக்கிறது என ஏழைகளை உணர வைத்ததாக எனது அரசு உள்ளது.

கொரோனா பெருந்தொற்றின் சிரமமான காலத்தில் 80 கோடி பேருக்கு விலையின்றி ரேஷன் பொருட்கள் வழங்க பிரதமரின்  ஏழைகள் நல உணவுத் திட்டத்தை அரசு தொடங்கியது.

இந்தத் திட்டத்தின் பயன் வறுமையிலிருந்து வெளியே வந்த குடும்பங்களுக்கும் கிடைத்ததால் அவர்கள் மீண்டும் வறுமைக்குள் வீழாமல் உள்ளனர்.

தூய்மை இந்தியா இயக்கம், ஏழைகளுக்கு கண்ணியத்தை தந்ததுடன் அவர்களின் சுகாதாரத்தை, தேசிய முக்கியத்துவம் வாய்ந்தததாக  மாற்றியது.

நாட்டில் முதல் முறையாக கோடிக்கணக்கான ஏழைகளுக்கு கழிப்பறைகள் கட்டப்பட்டன.

இந்த முயற்சிகள் மகாத்மா காந்தியின் சிந்தனைகளை உண்மையான உணர்வுடன் நாடு பின்பற்றுகிறது என்ற நம்பிக்கையை நமக்கு அளிக்கின்றன.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 55 கோடி பயனாளிகளுக்கு கட்டணமின்றி சுகாதார சேவைகளை எனது அரசு வழங்குகிறது.

நாட்டில் திறக்கப்பட்டுள்ள 25,000 மக்கள் மருந்தக மையங்களும் வேகமான முன்னேற்றத்தை அளித்துள்ளன.

இந்தத் துறையில் மேலும் ஒரு முடிவை அரசு எடுக்கவிருக்கிறது.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் தற்போது 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து முதியோர்களும் இணைக்கப்பட்டு  கட்டணமில்லா சிகிச்சைப் பலனைப் பெறுகிறார்கள்.

17. எதிர்மறை மனநிலை மற்றும் குறுகிய சுயநலப்போக்கு போன்றவற்றால், அடிப்படை ஜனநாயக உணர்வு அடிக்கடி பெரிதும் பாதிக்கப்படுகிறது.

இது நாடாளுமன்ற நடைமுறை மட்டுமின்றி, தேசத்தின் வளர்ச்சிப் பயணத்தையும் பாதிக்கிறது.

நாட்டில் நிலையற்ற அரசுகள் இருந்த காலகட்டத்தில்,  பல தசாப்தங்களுக்கு நீடித்த இந்தக் காலத்தில், பல்வேறு அரசுகள், அவர்கள் விரும்பினால் கூட, அவர்களால் சீர்திருத்தங்களை கொண்டுவரவும், முக்கியான முடிவுகளை எடுக்கவும் முடியவில்லை.

ஆனால், தற்போது இந்திய மக்கள், தங்களது உறுதியான வாக்குகளால் இந்த நிலையை மாற்றியுள்ளனர்.

கடந்த பத்து ஆண்டுகளில், அதுபோன்ற பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அவை நாட்டிற்கு தற்போது பெருமளவுக்கு பலனளித்து வருகின்றன.

இந்தச் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டபோது கூட, அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், எதிர்மறை தகவல்களை  பரப்பும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், இத்தகையை சீர்திருத்தங்கள் அனைத்தும் காலத்தை சோதிப்பதாக உள்ளன.

பத்தாண்டுகளுக்கு முன்பு, சீரழியும் நிலையில் இருந்த இந்தியாவின் வங்கித் துறையை, காப்பாற்ற அரசு வங்கிச் சீர்திருத்தங்களை கொண்டு வந்ததுடன், ஐபிசி போன்ற சட்டங்களையும் கொண்டுவந்தது.

தற்போது, இந்தச் சீர்திருத்தங்கள், இந்தியாவின் வங்கித் துறையை, உலகின் வலுவான வங்கித் துறைகளில் ஒன்றாக மாற்றியுள்ளது.

நமது பொதுத் துறை வங்கிகள், தற்போது நன்றாக வளர்ந்து, லாபம் ஈட்டி வருகின்றன. பொதுத்துறை வங்கிகளின் லாபம், 2023-24-ல்  ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டி, கடந்த ஆண்டை விட, 35 சதவீதம் அதிக லாபம் ஈட்டியுள்ளன. நமது வங்கிகளின் வலிமை, அவற்றின் கடன் கட்டமைப்பை விரிவுப்படுத்தவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பை வழங்கவும் வகை செய்துள்ளது.

பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடனும், தொடர்ந்து குறைந்து வருகிறது.

தற்போது, எஸ்பிஐ, குறிப்பிடத்தக்க அளவுக்கு லாபம் ஈட்டி வருகிறது.

தற்போது எல்ஐசியும், இதற்கு முன் இல்லாத வகையில் வலுவாக உள்ளது.

தற்போது, ஹெச்ஏஎல் நிறுவனமும், நாட்டின் பாதுகாப்புத் தொழில் துறைக்கு வலிமை அளித்து வருகிறது.

தற்போது, இந்தியப் பொருளாதாரத்தை முறைப்படுத்தும் ஊடகமாக ஜிஎஸ்டி மாறியிருப்பதுடன், வியாபாரம் மற்றும் வர்த்தகத்தை இதுவரை இல்லாத அளவுக்கு எளிமையாக்க உதவுகிறது.

முதல்முறையாக, ஏப்ரல் மாதத்தில், ஜிஎஸ்டி வசூல் 2 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. இது மாநிலங்களையும் பொருளாதார ரீதியாக வலுப்படுத்தியுள்ளது.

தற்போது, ஒட்டுமொத்த உலகமும், டிஜிட்டல் இந்தியா மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளைக் கண்டு வியப்படைந்துள்ளது.

 

மாண்புமிகு உறுப்பினர்களே,

18. வலிமையான இந்தியாவிற்கு, நமது ஆயுதப்படைகளை வலுப்படுத்துவது அவசியம். நமது ஆயுதப்படைகளின் சீர்திருத்தம் ஒரு தொடர் நடவடிக்கை என்பதோடு, இதன் மூலமே நமது படைகள் போர்காலங்களில் அவர்களது ஆதிக்கத்தை நிலைநாட்ட முடியும்.

இந்த வழிகாட்டுதலால், எனது அரசு கடந்த பத்தாண்டுகளில் பாதுகாப்புத் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

சிடிஎஸ் போன்ற சீர்திருத்தங்கள், நமது ராணுவப்படைகளுக்கு புதிய வலிமையை அளித்துள்ளது.

பாதுகாப்புத் துறையை  தற்சார்புடையதாக மாற்ற, எனது அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

படைக்கல தொழிற்சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களால், பாதுகாப்புத் துறை பெரிதும் பலனடைந்துள்ளது.

40-க்கும் மேற்பட்ட படைக்கல  தொழிற்சாலைகள், 7 பாதுகாப்புத் தொழில் நிறுவனங்களான மாற்றியமைக்கப்பட்டதால், அவற்றின் உற்பத்தி மற்றும் செயல்திறன் மேம்பட்டுள்ளது.

இதுபோன்ற சீர்திருத்தங்களால், இந்தியா தற்போது, ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்து வருகிறது.

கடந்த பத்தாண்டுகளில், நமது பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதி, 18 மடங்குக்கு மேல் அதிகரித்து 21 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.

பிலிப்பைன்ஸ் உடனான பிரம்மோஸ் ஏவுகணை பாதுகாப்புத் தளவாட உடன்படிக்கை, பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதி துறயில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்தியுள்ளது.

இளைஞர்கள் மற்றும் அவர்களது புத்தாக்கத் தொழில்களுக்கு ஊக்கமளிப்பதன் மூலம், தற்சார்பு அடைந்த பாதுகாப்புத் துறைக்கு வலுவான அடித்தளமிட வாய்ப்பு கிடைத்துள்ளது.

எனது அரசு, உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் இரண்டு பாதுகாப்புத் தொழில் சார்ந்த பெருவழித் தடங்களை உருவாக்கி வருகிறது.

கடந்த ஆண்டு நம் நாட்டில் பாதுகாப்புப் படைகள் மேற்கொண்ட கொள்முதலில், ஏறத்தாழ 70 சதவீதம், உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து மேற்கொள்ளப்பட்டது என்பது நம் அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கக்கூடியது.

500-க்கும் மேற்பட்ட ராணுவத் தளவாடங்களை இறக்குமதி செய்வதில்லை என நமது பாதுகாப்புப் படைகள் முடிவு செய்துள்ளன.

