பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின் பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்

நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின் பயனாளிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்

"'நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரை' அரசுத் திட்டங்களை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துகிறது"

"விடுபட்ட பயனாளிகளைத் தொடர்ந்து தேடிக் கொண்டிருக்கிறேன்"

"மோடி அரசு உத்தரவாத வாகனம் எங்கு சென்றாலும் அது மக்களின் நம்பிக்கையை அதிகரித்து அவர்களின் நம்பிக்கையை நிறைவேற்றுகிறது"

"2 கோடி லட்சாதிபதி மகளிரை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளேன்"

"'ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு' திட்டம் பலரது வாழ்வில் வளம் சேர்க்கும்"

"இந்தியாவில் கிராமப்புற வாழ்க்கையின் வலுவான அம்சமாக கூட்டுறவுகள் உருவெடுக்க வேண்டும் என்பதே எங்கள் முயற்சி"

Posted On: 27 DEC 2023 3:45PM by PIB Chennai

நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின் பயனாளிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.

நாடு முழுவதிலுமிருந்து, நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின் ஆயிரக்கணக்கான பயனாளிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இதில் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், "வளர்ந்த இந்தியாவின் உறுதியுடன் இணைவதற்கான இந்த இயக்கம் தொடர்ந்து விரிவடைந்து வருவதாகக் கூறினார். நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரை தொடங்கி 50 நாட்கள் கூட ஆகவில்லை. ஆனால் இதுவரை இந்த யாத்திரை 2.25 லட்சம் கிராமங்களை சென்றடைந்துள்ளது. இது ஒரு சாதனை." இதை வெற்றியடையச் செய்த அனைவருக்கும், குறிப்பாக பெண்கள்,  இளைஞர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக கூறினார். " நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின் நோக்கம், சில காரணங்களால், மத்திய அரசின் திட்டங்களின் பயன் மறுக்கப்பட்ட நபர்களை சென்றடைவதாகும்" என்று அவர் கூறினார். அரசின் திட்டங்கள் எந்தவிதமான   பாரபட்சமும் இல்லாமல் அனைவருக்கும் கிடைக்கின்றன என்பதை உறுதி செய்வதற்காகவே இந்த ஆக்கப்பூர்வமான மக்கள் தொடர்பு என்று பிரதமர் கூறினார். "விடுபட்ட பயனாளிகளை நான் தேடுகிறேன்", என்று அவர் மேலும் கூறினார். பயனாளிகளிடம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நம்பிக்கை இருப்பதாக குறிப்பிட்ட பிரதமர், "நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு பயனாளிக்கும்  கடந்த 10 ஆண்டுகளில் அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து ஒரு கதை உள்ளது என்றும், அது துணிச்சல் மிகுந்த கதை" என்றும் தெரிவித்தார்.

இந்த சலுகைகள் பயனாளிகளின் வாழ்க்கையை இன்னும் சிறப்பாக்கத் தூண்டுகின்றன என்று பிரதமர் கூறினார். "இன்று, நாட்டின் லட்சக்கணக்கான பயனாளிகள் அரசுத் திட்டங்களை முன்னோக்கி செல்வதற்கான ஊடகமாக பயன்படுத்துகின்றனர்" என்று அவர் கூறினார்.

மோடி அரசின் உத்தரவாதம் வாகனம் எங்கு சென்றாலும் அது மக்களின் நம்பிக்கையை அதிகரித்து அவர்களின் நம்பிக்கையை நிறைவேற்றுகிறது என்று கூறினார். நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின் காலத்தில் இலவச  எரிவாயு இணைப்புக்கு 4.5 லட்சம் புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. 1 கோடி ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 1.25 கோடி சுகாதார பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. 70 லட்சம் பேருக்கு காசநோய் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, மேலும் 15 லட்சம் அரிவாள் செல் ரத்த சோகை சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார். "இது நாடு முழுவதும் சுகாதாரம் குறித்த புதிய விழிப்புணர்வை பரப்பும்" என்று அவர் கூறினார்.

பல புதிய பயனாளிகள் பயன்களைப் பெறுவதாக சுட்டிக்காட்டிய பிரதமர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளின் பொறுப்பை வலியுறுத்தினார். மேலும் கிராமம், வட்டம், நகரம்  தகுதியான ஒவ்வொரு நபரையும் அடையாளம் காணுமாறு கேட்டுக்கொண்டார்.

