பிரதமர் அலுவலகம்

மஹாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் ரூ.7500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்தத் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்

சுகாதாரம், ரயில், சாலை, எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளிட்டத் துறைகளில் வளர்ச்சித் திட்டங்கள்

ஸ்ரீ சாய்பாபா சமாதி கோவிலில் புதிய தரிசன வரிசை வளாகம் திறப்பு

நில்வாண்டே அணையின் இடது கரை கால்வாய் கட்டமைப்பை அர்ப்பணித்தார்

விவசாயிகளுக்கான நிதி ஆதரவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார்

ஆயுஷ்மான் அட்டை, ஸ்வமித்வா அட்டைகளை பயனாளிகளுக்கு வழங்கினார்

"நாடு வறுமையில் இருந்து விடுபட்டு, ஏழைகளுக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கும்போதுதான் சமூக நீதியின் உண்மையான அர்த்தம்"

"ஏழைகளுக்கு உணவுப் பொருட்கள் அளித்தல், இரட்டை என்ஜின் அரசின் மிக உயர்ந்த முன்னுரிமை"

"விவசாயிகளுக்கு அதிகாரமளிக்க அரசு உறுதிபூண்டுள்ளது"

"கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்த நமது அரசு செயல்பட்டு வருகிறது"

"மகாராஷ்டிரா மகத்தான திறன்கள் மற்றும் சாத்தியக்கூறுகளின் மையமாக உள்ளது"

"மகாராஷ்டிராவின் வளர்ச்சியைப் போலவே இந்தியாவும் விரைவாக வளர்ச்சியடையும்"

Posted On: 26 OCT 2023 5:23PM by PIB Chennai

மஹாராஷ்டிரா மாநிலம், அகமதுநகர், ஷீரடியில் சுகாதாரம், ரயில், சாலை, எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற துறைகளில் சுமார் ரூ.7500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். பல்வேறு  மேம்பாட்டுத் திட்டங்களில் அகமதுநகர் சிவில் மருத்துவமனையில் உள்ள ஆயுஷ் மருத்துவமனை, குர்துவாடி-லாத்தூர் சாலை ரயில் பிரிவு மின்மயமாக்கல் (186 கி.மீ), ஜல்கானிலிருந்து  பூசாவலை (24.46 கி.மீ) இணைக்கும் 3 -வது மற்றும் 4 -வது ரயில் பாதைகள்; தேசிய நெடுஞ்சாலை 166-ல்  சாங்லி முதல் போர்கான் வரையிலான நான்கு வழிச்சாலை (தொகுப்பு-1); மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மன்மத் முனையத்தில் கூடுதல் வசதிகள். அகமதுநகர் அரசு மருத்துவமனையில் தாய் -சேய் நலப் பிரிவுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். பயனாளிகளுக்கு ஆயுஷ்மான் அட்டைகள் மற்றும் ஸ்வமித்வா அட்டைகளையும் திரு மோடி வழங்கினார்.

நில்வாண்டே அணையின் இடது கரை (85 கி.மீ) கால்வாய் கட்டமைப்பை நாட்டுக்கு அர்ப்பணித்து ஷீரடியில் தரிசனம் செய்வதற்கான புதிய வரிசை வளாகத்தை திரு மோடி திறந்து வைத்தார். மேலும் 86 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடையும் வகையில் விவசாயிகளுக்கான நிதி ஆதரவுத் திட்டத்தையும்  தொடங்கி வைத்தார்.

முன்னதாக, ஷீரடி சாய்பாபா சமாதி கோயிலில் பூஜை மற்றும் தரிசனம் செய்த பிரதமர் மோடி, நில்வாண்டே அணையின் ஜல பூஜையையும் செய்தார்.

கூட்டத்தில் பேசிய பிரதமர், சாய்பாபாவின் ஆசியுடன் ரூ.7500 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டு வருவதாக தெரிவித்தார். 50 வருடங்களாக  நிலுவையில் இருந்த நில்வாண்டே அணையின் பணிகள் குறித்து குறிப்பிட்ட பிரதமர், அதன் திறப்பு விழா குறித்து இன்று குறிப்பிட்டார். அந்த இடத்தில் ஜல பூஜை செய்ய வாய்ப்பு கிடைத்ததற்கும் அவர் நன்றி தெரிவித்தார். ஸ்ரீ சாய்பாபா சமாதி கோவிலில் உள்ள தரிசனத்திற்கான புதிய வளாகம் குறித்து பேசிய திரு மோடி, 2018-ம் ஆண்டு அக்டோபரில் அடிக்கல் நாட்டியது குறித்து தெரிவித்தார், மேலும் இது உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் யாத்ரீகர்களின் வசதியை மேலும் அதிகரிக்கும் என்று கூறினார்.