இந்த ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு சார்ந்த தளவாடங்கள்  அனைத்தும் இந்திய நிறுவனங்களிடமிருந்து மட்டுமே கொள்முதல் செய்யப்படுகின்றன.

ஆயுதப்படைகளில் பணியாற்றும் வீரர்களின் தேவைகளுக்கு எனது அரசு எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறது.

அதனால் தான் 4 தசாப்தங்களுக்குப் பிறகு, ஒரு பதவிக்கு ஒரு ஓய்வூதியம் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, இதுவரை ஒரு லட்சத்து 20ஆயிரம் கோடி ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்தவர்களை கௌரவிக்கும் விதமாக, கடமைப்பாதையின் ஒரு எல்லையில் தேசிய போர் நினைவுச் சின்னத்தை அரசு அமைத்துள்ளது.

இதுபோன்ற முயற்சிகள், தீரமிக்க வீரர்களுக்கு நன்றியுள்ள ஒரு அரசு செலுத்தும் மரியாதையாக மட்டுமல்லாமல், தேசம் முதலில் என்ற சிந்தனைக்கு நிலையான உத்வேகம் அளிப்பதாகவும் அமைந்துள்ளன.

மாண்புமிகு உறுப்பினர்களே,

19. நாட்டிலுள்ள இளைஞர்கள் பெரிதாக கனவு கண்டு, அவற்றை நனவாக்க உகந்து சூழலை உருவாக்கும் பணியில் எனது அரசு ஈடுபட்டுள்ளது.

கடந்த பத்தாண்டுகளில், நமது இளைஞர்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்த தடைகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன.

இதற்கு முன்பு இளைஞர்கள், அவர்களது சான்றிதழ்களுக்கு  சான்றொப்பம் பெற அலுவலகம் அலுவலகமாக அலைய வேண்டியிருந்தது. ஆனால், தற்போது சுயசான்றொப்பமிட்டாலே போதும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் குரூப்-சி மற்றும் குரூப் –டி பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கு நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

முன்பு, இந்திய மொழிகளில் பயின்ற மாணவர்கள் நியாயமற்ற நிலையை சந்திக்க வேண்டியிருந்தது.

புதிய தேசியக் கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டதன் வாயிலாக, எனது அரசால் இந்த அநீதியைக் களைய முடிந்துள்ளது.

தற்போது, மாணவர்கள் இந்திய மொழிகளிலேயே பொறியியல் படிப்புகளை பயில முடிகிறது.

கடந்த பத்தாண்டுகளில் 7 புதிய ஐஐடிகள், 16 ஐஐஐடிகள், 7 ஐஐஎம்கள், 15 புதிய எய்ம்ஸ், 315 மருத்துவக்கலுரிகள் மற்றும் 390 பல்கலைக்கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.

இந்தக் கல்வி நிறுவனங்களை மேலும் வலுப்படுத்தி, தேவைக்கேற்ப அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு முன்முயற்சிகளை மேற்கொள்கிறது.

டிஜிட்டல் பல்கலைக்கழகம் ஒன்றை ஏற்படுத்தவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அடல் சோதனைக்கூடங்கள், ஸ்டார்ட்அப் இந்தியா  ஸ்டாண்ட்அப் இந்தியா போன்ற திட்டங்கள், நாட்டில் உள்ள இளைஞர்களின் திறமையை மேம்படுத்த உதவுகின்றன.

இதுபோன்ற முயற்சிகளால் இந்தியா தற்போது, உலகின்  மூன்றாவது பெரிய ஸ்டாண்ட்அப் சூழலைக் கொண்ட நாடாக மாறியுள்ளது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

20. நாட்டில் உள்ள இளைஞர்கள், அவர்களது திறமையை வெளிப்படுத்துவதற்கு உரிய வாய்ப்புகளை ஏற்படுத்த அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

போட்டித் தேர்வுகளானாலும் சரி அல்லது அரசு ஆட்சேர்ப்பாக இருந்தாலும் சரி, இடையூறு செய்வதற்கு எவ்வித காரணமும் இல்லை. இந்த நடைமுறையில்  முழுமையான வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை தான் அவசியம்.

அண்மையில் சில தேர்வுகளின் போது வினாத்தாள் கசிந்த விவகாரத்தைப் பொருத்தவரை, நேர்மையான விசாரணையை மேற்கொண்டு, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்யவும், அரசு உறுதிபூண்டுள்ளது.

