பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மதுரையில் நடைபெற்ற 'எதிர்காலத்தை உருவாக்குதல் – வாகனத் தொழிலில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் இயக்கம்' நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்றார்

இந்திய வாகனத் துறையில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஆதரிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் உருவாக்கப்பட்ட இரண்டு முக்கிய முன்முயற்சிகள் தொடங்கப்பட்டன

"குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வாகனத் துறையை வளர்ச்சியடையச் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன - நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இவை இன்றியமையாதவை"

"வாகனத் தொழில் பொருளாதாரத்தின் ஒரு அதிகார மையமாகும்”

“நமது குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உலகளாவிய விநியோகச் சங்கிலியின் வலுவான பகுதியாக மாற சிறந்த வாய்ப்பைப் பெற்றுள்ளன"

"குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை தேசத்தின் எதிர்காலமாக நாடு பார்க்கிறது"

"மத்திய அரசு ஒவ்வொரு தொழில்துறைக்கும் உறுதுணையாக நிற்கிறது"

"புதுமை மற்றும் போட்டித்தன்மையை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும்- அரசு உங்களோடு இருக்கிறது"

Posted On: 27 FEB 2024 7:44PM by PIB Chennai

தமிழ்நாட்டின் மதுரையில் இன்று நடைபெற்ற 'வாகனத் தொழிலில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர்களுக்கான எதிர்காலத்தை உருவாக்குதல் – டிஜிட்டல் இயக்கம்' என்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்று, வாகனத் துறையில் உள்ள ஆயிரக்கணக்கான குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர் மத்தியில் உரையாற்றினார். காந்திகிராமத்தில் பயிற்சி பெற்ற பெண் தொழில்முனைவோர் மற்றும் பள்ளி மாணவர்களுடனும் பிரதமர் கலந்துரையாடினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புத் துறையைச் சேர்ந்த சிந்தனையாளர்கள் மத்தியில் உரையாற்றுவது மகிழ்ச்சி தரும் அனுபவம் என்று கூறினார். எதிர்காலத்தை வடிவமைக்கும் ஆய்வகத்திற்கு செல்வது போன்ற உணர்வு இது என்றும் அவர் குறிப்பிட்டார். தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை, குறிப்பாக வாகனத் துறையில், உலக அரங்கில் தமிழ்நாடு தனது திறமையை நிரூபித்துள்ளது என்று அவர் சுட்டிக் காட்டினார். இந்த நிகழ்ச்சியின் கருப்பொருள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர், அனைத்து  குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஒரே மேடையில் ஒன்றிணைத்த டிவிஎஸ் நிறுவனத்தைப் பாராட்டினார்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீதம் மோட்டார் வாகனத் தொழிலிலிருந்து வருகிறது என்றும், இது நாட்டின் தற்சார்பில் முக்கிய அங்கமாக உள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். உற்பத்தி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதில் மோட்டார் வாகனத் துறையின் பங்கையும் பிரதமர் பாராட்டினார்.

மோட்டார் வாகனத் தொழிலில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு மிகச் சிறப்பாக உள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 45 லட்சத்துக்கும் அதிகமான கார்கள், 2 கோடி இருசக்கர வாகனங்கள், 10 லட்சம் வர்த்தக வாகனங்கள் மற்றும் 8.5 லட்சம் மூன்று சக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்றார். ஒவ்வொரு வாகனத்திலும் 3000 முதல் 4000 பாகங்கள் பயன்படுத்தப்படுவதைக் குறிப்பிட்ட அவர், உற்பத்தி செயல்பாட்டில் ஒவ்வொரு நாளும் இதுபோன்ற லட்சக்கணக்கான பாகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்றார். இந்த பாகங்களின் உற்பத்திக்கு இந்தியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று கூறிய பிரதமர், இந்தியாவின் பெரும்பாலான முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை நகரங்களில் இந்த நிறுவனங்கள் இருப்பதைக் குறிப்பிட்டார்.

இன்று நமது குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் வலுவான அங்கமாக மாறுவதற்கான சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது என்று கூறிய பிரதமர், தரம் மற்றும் நீடித்த உழைப்பின் அவசியத்தை வலியுறுத்தினார். சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை உள்ளடக்கிய வகையில் 'குறைபாடு இல்லாத உற்பத்திப் பொருட்கள்' என்ற தமது கொள்கையை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

பெருந்தொற்றுக் காலத்தில் இந்தியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் திறனைப் பாராட்டிய பிரதமர் இந்த நிறுவனங்களை தேசத்தின் எதிர்காலமாக நாடு பார்க்கிறது என்று கூறினார். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டுக்கு அரசு மேற்கொண்டு வரும் பன்முக முயற்சிகளை விளக்கிய பிரதமர், பிரதமரின் முத்ரா திட்டம் உள்ளி்ட்டவற்றைக் குறிப்பிட்டார். குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டம் தொற்றுநோய் காலத்தின் போது இத்துறையில் லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளைக் காப்பாற்றியது என்று தெரிவித்தார்.