வார்காரி சமூகத்தைச் சேர்ந்த  பாபா மகாராஜ் சதார்கரின் மறைவு குறித்து பிரதமர் இன்று காலை குறிப்பிட்டார். பாபா மகாராஜுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர், கீர்த்தனை மற்றும் பிரவாச்சனின் சமூக விழிப்புணர்வு பணிகளை நினைவு கூர்ந்தார், இது வரும் தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்கும் என்று கூறினார்.

"நாடு வறுமையில் இருந்து விடுபட்டு, ஏழைகளுக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கும் போதுதான் சமூக நீதியின் உண்மையான அர்த்தம்" என்று குறிப்பிட்ட பிரதமர், 'அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம்' என்ற அரசின் தாரக மந்திரத்தை மீண்டும் வலியுறுத்தினார்ஏழைகளின் நலனே இரட்டை இயந்திர அரசின் மிக உயர்ந்த முன்னுரிமை என்பதை சுட்டிக் காட்டிய பிரதமர், நாட்டின் பொருளாதாரம் விரிவடைந்து வருவதால் அதற்கான நிதிநிலையை அதிகரிப்பது குறித்தும் தெரிவித்தார். மகாராஷ்டிராவில் ரூ .5 லட்சம் வரை சுகாதார காப்பீட்டை பெறும் பயனாளிகளுக்கு 1 கோடியே 10 லட்சம் ஆயுஷ்மான் அட்டைகளை விநியோகிப்பதாகவும், அம்மாநில அரசு ரூ .70,000 கோடி செலவிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஏழைகளுக்கு இலவச ரேஷன் வழங்குவதற்கும், அவர்களுக்கு பக்கா வீடுகள் கட்டுவதற்கும் தலா ரூ.4 லட்சம் கோடிக்கு மேல் அரசு செலவழித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 2014 ஆம் ஆண்டுக்கு முந்தைய காலகட்டத்தில் இருந்ததை விட இந்த செலவு ஆறு மடங்கு அதிகம் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். ஏழைகளின் வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்க, அரசு ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் செலவு செய்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார். பிரதமரின் சாலையோர வியாபாரிகள் நலத்திட்டத்தின் கீழ், சாலையோர வியாபாரிகளுக்கு ஆயிரக்கணக்கான ரூபாய் வரை உதவி கிடைக்கிறது என்று அவர் தெரிவித்தார். தச்சர்கள், பொற்கொல்லர்கள், மண்பாண்ட தொழிலாளர்கள் மற்றும் சிற்பிகளின் லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு ரூ .13,000 கோடிக்கு மேல் அரசு செலவில் உதவும் வகையில் புதிதாக தொடங்கப்பட்ட பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தையும் திரு மோடி குறிப்பிட்டார்.

சிறு விவசாயிகளைப் பற்றி பேசிய பிரதமர், பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு நிதியின் கீழ் சிறு விவசாயிகளுக்கு 2 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்துள்ளது என்றும், இதில் மகாராஷ்டிராவின் சிறு விவசாயிகளுக்கு 26 ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மகாராஷ்டிரா அரசு விவசாயிகளுக்கான நிதி ஆதரவு திட்டத்தை தொடங்கியுள்ளதன் மூலம், மகாராஷ்டிரா விவசாய குடும்பங்களுக்கு கூடுதலாக 6000 ரூபாய் கிடைக்கும். அதாவது உள்ளூர் சிறு விவசாயிகளுக்கு 12,000 ரூபாய் வேளாண் நிதி கிடைக்கும் என்று அவர் கூறினார்.