இதற்கு முன்பும் கூட, பல்வேறு மாநிலங்களில் வினாத்தாள் கசிவு நடந்துள்ளதை நாம் பார்த்திருக்கிறோம்.

எனவே, கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு, நாடு தழுவிய அளவில் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.

தேர்வுகளில் முறைகேடு செய்வோருக்கு எதிராக, நாடாளுமன்றமும் கடுமையான சட்டத்தை இயற்றியுள்ளது.

தேர்வு சார்ந்த அமைப்புகள், அவற்றின் செயல்பாடு மற்றும் தேர்வு நடைமுறை தொடர்பான அனைத்து அம்சங்களிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த எனது அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

21. தேச நிர்மாணத்தில் இளைஞர்களின் பங்கேற்பை மேலும் அதிகரிக்கச் செய்ய, ‘எனது இளைய பாரதம்’ என்ற இயக்கத்தை எனது அரசு தொடங்கியுள்ளது.

இதுவரை, 1.5 கோடிக்கு மேற்பட்ட இளைஞர்கள் இதற்காக பதிவு செய்துள்ளனர்.

இந்த முன் முயற்சி, தலைமை பண்புகளை ஏற்படுத்துவதுடன், இளைஞர்களிடையே சேவை உணர்வையும் ஏற்படுத்தும்.

தற்போது நமது இளைஞர்கள், விளையாட்டுத் துறையில் முன்னேறுவதற்கும் புதிய வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.

எனது அரசின் உறுதியான முயற்சிகளால், இளம் இந்திய வீரர்கள் சர்வதேசப் போட்டிகளில்  அதிக எண்ணிக்கையிலான பதக்கங்களை வென்று வருகின்றனர்.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டி இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது.

ஒலிம்பிக்கில் இந்தியாவின் சார்பில் பங்கேற்கும் ஒவ்வொரு தடகள வீரரையும் நினைத்து நாங்கள் பெருமிதம் அடைகிறோம். அவர்களுக்கு எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இத்தகையை சாதனைகளை மேலும் முன்னெடுத்துச் செல்லும் விதமாக, 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்திய ஒலிம்பிக் சங்கம் ஆயத்தமாகி வருகிறது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

22. இந்திய நியாயச்சட்டம், ஜூலை முதல் தேதியிலிருந்து நாட்டில் நடைமுறைக்கு வர உள்ளது.

பிரிட்டீஷ் ஆட்சியின் போது, தண்டிக்கும் மனப்பான்மை இருந்தது.

துரதிருஷ்டவசமாக, காலனி ஆதிக்ககாலத்தில் இருந்த அதே தண்டனைச் சட்டங்கள், நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் பல தசாப்தங்களாக தொடர்ந்தது.

இதனை மாற்றுவது பற்றி பல தசாப்தங்களாக  பலமுறை பேசப்பட்டப்போதிலும் எனது அரசு தான், துணிச்சலுடன் அதனை நிறைவேற்றியது.

தற்போது, தண்டனையை விட, நியாயம் முன்னுரிமை பெறுவதோடு, நமது அரசின் சாசன உணர்வுகளை உறுதி செய்வதாகவும் இவை அமைந்துள்ளன.

இந்தப் புதிய சட்டங்கள், நீதிமன்ற நடவடிக்கைகளை விரைவுபடுத்தும்.

தற்போது, பல்வேறு அம்சங்களிலும் காலனி ஆதிக்க மனப்பான்மையிலிருந்து நாடு விடுதலைப் பெற்றிருப்பது, மிகப்பெரிய நடவடிக்கையாக கருதப்படுகிறது.

இதுதான், நமது சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு செலுத்தும் உண்மையான மரியாதையாகும்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம், அகதிகளாக வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கும் பணியை எனது அரசு தொடங்கியுள்ளது.

