பிரதமர் அலுவலகம்
காமன்வெல்த் சட்டக் கல்விச் சங்க காமன்வெல்த் தலைமை வழக்கறிஞர்கள் மற்றும் தலைமைச் சட்ட ஆலோசகர்கள் மாநாடு 2024-ஐ பிரதமர் தொடங்கி வைத்தார்
"அற்புதமான இந்தியாவை முழுமையாகக் காணுமாறு அனைத்து சர்வதேச விருந்தினர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்"
"இந்தியாவின் தலைமையின் போது ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி 20 இன் ஒரு பகுதியாக மாறியதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்"
"நீதி என்பது சுதந்திரமான சுயாட்சியின் வேரில் உள்ளது, நீதி இல்லாமல், ஒரு தேசத்தின் இருப்பு கூட சாத்தியமில்லை"
"நாம் ஒத்துழைக்கும்போது, ஒருவருக்கொருவர் அமைப்புகளை நன்கு புரிந்து கொள்ள முடியும். அதிக புரிதல் அதிக ஒத்திசைவைக் கொண்டு வருகிறது. இணைந்து பணியாற்றுவது சிறந்த மற்றும் விரைவான நீதி வழங்கலை ஊக்குவிக்கிறது"
"21 ஆம் நூற்றாண்டின் பிரச்சினைகளை 20 ஆம் நூற்றாண்டு அணுகுமுறையுடன் கையாள முடியாது. மறுபரிசீலனை, மறுகற்பனை மற்றும் சீர்திருத்த வேண்டிய அவசியம் உள்ளது"
"நீதி வழங்கலை அதிகரிப்பதில் சட்டக் கல்வி ஒரு முக்கிய கருவியாகும்"
"தற்போதைய யதார்த்தங்களைப் பிரதிபலிக்கும் வகையில் இந்தியாவும் சட்டங்களை நவீனமயமாக்குகிறது"
"அனைவருக்கும் சரியான நேரத்தில் நீதி கிடைக்கும் மற்றும் யாரும் பின்தங்
Posted On:
03 FEB 2024 12:11PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று காமன்வெல்த் சட்டக் கல்விச் சங்கத்தின் – காமன்வெல்த் தலைமை வழக்கறிஞர்கள் மற்றும் தலைமைச் சட்ட ஆலோசகர்கள் மாநாடு 2024-ஐ தொடங்கி வைத்தார். "நீதி வழங்குவதில் எல்லை தாண்டிய சவால்கள்" என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த மாநாட்டில், நீதித்துறை மாற்றம் மற்றும் சட்ட நடைமுறையின் நெறிமுறை பரிமாணங்கள் போன்ற சட்டம் மற்றும் நீதி, நிர்வாக பொறுப்பு; மற்றும் நவீன கால சட்டக் கல்வியை மறுபரிசீலனை செய்தல் தொடர்பான முக்கியமான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும்;
கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், உலகெங்கிலும் உள்ள முன்னணி சட்ட வல்லுநர்கள் பங்கேற்ற காமன்வெல்த் சட்டக் கல்விச் சங்கத்தின்– காமன்வெல்த் தலைமை வழக்கறிஞர்கள் மற்றும் தலைமைச் சட்ட ஆலோசகர்கள் மாநாட்டை தொடங்கி வைப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். 1.4 பில்லியன் இந்திய குடிமக்களின் சார்பாக அனைத்து சர்வதேச விருந்தினர்களையும் வரவேற்றார். "அற்புதமான இந்தியாவை முழுமையாகக் காண வேண்டும் என உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் குறிப்பிட்டார்..
இந்த மாநாட்டில் ஆப்பிரிக்க பிரதிநிதிகள் கலந்து கொண்டதை சுட்டிக்காட்டிய பிரதமர், ஆப்பிரிக்க யூனியனுடன் இந்தியாவின் சிறப்பான உறவை எடுத்துரைத்தார். இந்தியா தலைமையில் ஆப்பிரிக்க யூனியன் ஜி20 அமைப்பின் ஒரு பகுதியாக மாறியது குறித்து பெருமிதம் தெரிவித்தார். ஆப்பிரிக்க மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற இது பெரிதும் உதவும் என்று அவர் கூறினார்.
