மத்திய அமைச்சரவை

மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

Posted On: 08 FEB 2024 9:04PM by PIB Chennai

மீன்வள உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியை 2025-26 வரை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மீன்வளத் துறைக்கான உள்கட்டமைப்புத் தேவையை சரி செய்வதற்காக, மத்திய அரசு 2018-19 ஆம் ஆண்டில் ரூ.7522.48 கோடி மொத்த நிதி அளவுடன் மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்தை (எஃப்.ஐ,டி,எஃப்) உருவாக்கியது. 2018-19 முதல் 2022-23 வரையிலான காலகட்டத்தில், 5588.63 கோடி ரூபாய் முதலீட்டில் மொத்தம் 121 மீன்வள உட்கட்டமைப்பு திட்டங்களுக்குப் பல்வேறு மீன்வள உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  மீன்பிடித்  துறைமுகங்கள், மீன் இறங்கு தளங்கள், பனிக்கட்டி தொழிற்சாலைகள், குளிர்பதனக் கிடங்குகள், ஒருங்கிணைந்த குளிர்பதனத் தொடர், நவீன மீன் அங்காடிகள், சினை மீன் வங்கிகள், குஞ்சு பொரிப்பகங்கள், நீர்வாழ் உயிரின வளர்ப்பு மேம்பாடு, மீன்விதைப் பண்ணைகள், அதிநவீன மீன்வளப் பயிற்சி மையங்கள், மீன் பதனிடும் அலகுகள், மீன் தீவனத் தொழிற்சாலைகள், நீர்த்தேக்கங்களில் கூண்டுகளில் மீன்வளர்ப்பு, ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள், நோய் கண்டறியும் ஆய்வகங்கள், போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு இந்த  அறிவிப்பு உதவிகரமாக இருக்கும்.

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்டு), தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் (என்.சி.டி.சி) மற்றும் அனைத்துப் பொதுத்துறை வங்கிகள் மூலம் அடையாளம் காணப்பட்ட மீன்வள உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக மாநில அரசுகள் / யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட தகுதிவாய்ந்த நிறுவனங்களுக்கு சலுகை நிதியை எஃப்.ஐ,டி,எஃப் தொடர்ந்து வழங்கும். தொழில்முனைவோர், தனிநபர் விவசாயிகள் மற்றும் கூட்டுறவுகளின் திட்டங்களுக்கு, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின் உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில் ஏற்கனவே உள்ள கடன் உத்தரவாத நிதியிலிருந்து மத்திய அரசு கடன் உத்தரவாத வசதியை வழங்குகிறது.

***

(Release ID: 2004221)

ANU/SMB/BR/RR



(Release ID: 2004334) Visitor Counter : 62