பிரிவினை காரணமாக இன்னல்களை எதிர்நோக்கி வந்த பல்வேறு குடும்பங்களுக்கு, கண்ணியமான வாழ்க்கையை இது உறுதி செய்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ், குடியுரிமை வழங்கப்பட்ட குடும்பங்களின் எதிர்காலம் வளமாக அமைய  நான்  வாழ்த்துகிறேன்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

23. எதிர்காலத்தை நிர்மாணிக்கும் அதே வேளையில், இந்தியக் கலாச்சாரத்தின் ஒளிமயமான காலம் மற்றும் பாரம்பரியத்தை மீண்டும் ஏற்படுத்த எனது அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அண்மையில், நாளந்தா பல்கலைக்கழகத்தின் பிரமாண்ட வளாக திறப்பு, இதில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாளந்தா ஒரு பல்கலைக்கழகம் மட்டுமல்ல, மாறாக, இந்தியாவின் ஒளிமயமான கடந்த காலம்  மற்றும் உலகளாவிய அறிவாற்றல் மையமாக திகழ்ந்ததற்கு இதுவே சான்றாகும்.

புதிய நாளந்தா பல்கலைக்கழகம், இந்தியாவை உலகளாவிய அறிவாற்றல் மையமாக மாற்ற உதவிகரமாக இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் நமது பாரம்பரியம் மூலம் வருங்கால சந்ததியினருக்கு தொடர்ந்து ஊக்கமளிப்பதே எனது அரசின் முயற்சியாகும்.

எனவே தான், யாத்திரை தளங்கள் மற்றும் மத நம்பிக்கையுடைய  இடங்கள் மற்றும் ஆன்மீக தளங்கள் நாடு முழுவதும் புத்தெழுச்சிப் பெற்று வருகின்றன.

மாண்புமிகு உறுப்பினர்களே,

24. எனது அரசு, வளர்ச்சிக்காக பாடுபட்டு வரும் அதே பெருமிதத்துடன், பாரம்பரியத்திற்காகவும் பாடுபட்டு வருகிறது.

பாரம்பரியத்தின் பெருமைக்கான இந்த உறுதிப்பாடு, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், வஞ்சிக்கப்பட்டவர்கள் மற்றும் அனைத்து சமூகத்தினரின் கவுரவத்தின் அடையாளமாக மாறி வருகிறது.

எனது அரசு, பகவான் பிர்ஸா முண்டாவின் பிறந்தநாளை பழங்குடியினர் கவுரவ தினம் என்ற பெயரில் கொண்டாடத் தொடங்கியது.

அடுத்த ஆண்டு பகவான் பிர்ஸா முண்டாவின் 150-வது பிறந்தநாள் நாடு முழுவதிலும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட இருக்கிறது.

ராணி துர்காவதியின் 500-வது பிறந்த ஆண்டையும் நாடு பெரிய அளவில் கொண்டாடுகிறது.

கடந்த மாதம், ராணி அஹில்யாபாய் ஹோல்கரின் 300-வது பிறந்தநாளைக் குறிக்கும் ஆண்டு கொண்டாட்டத்தை நாடு தொடங்கியது.

முன்னதாக, குருநானக் அவர்களின் 550-வது பிறந்தநாள் மற்றும் குரு கோவிந்த் சிங் அவர்களின் 350-வது ஜெயந்தி ஆகியவற்றை அரசு மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடியது.

'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற உணர்வுடன் காசி தமிழ் சங்கமம், சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் போன்ற திருவிழாக்களைக் கொண்டாடும் பாரம்பரியத்தையும் எனது அரசு தொடங்கி வைத்தது.

இத்தகைய நிகழ்வுகள் மூலம் புதிய தலைமுறையினர் தேச நிர்மாணத்திற்கு உத்வேகம் பெறுவதுடன், தேசத்தை நோக்கிய அவர்களது பெருமித உணர்வும் வலுவடைகிறது.

 

மாண்புமிகு உறுப்பினர்களே,

25. நமது வெற்றிகள் நமது பகிரப்பட்ட பாரம்பரியமாகும்.

எனவே, நாம் பெருமை கொள்ள வேண்டும், அவற்றை அரவணைக்க தயங்கக்கூடாது.

இன்று இந்தியா பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்த சாதனைகள், நமது முன்னேற்றம் மற்றும் வெற்றிகள் குறித்து பெருமிதம் கொள்ள மகத்தான வாய்ப்புகளை வழங்குகின்றன.

உலக அளவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் இந்தியா சிறப்பாக செயல்படுவது குறித்து நாம் பெருமைப்பட வேண்டும்.

நிலவின் தென் துருவத்தில் நமது விஞ்ஞானிகள் வெற்றிகரமாக சந்திரயான் விண்கலத்தை தரையிறக்கியது பற்றி நாம் பெருமிதம் கொள்ள வேண்டும்.

உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுப்பது குறித்து நாம் பெருமைப்பட வேண்டும்.

பெரிய அளவில் வன்முறையோ, ஒழுங்கீனமோ இல்லாமல் இவ்வளவு பெரிய தேர்தலை இந்தியா நடத்துவதை எண்ணியும் நாம் பெருமிதம் கொள்ள வேண்டும்.

இன்று ஒட்டுமொத்த உலகமும் நம்மை ஜனநாயகத்தின் அன்னையாக மதிக்கிறது.

இந்திய மக்கள் எப்போதும் ஜனநாயகத்தின் மீது முழு நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர், தேர்தல் அமைப்புகள் மீது முழு நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.

நமது வலுவான ஜனநாயகத்தை நிலைநிறுத்த இந்த நம்பிக்கையை நாம் போற்றி பாதுகாக்க வேண்டும்.

ஜனநாயக அமைப்புகள் மீதும், தேர்தல் நடைமுறைகள் மீதும் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை புண்படுத்துவது, நாம் அனைவரும் அமர்ந்திருக்கும் கிளையை நாமே வெட்டுவது போன்றது என்பதை நாம் உணர வேண்டும்.

நமது ஜனநாயகத்தின் நம்பகத்தன்மையைக் குறைப்பதற்கு உட்படுத்தும் ஒவ்வொரு முயற்சியையும் நாம் கூட்டாக கண்டிக்க வேண்டும்.

வாக்குச் சீட்டுகள் பறிக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட அந்தக் காலங்களை நாம் அனைவரும் நினைவில் வைத்திருக்கிறோம்.

தேர்தல் நடைமுறையின் புனிதத்தன்மையை உறுதி செய்ய, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.

கடந்த சில தசாப்தங்களில் உச்சநீதிமன்றம் முதல் மக்கள் நீதிமன்றம் வரை அனைத்து சோதனைகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தேர்ச்சி பெற்றுள்ளது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

26. எனது சில கவலைகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இந்தப் பிரச்சனைகள் குறித்து சுயபரிசோதனை செய்து, நாட்டிற்கு உறுதியான மற்றும் ஆக்கப்பூர்வமான தீர்வுகளை வழங்குமாறு நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

தகவல் தொடர்பு புரட்சியின் இந்த சகாப்தத்தில், சீர்குலைவு சக்திகள் ஜனநாயகத்தை பலவீனப்படுத்தவும், சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்தவும் சதி செய்கின்றன.

இந்த சக்திகள் நாட்டிற்குள்ளும் உள்ளன, நாட்டிற்கு வெளியில் இருந்தும் செயல்படுகின்றன.

வதந்திகளைப் பரப்புதல், மக்களைத் தவறாக வழிநடத்துதல் மற்றும் தவறான தகவல்களைப் பரப்புதல் போன்றவற்றில் இந்த சக்திகள் ஈடுபடுகின்றன.

இந்த நிலைமை கட்டுப்பாடின்றி தொடர அனுமதிக்க முடியாது.

இன்று, தொழில்நுட்பம் ஒவ்வொரு நாளும் முன்னேறி வருகிறது.

அத்தகைய சூழ்நிலையில், மனிதகுலத்திற்கு எதிரான அதன் தவறான பயன்பாடு தீங்கு விளைவிக்கும்.

சர்வதேச மன்றங்களிலும் இந்தியா இந்த கவலைகளை வெளிப்படுத்தியுள்ளது மற்றும் உலகளாவிய கட்டமைப்பிற்காக வாதிட்டுள்ளது.

இந்தப் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்து, இந்த சவாலை எதிர்கொள்ள புதிய வழிகளைக் கண்டறிய வேண்டியது நமது கடமையாகும்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

27. 21-ஆம் நூற்றாண்டின் இந்த மூன்றாவது தசாப்தத்தில் உலகத் தர நிலை புதிய வடிவம் பெற்று வருகிறது.

எனது அரசின் முயற்சிகள் காரணமாக, விஸ்வ பந்து என்ற புதிய நம்பிக்கையை பாரதம் உலகிற்கு அளித்து வருகிறது.

மனித சமூகத்தை மையமாகக் கொண்ட அதன்அணுகுமுறை காரணமாக, இந்தியா இன்று எந்தவொரு நெருக்கடியிலும் முதலில் குரல் கொடுக்கும் நாடாக உள்ளது மற்றும் உலகளாவிய தெற்கின் வலுவான குரலாக மாறியுள்ளது.