கடந்த சில மாதங்களாக உலகெங்கிலும் உள்ள சட்ட சகோதரர்களுடன் தான் கலந்துரையாடியதை நினைவுகூர்ந்த பிரதமர், சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற உச்சநீதிமன்றத்தின் வைரவிழா கொண்டாட்டங்கள் மற்றும் செப்டம்பர் மாதம் பாரத மண்டபத்தில் நடைபெற்ற சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாடு ஆகியவற்றைப் பற்றியும் குறிப்பிட்டார். இத்தகைய கலந்துரையாடல்கள் நீதி அமைப்பின் பணிகளைக் கொண்டாடுவதற்கான ஒரு ஊடகமாக மாறும் என்றும், சிறந்த மற்றும் திறமையான நீதி வழங்கலுக்கான வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்திய சிந்தனைகளில் நீதியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், அதாவது நீதி என்பது சுதந்திரமான சுயராஜ்யத்தின் அடிநாதம், நீதி இல்லாமல் ஒரு தேசத்தின் இருப்பு கூட சாத்தியமில்லை என்பதாகும்.
இன்றைய மாநாட்டின் மையக்கருத்தான "நீதி வழங்குவதில் எல்லை தாண்டிய சவால்கள்" பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், வேகமாக மாறிவரும் இன்றைய உலகில் இந்தத் தலைப்பின் பொருத்தத்தை வலியுறுத்தியதுடன், நீதி வழங்குவதை உறுதி செய்ய பல்வேறு நாடுகள் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தையும் குறிப்பிட்டார்.
"நாம் ஒத்துழைக்கும்போது, ஒருவருக்கொருவர் அமைப்பை நன்கு புரிந்து கொள்ள முடியும்" என்று கூறிய பிரதமர், "அதிக புரிதல் அதிக ஒத்துழைப்பைக் கொண்டுவருகிறது, இணைந்து செயல்படுவது சிறந்த மற்றும் விரைவான நீதி வழங்கலை ஊக்குவிக்கிறது." எனவே, இதுபோன்ற மேடைகள் மற்றும் மாநாடுகள் முக்கியமானவை என்று பிரதமர் மோடி கூறினார்.
வான்வழி மற்றும் கடல்சார் போக்குவரத்துக் கட்டுப்பாடு போன்ற அமைப்புகளின் ஒத்துழைப்பு மற்றும் ஒன்றையொன்று சார்ந்திருப்பது பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், புலனாய்வு மற்றும் நீதி வழங்குவதில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த வேண்டியது அவசியம் என்றார்.
ஒருவருக்கொருவர் அதிகார வரம்பை மதிக்கும் அதே வேளையில், ஒத்துழைப்பு ஏற்பட முடியும் என்று அவர் சுட்டிக் காட்டினார், ஏனெனில் நாம் ஒன்றிணைந்து பணியாற்றும்போது, நீதியை தாமதிக்காமல் வழங்குவதற்கான ஒரு கருவியாக அதிகார வரம்பு மாறும்.
சமீப காலங்களில் குற்றங்களின் தன்மை மற்றும் நோக்கத்தில் ஏற்பட்டுள்ள தீவிர மாற்றங்களை சுட்டிக் காட்டிய பிரதமர் மோடி, உலகம் முழுவதும் குற்றவாளிகள் பரந்த கட்டமைப்புகள் மூலம் , நிதி மற்றும் செயல்பாடுகளில் சமீபத்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருவதைப் பற்றி கவலை தெரிவித்தார்.
ஒரு பிராந்தியத்தில் நடைபெறும் பொருளாதார குற்றங்கள் மற்றப் பிராந்தியங்களில் நடவடிக்கைகளுக்கு நிதியளிக்க பயன்படுத்தப்படுகின்றன என்ற உண்மையையும், கிரிப்டோகரன்சி மற்றும் சைபர் அச்சுறுத்தல்களின் எழுச்சியின் சவால்களையும் அவர் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
21-ம் நூற்றாண்டின் பிரச்சினைகளை 20-ம் நூற்றாண்டின் அணுகுமுறையுடன் தீர்க்க முடியாது என்று வலியுறுத்திய பிரதமர், சட்ட முறைகளை நவீனமயமாக்குவது உட்பட மறுபரிசீலனை, மறுகற்பனை மற்றும் சீர்திருத்தங்களின் அவசியத்தை சுட்டிக்காட்டினார்.
நீதி வழங்கலின் தூணாக எளிதான நீதி விளங்குவதால், நீதி அமைப்பை மேலும் மக்களை மையமாகக் கொண்டதாக மாற்றாமல் சீர்திருத்தங்களை மேற்கொள்ள முடியாது என்று பிரதமர் உறுதிபடத்தெரிவித்தார்.
