பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கிரீஸ் பிரதமரின் இந்திய பயணத்தின் போது அவருடன் இணைந்து நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம் (பிப்ரவரி 21, 2024)

Posted On: 21 FEB 2024 3:18PM by PIB Chennai

மரியாதைக்குரிய கிரீஸ் பிரதமர் மிட்ஸோடாகிஸ் அவர்களே,

இரு நாடுகளின் பிரதிநிதிகளே,

ஊடக நண்பர்களே,

வணக்கம்!

பிரதமர் மிட்சோடாகிஸ் மற்றும் அவரது குழுவினரை இந்தியாவுக்கு வரவேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த ஆண்டு நான் கிரீஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட நிலையில், அவரது இந்த இந்தியப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும். பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு, கிரீஸ் நாட்டுப் பிரதமர் இந்தியாவுக்கு வந்திருப்பது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும்.

நண்பர்களே,

இன்று நாம் நடத்திய விவாதங்கள் மிகவும் முக்கியமானவையாகவும், பயனுள்ளவையாகவும் இருந்தன. 2030 ஆம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்கும் இலக்கை நோக்கி நாம் வேகமாக முன்னேறி வருகிறோம் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நமது ஒத்துழைப்புக்கு புதிய சக்தியை அளிக்க பல புதிய வாய்ப்புகளை அடையாளம் கண்டுள்ளோம். வேளாண் துறையில் இரு நாடுகளுக்கும் இடையே நெருங்கிய ஒத்துழைப்புக்கான பல வாய்ப்புகள் உள்ளன. கடந்த ஆண்டு எட்டப்பட்ட ஒப்பந்தங்களை அமல்படுத்த இரு தரப்பினரும் நடவடிக்கை எடுத்து வருவது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். மருந்து, மருத்துவ சாதனங்கள், தொழில்நுட்பம், புதுமைக் கண்டுபிடிப்பு, திறன் மேம்பாடு மற்றும் விண்வெளி போன்ற பல துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க நாங்கள் விரும்புகிறோம்.

இரு நாடுகளின் புத்தொழில் நிறுவனங்கள் இணைந்து செயல்படுவது குறித்தும் விவாதித்தோம். கப்பல் போக்குவரத்து மற்றும்  போக்குவரத்து இணைப்பு ஆகியவை இரு நாடுகளுக்கும் முக்கியமானவையாக உள்ளன. இந்த துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் நாங்கள் விவாதித்தோம்.

நண்பர்களே,

ராணுவம் மற்றும் பாதுகாப்பில் வளர்ந்து வரும் ஒத்துழைப்பு நமது ஆழமான பரஸ்பர நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. இந்தத் துறையில் பணிக்குழு அமைக்கப்படுவதன் மூலம், பாதுகாப்பு, இணைய பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, கடல்சார் பாதுகாப்பு போன்ற பொதுவான சவால்களில் பரஸ்பர ஒருங்கிணைப்பை அதிகரிக்க முடியும். இந்தியாவில் பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் கூட்டு உற்பத்தி மற்றும் கூட்டு மேம்பாட்டுக்கான புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இது இரு நாடுகளுக்கும் பயனளிக்கும். இரு நாடுகளின் பாதுகாப்புத் தளவாட தொழிற்சாலைகள் இணைந்து செயல்பட நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கும் கிரீஸுக்கும் பொதுவான கவலைகளும், முன்னுரிமைகளும் உள்ளன. இதில் நமது ஒத்துழைப்பை எவ்வாறு மேலும் வலுப்படுத்துவது என்பது குறித்து நாங்கள் விரிவாக விவாதித்தோம்.

நண்பர்களே,

இரண்டு பழமையான மற்றும் பெரிய நாகரிகங்கள் என்ற வகையில், இந்தியாவும் கிரீஸும் ஆழமான கலாச்சார மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகளின் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளன. சுமார் 2,500 ஆண்டுகளாக இரு நாட்டு மக்களும் வர்த்தகம் மற்றும் கலாச்சார உறவுகளையும், கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டு வந்துள்ளனர்.

இந்த உறவுகளுக்கு நவீன வடிவம் கொடுப்பதற்கான பல புதிய முயற்சிகளை இன்று நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். இரு நாடுகளுக்கும் இடையிலான இடப்பெயர்வு மற்றும் போக்குவரத்து கூட்டு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை விரைவில் நிறைவேற்றுவது குறித்து நாங்கள் விவாதித்தோம். இது நமது மக்களுக்கு இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தும்.

இரு நாடுகளின் உயர்கல்வி நிறுவனங்களுக்கு இடையே ஒத்துழைப்பை மேம்படுத்தவும் நாங்கள் வலியுறுத்தினோம். இந்தியாவுக்கும் கிரீஸுக்கும் இடையிலான தூதரக உறவுகளின் 75-வது ஆண்டு நிறைவை அடுத்த ஆண்டு கொண்டாடுவதற்கு ஒரு செயல் திட்டத்தை தயாரிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். இதன் மூலம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு, விளையாட்டு மற்றும் பிற துறைகளில் இரு நாடுகளின் பொதுவான பாரம்பரியம் மற்றும் சாதனைகளை உலக அரங்கில் வெளிப்படுத்த முடியும்.

நண்பர்களே,

இன்றைய கூட்டத்தில், பல பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம். அனைத்து சர்ச்சைகளும் பதட்டங்களும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கிரீஸின் தீவிர பங்கேற்பு மற்றும் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை நாங்கள் வரவேற்கிறோம். இந்தோ-பசிபிக் பெருங்கடல் முன்முயற்சியில் சேர கிரீஸ் முடிவு செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. கிழக்கு மத்திய தரைக்கடல் பிராந்தியத்தில் ஒத்துழைப்புக்கான உடன்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் ஜி20 தலைமையின் போது தொடங்கப்பட்ட இந்தியா-மத்திய கிழக்கு- ஐரோப்பா பொருளாதார வழித்தடம், நீண்ட கால அடிப்படையில் மனிதகுலத்தின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும்.

இந்த முயற்சியில் கிரீஸ் முக்கியப் பங்குதாரராக  இருக்க முடியும். ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இதர சர்வதேச அமைப்புகளை தற்காலத்திற்கேற்ப மாற்ற வேண்டும் என நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். உலக அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு இந்தியாவும் கிரீஸும் தொடர்ந்து பங்களிக்கும்.

மரியாதைக்குரிய கிரீஸ் அதிபர் அவர்களே,

நீங்கள் ரைசினா மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளீர்கள். அதில் உங்கள் உரையைக் கேட்க நாங்கள் அனைவரும் ஆவலாக உள்ளோம். உங்களது இந்திய வருகைக்கும், பயனுள்ள விவாதத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொறுப்புத் துறப்பு - இது பிரதமர் ஆற்றிய உரையின் உத்தேசமான மொழிப்பெயர்ப்பாகும். பிரதமர்  தமது உரையை  இந்தியில் வழங்கியிருந்தார்.

***

ANU/AD/PLM/RS/DL

 


(Release ID: 2007834) Visitor Counter : 99