கொரோனா நெருக்கடியாக இருந்தாலும் சரி, நிலநடுக்கமாக இருந்தாலும் சரி, போராக இருந்தாலும் சரி, மனிதகுலத்தைப் பாதுகாப்பதாக இருந்தாலும் சரி இந்தியா முன்னணியில் உள்ளது.

உலகம் இப்போது இந்தியாவை பார்க்கும் விதம் இத்தாலியில் நடைபெற்ற ஜி -7 உச்சிமாநாட்டின் போது தெளிவாகத் தெரிந்தது.

தனது ஜி -20 தலைமையின் போது இந்தியா பல்வேறு பிரச்சனைகளில் உலகை ஒன்றிணைத்தது.

இந்தியா தலைமை வகித்தபோதுதான் ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி-20 அமைப்பில் நிரந்தர உறுப்பினராக்கப்பட்டது.

இது ஆப்பிரிக்கா மற்றும் ஒட்டுமொத்த உலகளாவிய தெற்கின் நம்பிக்கையை பலப்படுத்தியுள்ளது.

அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையைப் பின்பற்றி, இந்தியா அண்டை நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தியுள்ளது.

ஜூன் 9 அன்று மத்திய அமைச்சரவையின் பதவியேற்பு விழாவில் ஏழு அண்டை நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றது, எனது அரசின் இந்த முன்னுரிமையை பிரதிபலிக்கிறது.

அனைவரும் இணைவோம்-அனைவரும் உயர்வோம் என்ற உணர்வின் அடிப்படையில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் இந்தியா ஒத்துழைப்பை அதிகரித்து வருகிறது.

கிழக்கு ஆசியாவாக இருந்தாலும் சரி, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவாக இருந்தாலும் சரி, எனது அரசு இணைப்புக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.

இந்தியாவின் தொலைநோக்குப் பார்வைதான் இந்தியா-மத்திய கிழக்கு- ஐரோப்பிய பொருளாதார வழித்தடத்திற்கு வடிவம் கொடுத்துள்ளது.

இந்த வழித்தடம் 21-ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய மாற்று சக்திகளில் ஒன்றாக நிரூபிக்கப்படும்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

28. இன்னும் சில மாதங்களில் குடியரசின் 75-வது ஆண்டை இந்தியா நிறைவு செய்யவிருக்கிறது.

இந்திய அரசியலமைப்பு கடந்த தசாப்தங்களில் ஒவ்வொரு சவாலையும் ஒவ்வொரு சோதனையையும் எதிர்த்து நின்றது.

அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்த காலத்திலேயே இந்தியா தோற்க வேண்டும் என்று விரும்பிய சக்திகள் உலகில் இருந்தன.

அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த பிறகும், அது பல முறை தாக்கப்பட்டது.

இன்று ஜூன் 27.

1975 ஜூன் 25 அன்று அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலை, அரசியலமைப்பின் மீதான நேரடித் தாக்குதலின் மிகப்பெரிய மற்றும் இருண்ட அத்தியாயமாகும்.

இதனால் நாடே கொதித்துப் போனது.

ஆனால் குடியரசின் பாரம்பரியம் இந்தியாவின் மையத்தில் இருப்பதால் அத்தகைய அரசியலமைப்பற்ற சக்திகளை எதிர்த்து நாடு வெற்றி பெற்றது.

எனது அரசும் இந்திய அரசமைப்புச் சட்டத்தை வெறும் ஆட்சி ஊடகமாகக் கருதவில்லை; மாறாக, நமது அரசியலமைப்புச் சட்டம், பொதுமக்களின் உணர்வின் ஒரு பகுதியாக மாறுவதை உறுதி செய்வதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

இந்த நோக்கத்தை மனதில் கொண்டு, எனது அரசு, நவம்பர் 26-ஆம் தேதியை அரசியலமைப்பு தினமாகக் கொண்டாடத் தொடங்கியுள்ளது.

இப்போது இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவின் காரணமாக நிலைமைகள் வேறுபட்டிருந்த பகுதியிலும் அரசியலமைப்பு முழுமையாக நடைமுறைக்கு வந்துள்ளது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

29. நமது பொறுப்புகளை நிறைவேற்றுவதில் நாம் காட்டும் நேர்மையைப் பொறுத்தே தேசத்தின் சாதனைகள் தீர்மானிக்கப்படுகின்றன.