குஜராத் முதல்வராக தாம் இருந்த காலத்தை நினைவு கூர்ந்த பிரதமர், மாலை நேர நீதிமன்றங்களை அமைத்ததன் மூலம் பொதுமக்கள் தங்கள் பணி நேரத்திற்குப் பிறகு விசாரணைகளில் கலந்து கொள்ள முடிந்தது - இது நீதியை வழங்கியது, இதனால் நேரமும் பணமும் மிச்சப்படுத்தப்பட்டது, நூற்றுக்கணக்கான மக்களுக்கு பயனளித்தது என்றார்.
லோக் அதலாத் அல்லது 'மக்கள் நீதிமன்றம்' பற்றி விளக்கிய பிரதமர், பொது பயன்பாட்டு சேவைகள் தொடர்பான சிறிய வழக்குகளுக்கு தீர்வு காணும் நடைமுறையை இந்த நீதிமன்றம் வழங்குகிறது என்றும், நீதி வழங்குவதை எளிமையாக உறுதி செய்யும் அதே வேளையில், ஆயிரக்கணக்கான வழக்குகளுக்கு தீர்வு காணும் வகையில், வழக்குக்கு முந்தைய சேவையாகவும் இது உள்ளது என்றும் கூறினார். உலகிற்கு பெரும் மதிப்பு சேர்க்கும் இதுபோன்ற முன்முயற்சிகள் குறித்து விவாதங்களை நடத்த வேண்டும் என்று அவர் ஆலோசனை கூறினார்.
"நீதி கிடைப்பதை ஊக்குவிப்பதில் சட்டக் கல்வி முக்கிய கருவியாக உள்ளது" என்று கூறிய பிரதமர், கல்வியின் மூலம் இளம் உள்ளங்களுக்கு ஆர்வம் மற்றும் தொழில்முறை திறன் ஆகிய இரண்டும் அறிமுகப்படுத்தப்படுகின்றன என்று குறிப்பிட்டார்.
ஒவ்வொரு களத்திலும் பெண்களின் திறனை உணர்ந்து கொள்வதற்கான நுண்ணறிவுகளை வழங்கிய பிரதமர் மோடி, ஒவ்வொரு துறையையும் கல்வி மட்டத்தில் உள்ளடக்கியதாக மாற்ற வேண்டும் என்று பரிந்துரைத்தார். சட்டக் கல்லூரிகளில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பது சட்டத் தொழிலில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வழிவகுக்கும் என்று அவர் கூறினார். சட்டக் கல்விக்கு அதிகமான பெண்களை எவ்வாறு கொண்டு வரலாம் என்பது குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும் அவர் பரிந்துரைத்தார்.
மாறுபட்ட அனுபவம் கொண்ட இளம் சட்ட மேதைகளின் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், மாறிவரும் காலங்கள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப சட்டக் கல்வி தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். குற்றங்களின் சமீபத்திய போக்குகள், புலனாய்வு மற்றும் ஆதாரங்களைப் புரிந்துகொள்வதில் கவனம் செலுத்துவது உதவியாக இருக்கும் என்று அவர் கூறினார்.
அதிக சர்வதேச வெளிப்பாட்டுடன் இளம் சட்ட வல்லுநர்களுக்கு உதவ வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த பிரதமர் மோடி, நாடுகளுக்கு இடையிலான பரிமாற்ற திட்டங்களை வலுப்படுத்த சட்ட பல்கலைக்கழகங்களுக்கு அழைப்பு விடுத்தார். இந்தியாவில் அமைந்துள்ள தடய அறிவியலுக்காக அர்ப்பணிக்கப்பட்ட உலகின் ஒரே ஒரு பல்கலைக்கழகத்தை உதாரணமாக சுட்டிக்காட்டிய பிரதமர், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், சட்ட ஆசிரியர்கள் மற்றும் நீதிபதிகள் கூட இங்கு குறுகிய படிப்புகளை ஆராய உதவுமாறு பரிந்துரைத்தார்.
நீதி வழங்கல் தொடர்பான பல சர்வதேச நிறுவனங்களில் அதிக பிரதிநிதித்துவத்தைப் பெற வளரும் நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார், அதே நேரத்தில் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப்களைக் கண்டுபிடிப்பதில் உதவுவதன் மூலம் சர்வதேச சிறந்த நடைமுறைகளிலிருந்து சட்ட அமைப்புகள் கற்றுக்கொள்ள உதவுகிறது.