1970-ம் ஆண்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டு 50 வருடங்களாக நிலுவையில் இருந்த நில்வாண்டே திட்டம் குறித்து சுட்டிக்காட்டிய பிரதமர், தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்த பின்னரே அது நிறைவு பெற்றது என்று எடுத்துரைத்தார். "விவசாயிகளின் பெயரால் வாக்கு அரசியல் செய்பவர்கள் ஒவ்வொரு சொட்டு தண்ணீருக்காகவும் உங்களை ஏங்க வைத்துள்ளனர்" என்று குறுப்பிட்ட அவர், "இன்று இங்கு ஜல பூஜை நடத்தப்பட்டது" என்று கூறினார். வலது கரை கால்வாய் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்று அவர் குறிப்பிட்டார். மாநிலத்தின் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சிறந்ததாக விளங்கும் பலிராஜா ஜல சஞ்சீவனி திட்டத்தையும் அவர் குறிப்பிட்டார். மகாராஷ்டிராவில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள மேலும் 26 நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு செயல்பட்டு வருவதாகவும், இது இப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு பெரும் பயனளிக்கும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதில் அரசு உறுதிபூண்டுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். கடந்த 7 ஆண்டுகளில் குறைந்தபட்ச ஆதரவு விலையின் கீழ் 13.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள உணவு தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், முந்தைய அரசின் மூத்த தலைவர் ஒருவரின் பதவிக்காலத்தில் இந்த எண்ணிக்கை வெறும் 3.5 லட்சம் கோடியாக இருந்ததாகவும் பிரதமர் தெரிவித்தார். 2014-ம் ஆண்டுக்குப் பிறகு 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருப்பு வகைகள் கொள்முதல் செய்யப்பட்டன. நேரடி பணப்பரிமாற்றம் மூலம் ஊழல் அகற்றப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

ரபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிப்பதற்கான சமீபத்திய அமைச்சரவை முடிவுகள் குறித்து பேசிய திரு மோடி, கடலையின் குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.105 ஆகவும், கோதுமை மற்றும் குங்குமப்பூவின் குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.150 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கரும்பின் குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.315 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த 9 ஆண்டுகளில், சுமார் 70,000 கோடி ரூபாய் மதிப்புள்ள எத்தனால் வாங்கப்பட்டுள்ளதாகவும், அந்தப் பணம் கரும்பு விவசாயிகளை சென்றடைந்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். "கரும்பு விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் பணம் வழங்குவதை உறுதி செய்வதற்காக, சர்க்கரை ஆலைகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள உதவிகள் வழங்கப்பட்டுள்ளன" என்று அவர் மேலும் கூறினார்.

 

"கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்த எங்களுடைய அரசு செயல்பட்டு வருவதாக கூறினார். நாடு முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. சிறந்த சேமிப்பு மற்றும் பழைய சேமிப்பு வசதிகளை உறுதி செய்வதற்காக பி..சி.க்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு வசதிகள் அளிக்கப்பட்டுள்ளதாக  கூறினார். 7500-க்கும் மேற்பட்ட எஃப்.பி.ஓக்கள் ஏற்கனவே செயல்படுவதால் சிறு விவசாயிகள் எஃப்.பி.ஓக்கள் மூலம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தமது உரையின் நிறைவாக பேசிய பிரதமர், "மகாராஷ்டிரா மாநிலம் மகத்தான ஆற்றல் மற்றும் சாத்தியக்கூறுகளின் மையமாக இருந்து வருகிறது என்றும், மகாராஷ்டிரா எவ்வளவு விரைவாக வளர்ச்சி அடைகிறதோ, அதே அளவில் இந்தியா விரைவாக வளரும் என்று தெரிவித்தார். மும்பை மற்றும் ஷீரடியை இணைக்கும் வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் திரு மோடி, மகாராஷ்டிராவில் ரயில்வே கட்டமைப்பு தொடர்ந்து விரிவடைந்து வருவதை எடுத்துரைத்தார். ஜல்கான் மற்றும் புசாவல் இடையே மூன்றாவது மற்றும் நான்காவது ரயில் பாதைகள் தொடங்குவதன் மூலம் மும்பை-ஹவுரா ரயில் பாதையில் இயக்கம் எளிதாகும் என்று அவர் குறிப்பிட்டார். இதேபோல், சோலாப்பூரில் இருந்து போர்கான் வரை நான்கு வழிச்சாலை அமைப்பதன் மூலம் ஒட்டுமொத்த கொங்கன் பகுதியும் இணைப்பை மேம்படுத்தி, அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் கரும்பு, திராட்சை மற்றும் மஞ்சள் விவசாயிகள் பயனடைவார்கள் என்று கூறினார். "இந்த இணைப்பு போக்குவரத்திற்கு மட்டுமல்ல, முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் ஒரு புதிய பாதையை உருவாக்கும்" என்று கூறி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா ஆளுநர் திரு ரமேஷ் பைஸ், மகாராஷ்டிரா முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே மற்றும் மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சர்கள் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ், திரு அஜித் பவார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

***********

 

(Release ID: 1971575)

ANU/AD/IR/RS/KRS



(Release ID: 1971707) Visitor Counter : 90