18-வது மக்களவையில், பல புதிய உறுப்பினர்கள் முதல் முறையாக நாடாளுமன்ற அமைப்பின் ஒரு பகுதியாக மாறியுள்ளனர்.

பழைய உறுப்பினர்களும் புதிய உற்சாகத்துடன் திரும்பியுள்ளனர்.

தற்போதைய காலம் எல்லா வகையிலும் இந்தியாவுக்கு மிகவும் சாதகமானது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

வரும் ஆண்டுகளில், அரசு மற்றும் இந்திய நாடாளுமன்றத்தால் எடுக்கப்பட்ட முடிவுகள், கொள்கைகள் ஆகியவற்றை ஒட்டுமொத்த உலகமும் உன்னிப்பாக கவனிக்கும்.

இந்த சாதகமான நேரத்தில் நாட்டுக்கு உச்சபட்ச நன்மைகள் கிடைப்பதை உறுதி செய்வது, ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அரசின் பொறுப்பாகும்.

கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள், நாட்டில் ஏற்பட்டுள்ள புதிய நம்பிக்கை ஆகியவற்றின் மூலம், இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான புதிய உத்வேகத்தை நாம் பெற்றுள்ளோம்.

இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவது என்பது நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் லட்சியம் மற்றும் உறுதிப்பாடு என்பதை நாம் அனைவரும் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

இதை அடைவதற்கான வழியில் எந்த தடைகளும் வரக்கூடாது என்பதை உறுதிப்படுத்துவதும் நம் அனைவரின் பொறுப்பாகும்.

கொள்கைகளை எதிர்ப்பதும், நாடாளுமன்ற செயல்பாட்டிற்கு இடையூறு விளைவிப்பதும் இரண்டு வெவ்வேறு விஷயங்கள்.

நாடாளுமன்றம் தனது அலுவல்களை சுமூகமாக நடத்தும் போது, ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறும் போது, தொலைநோக்குப் பார்வை கொண்ட முடிவுகள் எடுக்கப்படும் போது, மக்களுக்கு அரசின் மீது மட்டுமல்ல, ஒட்டுமொத்த அமைப்பின் மீதும் நம்பிக்கை ஏற்படுகிறது.

எனவே, நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு தருணமும் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டு, பொது நலனுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று நான் நம்புகிறேன்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

30. நமது வேதங்களில், "சமனோ மந்திர: சமிதி: சமணி" என்ற கருத்தை நமது முனிவர்கள் நமக்கு உணர்த்தியுள்ளனர்.

அதாவது, நாம் ஒரு பொதுவான யோசனை மற்றும் இலக்குடன் ஒன்றிணைந்து செயல்படுகிறோம்.

இதுதான் இந்த நாடாளுமன்றத்தின் உணர்வு.

எனவே, இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும்போது, இந்த சாதனையில் நீங்களும் பங்குதாரர்களாக இருப்பீர்கள்.

2047-ல் நூற்றாண்டு சுதந்திர தினத்தை நாம் வளர்ந்த இந்தியாவாகக் கொண்டாடும் போது, இந்தத் தலைமுறைக்கும் பெருமை சேரும்.

இன்றைய நமது இளைஞர்களிடம் உள்ள ஆற்றல்,

இன்றைய நமது தீர்மானங்களில் நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பு,

சாத்தியமற்றதாகத் தோன்றும் நமது சாதனைகள்,

இவையனைத்தும் வரப்போகும் சகாப்தம் இந்தியாவின் சகாப்தம் என்பதற்குச் சான்றாக அமைகின்றன.

இந்த நூற்றாண்டு, இந்தியாவின் நூற்றாண்டு, இதன் தாக்கம் வரவிருக்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு நீடிக்கும்.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து, நமது கடமைகளில் முழு அர்ப்பணிப்புடன், தேசிய தீர்மானங்களை நிறைவேற்றுவதில் தீவிரமாக ஈடுபடுவோம், இந்தியாவை ஒரு வளர்ந்த தேசமாக மாற்றுவோம்.

உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்!

நன்றி

ஜெய் ஹிந்த்!

வாழ்க பாரதம்!

***

(Release ID: 2028957)

PKV/SMB/MM/BR/RR/KPG/RS/KV



(Release ID: 2029118) Visitor Counter : 61