இந்தியாவின் சட்ட அமைப்பு காலனித்துவ காலத்திலிருந்து மரபுரிமையாக வந்தது என்று பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார், ஆனால் கடந்த சில ஆண்டுகளில் சாதனை எண்ணிக்கையிலான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
காலனிய காலத்திலிருந்த ஆயிரக்கணக்கான காலாவதியான சட்டங்கள் நீக்கப்பட்டதைக் குறிப்பிட்ட அவர், அவற்றில் சில மக்களை துன்புறுத்தும் கருவிகளாக மாறும் திறன் கொண்டவை என்றும், இவை வாழ்க்கையை எளிதாக்குவதையும், வர்த்தகம் செய்வதை எளிதாக்குவதையும் ஊக்குவித்துள்ளன என்றும் குறிப்பிட்டார்.
"தற்போதைய யதார்த்தங்களை பிரதிபலிக்கும் வகையில் இந்தியாவும் சட்டங்களை நவீனப்படுத்தி வருகிறது" என்று கூறிய திரு மோடி, 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான காலனித்துவ குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக 3 புதிய சட்டங்கள் வந்துள்ளன என்று குறிப்பிட்டார்.
"முன்னதாக, தண்டனை அம்சங்களில் கவனம் செலுத்தப்பட்டது. இப்போது, நீதியை உறுதி செய்வதில் கவனம் செலுத்தப்படுகிறது. எனவே, மக்களுக்கு பயத்தை விட உறுதியான உணர்வு உள்ளது" என்று அவர் குறிப்பிட்டார்.
நீதி அமைப்புகளிலும் தொழில்நுட்பம் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை சுட்டிக் காட்டிய பிரதமர், கடந்த சில ஆண்டுகளில், இடங்களை வரைபடமாக்குவதற்கும், கிராமப்புற மக்களுக்கு தெளிவான சொத்து அட்டைகளை வழங்குவதற்கும், தகராறுகளைக் குறைப்பதற்கும், வழக்குகளுக்கான சாத்தியக்கூறுகளைக் குறைப்பதற்கும், நீதி அமைப்பில் சுமை குறைப்பதற்கும் இந்தியா ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தியுள்ளது என்று கூறினார்.
டிஜிட்டல் மயமாக்கல் நாட்டின் பல நீதிமன்றங்கள் ஆன்லைனில் நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவியது, இது தொலைதூர இடங்களிலிருந்து கூட மக்களுக்கு நீதியை அணுக உதவியது என்று அவர் கூறினார். இந்த விஷயத்தில் தான் கற்றுக்கொண்ட விஷயங்களை மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதில் இந்தியா மகிழ்ச்சியடைகிறது என்றும், மற்ற நாடுகளிலும் இதே போன்ற முயற்சிகள் குறித்து அறிய நாங்கள் ஆர்வமாக உள்ளோம் என்றும் கூறினார்.
தமது உரையை நிறைவு செய்த பிரதமர், நீதிக்கான பேரார்வம் என்ற ஒரே பகிரப்பட்ட மதிப்பை நாடுகளிடையே பகிர்ந்து கொண்டால், நீதி வழங்குவதில் உள்ள ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்ள முடியும் என்று உறுதிபடக் கூறினார்.
"இந்த மாநாடு இந்த உணர்வை வலுப்படுத்தட்டும். ஒவ்வொருவருக்கும் உரிய நேரத்தில் நீதி கிடைக்கும் வகையிலும், யாரும் பின்தங்கி விடாத வகையிலும் உலகை நாம் உருவாக்குவோம்" என்று திரு. மோடி தமது உரையை நிறைவு செய்தார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் , மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், அட்டர்னி ஜெனரல் நீதிபதி சூர்ய காந்த், மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் டாக்டர் ஆர்.வெங்கடரமணி , மத்திய சட்ட கல்வி சங்கத்தின் தலைவர் பேராசிரியர் டாக்டர் எஸ்.சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னணி
இந்த மாநாட்டில் ஆசிய-பசிபிக், ஆப்பிரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளை உள்ளடக்கிய நாடுகளின் சர்வதேச பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கலந்துரையாடலுக்கான ஒரு மன்றத்தை வழங்குவதன் மூலம் இந்த மாநாடு ஒரு தனித்துவமான தளமாக செயல்படுகிறது. சட்டக் கல்வி மற்றும் நாடுகடந்த நீதி வழங்கலில் உள்ள சவால்களை எதிர்கொள்ள ஒரு விரிவான திட்டத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட தலைமை வழக்கறிஞர்கள் மற்றும் தலைமைச் சட்ட ஆலோசகர்களைக் கொண்ட வடிவமைக்கப்பட்ட ஒரு பிரத்யேக வட்ட மேசை மாநாடும் இதில் அடங்கும்.
----
ANU/PKV/BS/DL
(Release ID: 2002251)
Visitor Counter : 85
Read this release in:
Kannada
,
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Malayalam