பிரதமர் அலுவலகம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியில் பிஏபிஎஸ் (போச்சாசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் ஸ்வாமிநாராயண்) இந்து ஆலயத் திறப்பு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 14 FEB 2024 11:48PM by PIB Chennai

சுவாமி நாராயண் ஜெய தேவ் அவர்களே, மதிப்பிற்குரிய ஷேக் நஹ்யான் அல் முபாரக் அவர்களே, மதிப்பிற்குரிய மஹந்த் சுவாமிஜி மகராஜ் அவர்களே, இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ள சிறப்பு விருந்தினர்களே, உலகின் பல பகுதிகளில் இருந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள எனது சகோதர, சகோதரிகளே!

வணக்கம்,

இன்று, ஐக்கிய அரபு அமீரக  வரலாற்றில் ஒரு புதிய பொன்னான அத்தியாயத்தை எழுதியுள்ளது. அபுதாபியில் ஒரு பிரமாண்டமான மற்றும் தெய்வீகமான கோயில் திறக்கப்படுகிறது.  இது பல வருட கடின உழைப்பும், நீண்டகால கனவும் நிறைவேறுவதைக் குறிக்கிறது. பகவான் சுவாமி நாராயணரின் ஆசீர்வாதங்கள் இதற்கு காரணமாகும்.

சகோதர சகோதரிகளே,

இந்த ஆலய விஷயத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆதரவும் அமைச்சர் திரு  ஷேக் நஹ்யான் அல் முபாரக்கின் வருகையும் குறிப்பிடத்தக்க விஷயங்களாகும். இந்தக் கோயிலை நிர்மாணிப்பதில் ஐக்கிய அரபு அமீரக அரசு ஆற்றிய பங்கு பாராட்டத்தக்கதாகும்.  இந்த அற்புதமான கோயில் உருவாகும் கனவை நனவாக்கிய மிகப்பெரிய பெருமை எனது சகோதரர், திரு ஷேக் முகமது பின் சயீத்-தைத் தான் சாரும். அதிபர் ஷேக் முகமது பின் சயீத் தலைமையிலான ஒட்டுமொத்த ஐக்கிய அரபு அமீரக அரசு கோடிக்கணக்கான இந்தியர்களின் விருப்பங்களை முழு மனதுடன் நிறைவேற்றியுள்ளது. என்பதை நான் முழுமையாக அறிவேன். அதிபர் திரு ஷேக் முகமது பின் சயீத் 140 கோடி இந்தியர்களின் இதயங்களில் இடம் பிடித்துள்ளார். இந்த திட்டம் தொடங்கப்பட்டது முதல் அது நிறைவடையும் வரை இதனுடம் இணைந்திருந்தது எனது மிகப்பெரிய அதிர்ஷ்டம்.  

2015-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்துக்கு நான் பயணம் மேற்கொண்டபோது, அதிபர் திரு ஷேக் முகமதுவுடன் இந்தக் கோயில் குறித்து நான் விவாதித்தேன். இந்திய மக்களின் விருப்பங்களை அவரிடம் எடுத்துரைத்ததும், உடனடியாகவும் உற்சாகத்துடனும் என் யோசனையை அவர் ஏற்றுக்கொண்டார். ஆலயத்துக்காக ஒரு பெரிய நிலத்தை உடனடியாக ஒதுக்கி, தன்னுடைய அசைக்க முடியாத ஆதரவை அவர் வழங்கினார்.

நண்பர்களே,

இது சாதாரண விஷயமல்ல. இது ஒரு குறிப்பிடத்தக்க பணியாகும். பாரதத்துடனான ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த சகோதரத்துவ உணர்வு உண்மையில் நமது மிகப்பெரிய சொத்து. எதிர்காலத்தில் கணிசமான எண்ணிக்கையிலான பக்தர்கள் இங்கு வருவார்கள் என்று நான் நம்புகிறேன். இதன் விளைவாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கான பயணிகளின் வருகை அதிகரிக்கும் மற்றும் மக்களுக்கு இடையிலான தொடர்புகள் மேம்படும். பாரதம் மற்றும் உலகெங்கிலும் வசிக்கும் கோடிக்கணக்கான இந்தியர்களின் சார்பாக, அதிபர் திரு ஷேக் முகமது மற்றும் ஐக்கிய அரபு அமீரக அரசுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே

பாரதம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான நட்பு,  உலக அளவில் முன்மாதிரியாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளில், நமது உறவுகள் முன்னெப்போதும் இல்லாத உயரத்தை எட்டியுள்ளன. ஆனால், இந்த உறவுகளை தற்காலப் பின்னணியில் மட்டுமே பாரதம் பார்ப்பதில்லை. நம்மைப் பொறுத்தவரை, இந்த உறவுகளின் அடித்தளம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, அரபு உலகம், இந்தியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே ஒரு முக்கியமான வர்த்தக பாலமாக செயல்பட்டது. எனது சொந்த மாநிலமான குஜராத்தின் வர்த்தகர்களுக்கு அரபு உலகம்தான் வர்த்தக உறவுகளின் முதன்மையான மையமாக இருந்தது. எனவே, அபுதாபியில் கட்டப்பட்டுள்ள இந்த கோயில் நமது பண்டைய உறவுகளுக்கு புதிய கலாச்சார வலிமையை அளிக்கிறது.

