பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

வளர்ச்சியடைந்த இந்தியா லட்சியப் பயணம் (நகர்ப்புறம்) நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 16 DEC 2023 7:38PM by PIB Chennai

அனைவருக்கும் வணக்கம்!

'வளர்ச்சியடைந்த இந்தியா' என்ற தீர்மானத்துடன் மோடியின் வாகனம் நாட்டின் ஒவ்வொரு மூலையையும் சென்றடைகிறது. இந்த 'யாத்திரை' தொடங்கி ஒரு மாதம் ஆகிவிட்டது, இது ஏற்கனவே ஆயிரக்கணக்கான கிராமங்களையும் ஆயிரத்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட நகரங்களையும் சென்றடைந்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்கள் ஆகும். நான் முன்பே குறிப்பிட்டது போல, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் இந்த 'யாத்திரை' இன்று முதல் தொடங்கியுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக இந்த மாநிலங்களில் இந்த 'யாத்திரை'யை தொடங்க முடியவில்லை. இந்த மாநிலங்களில் உள்ள புதிய அரசுகள் அந்தந்த மாநிலங்களில் 'வளர்ச்சியடைந்த இந்தியா லட்சிய யாத்திரை'யை விரைவாக விரிவுபடுத்த வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

நண்பர்களே

'வளர்ச்சியடைந்த இந்தியா லட்சிய யாத்திரையை மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தாலும், இந்த 'யாத்திரை'யை நாட்டு மக்கள் இப்போது கையில் எடுத்துள்ளனர் என்பதே உண்மை. 'யாத்திரை' எங்கு முடிந்தாலும், பிற கிராமங்கள் அல்லது நகரங்களைச் சேர்ந்தவர்கள் அதை வழிநடத்தத் தொடங்குகிறார்கள். 'மோடியின் உத்தரவாத வாகனத்தை' வரவேற்க மக்கள் புதிய வழிகளைப் பயன்படுத்துவதால் அதை வரவேற்க பெரும் போட்டி நடந்து வருவதாக நான் அறிந்தேன்.  இளைஞர்கள் செல்ஃபி எடுப்பது, வாகனத்துடன் செல்ஃபி எடுப்பது, பதிவேற்றுவது போன்றவற்றை பரவலாகப் பயன்படுத்துவதை நான் பார்த்திருக்கிறேன். மேலும் பலர் 'வளர்ச்சியடைந்த இந்தியா' அமைப்பின் தூதர்களாகி வருகின்றனர். நமோ செயலியைப் பதிவிறக்கம் செய்வதன் மூலம் 'வளர்ச்சியடைந்த இந்தியா' அமைப்பின் தூதராகும் திட்டம் உள்ளது. அதில் அனைவரும் இணைந்து வருகின்றனர். கிராமமாக இருந்தாலும் சரி, நகரமாக இருந்தாலும் சரி, விநாடி வினா போட்டி, கேள்வி பதில்களுடன் கூடிய நிகழ்ச்சியில், ஏராளமானோர் பங்கேற்கின்றனர். இது, அறிவை அதிகரிப்பதோடு, தகவல்களையும் வழங்குகிறது. இந்தப் போட்டியிலும் மக்கள் கலந்து கொள்கின்றனர். இப்போட்டிகள் மூலம், மக்கள் பரிசுகளை வெல்வது மட்டுமல்லாமல், புதிய அறிவைப் பெற்று மற்றவர்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.

 

நண்பர்களே

இந்த 'யாத்திரை' தொடங்கியதில் இருந்து, நான் அதனுடன் இணைந்திருப்பது இது நான்காவது முறையாகும். முந்தைய நிகழ்ச்சிகளில், நான் பெரும்பாலும் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களுடன் உரையாடினேன். பிரதமரின் விவசாயிகள் கௌரவிப்பு நிதி, இயற்கை விவசாயம் குறித்த விவாதங்கள் அல்லது கிராமப்புற பொருளாதாரத்தின் பல்வேறு பரிமாணங்கள் பற்றி, நமது கிராமங்களை மேம்படுத்துவது தொடர்பான பல தலைப்புகளில் நான் விவாதித்தேன். இந்த உரையாடல்களின் போது அவர்கள் சிக்கலான விவரங்களைப் பகிர்ந்து கொண்டனர். அதேசமயம்  அரசின்  திட்டங்கள் கிராமங்களுக்கும் ஏழைகளின் வீடுகளுக்கும் சென்றடைவதைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இன்றைய நிகழ்ச்சியில், நகர்ப்புறங்களை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்கின்றனர். எனவே, இந்த முறை, நகர்ப்புற மேம்பாடு தொடர்பான பிரச்சினைகளில் எனது கவனம் இருந்தது, மேலும் நான் நடத்திய உரையாடல்களும் அந்த தலைப்புகளைச் சுற்றியே இருந்தன.