கிராமப்புற பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில், கிராமங்களில் உள்ள பெண்களுக்கு சுயவேலைவாய்ப்பு வழங்கும் மாபெரும் இயக்கத்தை மத்திய அரசு நடத்தி வருகிறது. கடந்த ஆண்டுகளில், நாட்டில் சுமார் 10 கோடி சகோதரிகள், மகள்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களில் சேர்ந்துள்ளனர். இந்த சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு வங்கிகள் ரூ. 7.5 லட்சம் கோடிக்கு மேல் உதவி செய்துள்ளன. "இந்த இயக்கத்தை மேலும் விரிவுபடுத்த, அடுத்த மூன்று ஆண்டுகளில் 2 கோடி லட்சாதிபதி மகளிரை உருவாக்க தாம் இலக்கு நிர்ணயித்துள்ளதாக" பிரதமர் கூறினார். கிராமப்புற பெண்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் ட்ரோன் மகளிர் திட்டம் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

சிறு விவசாயிகளை ஒருங்கிணைப்பதற்கான இயக்கம் குறித்து விளக்கிய பிரதமர், வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள், தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்கள் போன்ற கூட்டுறவு நிறுவனங்கள் குறித்து பேசினார். "இந்தியாவில் கிராமப்புற வாழ்க்கையின் ஒரு வலுவான அம்சமாக ஒத்துழைப்பு உருவெடுக்க வேண்டும் என்பதே அரசின் முயற்சி என்று அவர் தெரிவித்தார். பால், கரும்புத் துறைகளில் ஒத்துழைப்பின் நன்மைகள்  தற்போது மற்ற வேளாண் துறைகளுக்கும், மீன் உற்பத்தி போன்ற துறைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு வருவதாக கூறினார். வரும் காலங்களில் 2 லட்சம் கிராமங்களில் புதிய தொடக்க வேளாண் கடன் சங்கங்களை உருவாக்கும் இலக்குடன்  அரசு முன்னேறி வருவதாக தெரிவித்தார். பால்பண்ணை, சேமிப்பு ஆகிய கூட்டுறவுப் பணிகளை ஊக்குவிப்பதற்கான முன்மொழிவுகள் குறித்தும் அவர் தெரிவித்தார்.  "உணவு பதப்படுத்துதல் துறையில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட குறுந்தொழில்களை வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று அவர் மேலும் கூறினார்.

ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்புத் திட்டம் குறித்தும் பேசிய பிரதமர், 'உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஆதரவு' திட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மோடி அரசு உத்தரவாத வாகனம் உள்ளூர் தயாரிப்புகளைப் பற்றி மக்களுக்குத் தெரிவிக்கிறது என்றும், இந்த தயாரிப்புகளை அரசு மின் கொள்முதல் இணையதளத்திலும் பதிவு செய்யலாம் என்றும் அவர் கூறினார். மோடி அரசு உத்தரவாத வாகனத்தின் தொடர்ச்சியான வெற்றியை எதிர்பார்ப்பதாக  கூறிப் பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

பின்னணி

நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரை 2023 நவம்பர் 15 அன்று தொடங்கப்பட்டதிலிருந்து, நாடு முழுவதும் உள்ள நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின் பயனாளிகளுடன் பிரதமர் தொடர்ந்து உரையாடி வருகிறார்.  இந்த கலந்துரையாடல் மூன்று முறை காணொலி காட்சி மூலம் (நவம்பர் 30, டிசம்பர் 9 மற்றும் டிசம்பர் 16) நடந்துள்ளது. மேலும், பிரதமர் அண்மையில் வாரணாசிக்கு சென்ற போது தொடர்ந்து இரண்டு நாட்கள் (டிசம்பர் 17-18) நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரை பயனாளிகளுடன் நேரடியாக உரையாடியுள்ளார்.

அரசின் முக்கிய திட்டங்களின் பலன்கள் உரிய காலத்தில் அனைத்து பயனாளிகளுக்கும் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில் நாடு முழுவதும் நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

***

(Release ID: 1990785)

ANU/SMB/IR/AG/KRS


(Release ID: 1991026) Visitor Counter : 149