ஒவ்வொரு துறையிலும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் கடன்கள் மற்றும் நடைமுறை மூலதனத்திற்கான வசதிகள் உறுதி செய்யப்படுவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். நாட்டின் சிறு தொழில் நிறுவனங்களை மேம்படுத்த அரசு அளிக்கும் முக்கியத்துவமும் பலப்படுத்தும் காரணியாக உள்ளது என்று அவர் தெரிவித்தார். புதிய தொழில்நுட்பம் மற்றும் திறன்களுக்கான தேவையை இன்றைய அரசு கவனத்தில் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.  எதிர்காலத்தை வடிவமைப்பதில் திறன் மேம்பாட்டின் பங்கை சுட்டிக் காட்டிய பிரதமர், திறன் மேம்பாட்டுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக கூறினார். இந்த ஆட்சியில் திறன் மேம்பாட்டுக்காக புதிய அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.  

மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருவதற்கேற்ப தொழில்முனைவோர் தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.

வாகனங்கள் மற்றும் வாகன பாகங்களுக்கான ரூ.26,000 கோடி மதிப்புள்ள உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டம் குறித்தும் பிரதமர் பேசினார். இது வாகன உற்பத்தியுடன் ஹைட்ரஜன் வாகனங்களையும் ஊக்குவிக்கிறது என்று அவர் தெரிவித்தார். இதன் மூலம் 100-க்கும் மேற்பட்ட வாகன மேம்பாட்டுத் தொழில்நுட்பங்கள் ஊக்குவிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். நாட்டில் புதிய தொழில்நுட்பங்கள் வளரும்போது, அந்தத் தொழில்நுட்பங்களுக்கான உலகளாவிய முதலீடும் இந்தியாவுக்கு வரும் என்று  பிரதமர் தெரிவித்தார்.

சில சவால்களும் இருப்பதாக கூறியப் பிரதமர், அவற்றை வாய்ப்புகளாக மாற்ற சரியான உத்தியுடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான வரையறையில் திருத்தம் கொண்டு வருவது போன்ற முறைப்படுத்தும் நடவடிக்கைகளை பிரதமர் சுட்டிக்காட்டினார்.

மத்திய அரசு இன்று ஒவ்வொரு தொழில்துறைக்கும் உறுதுணையாக நிற்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். முன்பு, ஒரு தொழில்துறையாக இருந்தாலும் சரி அல்லது தனிநபராக இருந்தாலும் சரி, சிறிய விஷயங்களுக்கு கூட அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியிருந்தது என்று கூறிய அவர், ஆனால் இன்றைய அரசு அனைத்து பிரச்சினைகளுக்கும் எளிதில் தீர்வு வழங்கி வருவதாக கூறினார்.

புதிய சரக்கு போக்குவரத்து கொள்கையாக இருந்தாலும் சரி, சரக்கு மற்றும் சேவை வரியாக இருந்தாலும் சரி, இவை அனைத்தும் மோட்டார் வாகனத் துறையில் உள்ள சிறு தொழில்களுக்கு உதவியுள்ளன என்று பிரதமர் கூறினார். பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டத்தை உருவாக்கியதன் மூலம் இந்தியாவில் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு அரசு ஊக்கத்தை வழங்கியுள்ளது என்று அவர் கூறினார். புதுமை மற்றும் போட்டித்தன்மையை இந்த தொழில் துறையினர் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும், இதில் அரசு  ஆதரவை வழங்கும் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.

பழைய வாகனங்கள் அழிப்புத் தொடர்பான அரசின் கொள்கையையும் அவர் எடுத்துரைத்தார். கப்பல் கட்டமைப்பில் புதுமையான வழிகள் மற்றும் அதன் பாகங்களை மறுசுழற்சி செய்வதற்கான சந்தை ஆகியவை குறித்தும் பிரதமர்  பேசினார். ஓட்டுநர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து குறிப்பிட்ட அவர்,, நெடுஞ்சாலையில் ஓட்டுநர்களின் வசதிக்காக 1,000 மையங்களை உருவாக்கப்படுவதையும்  அவர் குறிப்பிட்டார். நாட்டை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்வது தொடர்பான வாகன தொழில் துறையினரின் திட்டங்களுக்கு அரசு துணை நிற்கும் என்று கூறி  பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.

மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன், டிவிஎஸ் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் திரு ஆர் தினேஷ் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பின்னணி

'வாகனத்துறையில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர  தொழில்முனைவோருக்கு எதிர்காலத்தை உருவாக்குதல் – டிஜிட்டல் இயக்கம்' என்ற நிகழ்ச்சியில் மதுரையில் பங்கேற்ற பிரதமர், வாகனத் துறையில் உள்ள ஆயிரக்கணக்கான குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் மத்தியில் உரையாற்றினார். இந்திய வாகனத் துறையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை ஆதரிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் உருவாக்கப்பட்ட இரண்டு முக்கிய முன்முயற்சிகளையும் பிரதமர் தொடங்கி வைத்தார். டிவிஎஸ் ஓபன் மொபிலிட்டி பிளாட்ஃபார்ம் மற்றும் டிவிஎஸ் மொபிலிட்டி-சிஐஐ சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் ஆகியவை இந்த முயற்சிகளில் அடங்கும்.

      

 

      

***

(Release ID: 2009538)

ANU/AD/PLM/RS/KRS


(Release ID: 2009591) Visitor Counter : 155