 

எனது குடும்ப உறுப்பினர்களே,

நூற்றுக்கணக்கான சிறிய நகரங்கள்தான் 'வளர்ச்சியடைந்த இந்தியா' என்ற மகத்தான கட்டமைப்பிற்கு வலு சேர்க்கின்றன. அம்ருத் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் சிறு நகரங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நகரங்களில் நீர் வழங்கல், வடிகால் மற்றும் கழிவுநீர் அமைப்புகள், போக்குவரத்து அமைப்புகள் மற்றும் சி.சி.டி.வி கேமராக்களின் வலையமைப்பை தொடர்ந்து மேம்படுத்துவதே இதன் நோக்கம். இதனால் ஏழை, நடுத்தர மக்கள், சமீபத்தில் வறுமையில் இருந்து மீண்டவர்கள், உருவாகி வரும் புதிய நடுத்தரக் குடும்பம், வசதியான குடும்பங்கள் என அனைவரும்  அதிகரித்து வரும் வசதிகளால் பயனடைந்து வருகின்றனர்.

 

எனது குடும்ப உறுப்பினர்களே,

வண்டிகளிலும், கடைகளிலும், நடைபாதைகளிலும் வேலை செய்யும் எங்கள் நண்பர்கள் அனைவரும் நம்பிக்கை இழந்தனர். தங்களுக்கு நல்லது எதுவும் நடக்காது என்று அவர்கள் நினைத்தார்கள்.  இந்த நண்பர்களை முதன்முறையாக வங்கி அமைப்புடன் இணைக்கும் பாக்கியம் எங்கள் அரசுக்குக் கிடைத்தது. இன்று, இந்த நண்பர்கள் பிரதமர் ஸ்வநிதி திட்டத்தின் மூலம் வங்கிகளில் இருந்து மலிவான மற்றும் எளிதான கடன்களைப் பெறுகிறார்கள். நாட்டில் இதுபோன்ற 50 லட்சத்துக்கும் மேற்பட்ட நண்பர்கள் வங்கிகளின் உதவியைப் பெற்றுள்ளனர். இந்த 'யாத்திரை'யின் போது கூட, சுமார் 1.25 லட்சம் நண்பர்கள் பிரதமரின் ஸ்வநிதி திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளனர். பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் பயனாளிகளில் 75 சதவீதத்திற்கும் அதிகமானோர் தலித், பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடி சமூகங்களைச் சேர்ந்தவர்கள். பயனாளிகளில் 45 சதவீதம் பேர் சகோதரிகள். அதாவது, வங்கிக் கணக்கு தொடங்க எந்த உத்தரவாதமும் இல்லாதவர்கள் இப்போது மோடியின் உத்தரவாதத்தால் பயனடைந்து வருகின்றனர்.

 

நண்பர்களே,

வேலை தேடி கிராமங்களில் இருந்து புலம் பெயர்ந்து வரும் ஏழை சகோதர, சகோதரிகள் எதிர்கொள்ளும் சவால்களை எங்கள் அரசு புரிந்து கொண்டுள்ளது. பிற மாநில நகரங்களில் தங்கள் கிராமத்தின் ரேஷன் கார்டு செல்லுபடியாகாது என்ற பிரச்சினையை பலர் எதிர்கொண்டனர். அதனால்தான் ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை  திட்டத்தை மோடி அறிமுகப்படுத்தினார். இப்போது, எந்தவொரு குடும்பமும், ஒரு கிராமத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, நகரத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, தங்கள் தேவைகளுக்கு ஒரே குடும்ப அட்டையைப் பயன்படுத்தலாம்.

நகரங்களில் உள்ள ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு ஒரு சிறந்த வாழ்க்கையை வழங்க, மற்றொரு குறிப்பிடத்தக்க முன்முயற்சி திறமையான பொது போக்குவரத்து அமைப்பு ஆகும். கடந்த 10 ஆண்டுகளில் நவீன பொது போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் ஈடு இணையற்றது. 10 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில், மெட்ரோ சேவைகள் 15 புதிய நகரங்களுக்கு விரிவடைந்துள்ளன, தற்போது, மெட்ரோ சேவைகள் 27 நகரங்களில் செயல்படுகின்றன அல்லது கட்டுமானத்தில் உள்ளன.

 

எனது குடும்ப உறுப்பினர்களே,

கிராமத்தில் உள்ள ஏழைகள் முதல் நகரின் குடிசைப் பகுதிகளில் உள்ளவர்கள் வரை அரசின் அனைத்து சலுகைகளையும் எந்தவித இடையூறும் இல்லாமல் உறுதி செய்ய நான் கடமைப்பட்டுள்ளேன். அதனால்தான் மோடியின் உத்தரவாதத்தால் இயங்கும் இந்த வாகனம் உங்களுக்கானது. எனவே, முடிந்தவரை இதில் இணைந்து, இந்த திட்டத்தை வெற்றிகரமாக்குங்கள். இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் 2047-ம் ஆண்டில் நாடு வளர்ச்சி அடையும். இந்த உணர்வை நாம் உருவாக்க வேண்டும். நாங்கள் எல்லாவற்றையும் சரியாகச் செய்வோம், நாட்டை சிறப்பாக்குவோம். இந்த மனநிலையைத்தான் நாம் கடைப்பிடிக்க வேண்டும். இந்த 'யாத்திரை', இந்த வாகனம், இந்தத் தீர்மானம் சாதகமான சூழலை உருவாக்க மிகவும் உதவியாக இருக்கும். உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

நன்றி!

*******


ANU/PKV/SMB/DL


(Release ID: 1987423) Visitor Counter : 89