நண்பர்களே,

அபுதாபியில் உள்ள பிரமாண்டமான கோயில் வெறும் வழிபாட்டுத் தலம் மட்டுமல்ல. இது மனிதகுலத்தின் பகிரப்பட்ட பாரம்பரியத்தின் அடையாளமாகும். இது பாரதம் மற்றும் அரேபிய மக்களுக்கு இடையிலான பரஸ்பர அன்பை எடுத்துரைப்பதுடன் பாரதம்-ஐக்கிய அரபு அமீரக உறவுகளின் ஆன்மீக பரிமாணத்தைப் பிரதிபலிக்கிறது.

நண்பர்களே,

இது பாரதத்தின் அமிர்த காலத்தின் நேரமாகும். இது நமது நம்பிக்கை மற்றும் கலாச்சாரத்தின் பொற்காலத்தையும் குறிக்கிறது. கடந்த மாதம்தான், அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கனவு நிறைவேறியது.

நண்பர்களே,

அயோத்தியில் நாம் அனுபவித்த ஆழ்ந்த மகிழ்ச்சி, இன்று அபுதாபியில் மேலும் செழுமைப்படுத்தப்பட்டுள்ளது. அயோத்தியில் உள்ள கம்பீரமான ராமர் கோவிலையும், இப்போது அபுதாபியில் இந்த கோவிலையும்  நேரில் பார்த்ததை  நான் அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன்.

நண்பர்களே,

நமது  அறிஞர்கள் ஒரே கடவுளை, ஒரே உண்மையை, பல வழிகளில் விளக்குகிறார்கள். இந்த தத்துவம் பாரதத்தின் மைய உணர்வில் பதிந்துள்ளது. எனவே, நாம் இயல்பாகவே அனைவரையும் அரவணைப்பது மட்டுமல்லாமல், அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். பன்முகத்தன்மையை பிரிவினைக்கான ஆதாரமாக அல்லாமல் தனித்துவமான பலமாக நாங்கள் பார்க்கிறோம். மனிதகுலத்தின் மீதான நமது நம்பிக்கையை இது பலப்படுத்துகிறது. இந்த கோவிலின் ஒவ்வொரு அடியிலும், பன்முகத்தன்மை மீதான நம்பிக்கையை நீங்கள் காண்பீர்கள்.  இந்து மதத்தின் சிலைகளுடன், எகிப்திய சித்திர எழுத்துக்கள், பைபிள் மற்றும் குரானின் அம்சங்கள் கோயில் சுவர்களை அலங்கரிக்கின்றன. இந்தக் கோயிலின் கட்டுமானத்திற்கு அனைத்து மதத்தினரும் பங்களித்துள்ளனர். இந்த உணர்வு இந்திய மக்களின் தன்மையைப் பிரதிபலிக்கிறது.  அபுதாபியில் உள்ள இந்த பகவான் சுவாமி நாராயணன் கோயில், வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருத்தாக்கத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தை அளித்துள்ளது.

நண்பர்களே,

இன்று, இந்த மகத்தான மற்றும் புனிதமான இடத்திலிருந்து, மற்றொரு நல்ல செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இன்று காலை, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணை அதிபர் ஷேக் முகமது பின் ரஷீத், துபாயில் இந்திய தொழிலாளர்களுக்கு மருத்துவமனை கட்ட நிலத்தை நன்கொடையாக அறிவித்தார். அவருக்கும், எனது சகோதரர் மேதகு ஷேக் முகமது பின் சயீத் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

"நமது எண்ணங்கள் ஒன்றிணைய வேண்டும், நமது மனங்கள் சங்கமிக்க வேண்டும், நமது தீர்மானங்கள் உறுதியாக இருக்க வேண்டும்" என வேதங்கள் சொல்கின்றன. மனித ஒற்றுமைக்கான இந்த அழைப்பு நமது ஆன்மீகத்தின் அடிப்படை சாரமாக அமைகிறது. நமது கோவில்கள் இந்த போதனைகள் மற்றும் தீர்மானங்களின் மையங்களாக செயல்படுகின்றன.   "வசுதைவ குடும்பகம்" –அதாவது  முழு பூமியும் நமது குடும்பம் என்ற தத்துவத்தை நமது வேதங்கள் நமக்குக் கற்பித்துள்ளன. இந்த கொள்கையால் வழிநடத்தப்படும் பாரதம் உலக அமைதியை மேம்படுத்த அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. இந்த முறை பாரதத்தின் தலைமையின் கீழ், ஜி-20 நாடுகள் மேலும் பலப்படுத்தப்பட்டு, 'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்ற உறுதிப்பாட்டை முன்னெடுத்துச் சென்றுள்ளன. நமது கலாச்சாரமும், நம்பிக்கையும் உலக நலனுக்காக பாடுபட நம்மை ஊக்குவிக்கின்றன. அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் முயற்சி, அனைவரின் நம்பிக்கை என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் பாரதம் செயல்பட்டு வருகிறது. அபுதாபி ஆலயம் நமது மனிதாபிமான தொலைநோக்கு தீர்மானங்களுக்கு புத்துயிர் அளித்து அவற்றை நடைமுறைப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி

பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் ஆற்றிய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்

***

(Release ID: 2006331)

AD/PLM/RR



(Release ID: 2016072) Visitor Counter : 33