பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இடைக்கால பட்ஜெட் 2024 குறித்த பிரதமரின் உரை

Posted On: 01 FEB 2024 1:52PM by PIB Chennai

எனது நாட்டு மக்களே,

இன்றைய பட்ஜெட், இடைக்கால பட்ஜெட் என்றாலும், அனைவரையும் உள்ளடக்கிய, புதுமையான பட்ஜெட்டாக உள்ளது. இந்த பட்ஜெட் தொடர்ச்சியின் நம்பிக்கையைக் கொண்டுள்ளது. இந்த பட்ஜெட் 'வளர்ச்சியடைந்த பாரதத்தின்' நான்கு தூண்களான இளைஞர்கள், ஏழைகள், பெண்கள் மற்றும் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும். திருமதி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் நாட்டின் எதிர்காலத்தை கட்டமைப்பதற்கான பட்ஜெட். இந்த பட்ஜெட் 2047-ம் ஆண்டுக்குள் 'வளர்ச்சியடைந்த பாரதத்தின்' அடித்தளத்தை வலுப்படுத்தும் என்ற உத்தரவாதத்தைக் கொண்டுள்ளது. திருமதி நிர்மலா சீதாராமனுக்கும், அவரது குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

இந்த பட்ஜெட் பாரத இளைஞர்களின் விருப்பங்களைப் பிரதிபலிக்கிறது. பட்ஜெட்டில் இரண்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளுக்காக ரூ.1 லட்சம் கோடி நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தொழில் நிறுவனங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்ற அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது.

நண்பர்களே,

இந்த பட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் அதே வேளையில், மூலதன செலவினங்களுக்காக வரலாற்று நடவடிக்கையாக ரூ.11 லட்சத்து 11 ஆயிரத்து 111 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொருளாதார நிபுணர்களின் பார்வையில், இது இனிமையான பகுதியாகும். இது இந்தியாவில் 21 -ம் நூற்றாண்டின் நவீன உள்கட்டமைப்பை உருவாக்க வழிவகுக்கும் என்பது மட்டுமின்றி, இளைஞர்களுக்கு எண்ணற்ற புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். 'வந்தே பாரத் தரம்' திட்டத்தின் கீழ் 40,000 நவீன பெட்டிகள் தயாரிக்கப்பட்டு, அவற்றை வழக்கமான பயணிகள் ரயில்களில் இணைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் உள்ள பல்வேறு ரயில் பாதைகளில் லட்சக்கணக்கான பயணிகளுக்கு வசதியான பயண அனுபவத்தை மேம்படுத்தும்.

நண்பர்களே,

நாங்கள் ஒரு பெரிய இலக்கை நிர்ணயிக்கிறோம், அதை அடைகிறோம், பின்னர் இன்னும் பெரிய இலக்கை நமக்காக நிர்ணயிக்கிறோம். கிராமங்கள், நகரங்களில் உள்ள ஏழைகளுக்காக 4 கோடிக்கும் அதிகமான வீடுகளை நாங்கள் கட்டியுள்ளோம். இப்போது மேலும் 2 கோடி புதிய வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயித்துள்ளோம். 2 கோடி பெண்களை 'லட்சாதிபதி மகளிர்’ ஆக்குவதே எங்கள் ஆரம்ப இலக்காக இருந்தது. தற்போது, இந்த இலக்கு, 3 கோடி 'லட்சாதிபதி மகளிர்’ ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஏழைகளுக்கு பெரிதும் உதவியுள்ளது. இப்போது, அங்கன்வாடி, ஆஷா பணியாளர்களும் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைவார்கள்.

நண்பர்களே,

இந்த பட்ஜெட்டில், ஏழை, நடுத்தர மக்களுக்கு அதிகாரம் அளித்தல், அவர்களுக்குப் புதிய வருவாய்க்கான வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றுக்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மேற்கூரை சூரிய சக்தி இயக்கத்தின் கீழ், ஒரு கோடி குடும்பங்கள் மேற்கூரை சூரிய சக்தித் தகடுகள் மூலம் இலவச மின்சாரத்தைப் பெறும். இது மட்டுமின்றி, உபரி மின்சாரத்தை அரசிற்கு விற்பனை செய்வதன் மூலம் மக்கள் ஆண்டுக்கு 15 முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை கூடுதல் வருவாயையும் பெறுவார்கள். இந்த வருவாய் அனைத்துக் குடும்பத்திற்கும் கிடைக்கும்.

நண்பர்களே,

வருமான வரி குறைப்பு திட்டம் இன்று அறிவிக்கப்பட்டிருப்பது சுமார் ஒரு கோடி நடுத்தர வர்க்கத் தனிநபர்களுக்குக் குறிப்பிடத்தக்க நிவாரணத்தை அளிக்கும். முந்தைய அரசுகள் பல பத்தாண்டுகளாக சாமானிய மக்களின் மீது அச்சுறுத்தும் சுமையை ஏற்றியிருந்தனர். இந்த பட்ஜெட்டில்  இன்று விவசாயிகளுக்கு முக்கியமான, குறிப்பிடத்தக்க முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன. நானோ டிஏபி, கால்நடைகளுக்கான புதிய திட்டம், பிரதமரின் மீன் வளர்ப்பு மேம்பாட்டுத் திட்ட விரிவாக்கம் அல்லது தற்சார்பு எண்ணெய் விதை இயக்கம் என எதுவாக இருந்தாலும், விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும். மேலும், செலவுகளும் கணிசமாகக் குறையும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பட்ஜெட்டுக்காக மீண்டும் ஒருமுறை மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிகவும் நன்றி.

***

(Release ID: 2001237)

ANU/SMB/IR/AG/KRS


(Release ID: 2001604) Visitor Counter : 181