பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தான்சானியா ஐக்கியக் குடியரசு அதிபரின் இந்தியப் பயணத்தின்போது பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்ட ஊடக அறிக்கையின் தமிழாக்கம்

Posted On: 09 OCT 2023 1:43PM by PIB Chennai

மேதகு  அதிபர் சமியா ஹசன் அவர்களே,

இரு நாட்டுப் பிரதிநிதிகளே,

ஊடக நண்பர்களே,

வணக்கம்!

முதலாவதாக, இந்தியா  வந்துள்ள அதிபர் மற்றும் அவரது  பிரதிநிதிக் குழுவை நான் அன்புடன் வரவேற்கிறேன். தான்சானியா அதிபர் என்ற முறையில் அவர் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல் முறையாகும். ஆனால் அவர் நீண்ட காலமாக இந்தியாவுடனும் அதன் மக்களுடனும் தொடர்புடையவர்.

இந்தியா மீது  அதிபரின் ஆழ்ந்த அன்பும் அர்ப்பணிப்பும் பல்வேறு துறைகளில் உறவுகளை வலுப்படுத்த எங்களுக்கு உத்வேகம் அளிக்கிறது. ஜி20 அமைப்பில் ஆப்பிரிக்க ஒன்றியம் நிரந்தர உறுப்பினராக சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் ஆப்பிரிக்க நாட்டுத் தலைவருக்கு விருந்தளிக்கும் வாய்ப்பு நமக்குக் கிடைத்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

நண்பர்களே,

இந்தியா-தான்சானியா உறவில் இன்று ஒரு முக்கியமான தருணம். இன்று நாம் நமது நூற்றாண்டு கால நட்பை ஒரு உத்தி சார்ந்த கூட்டாண்மை நிலைக்கு உயர்த்துகிறோம்.

இன்றைய கூட்டத்தில், இந்த எதிர்கால கூட்டாண்மைக்கான அடித்தளத்தை அமைத்து, பல புதிய முன்முயற்சிகளை நாங்கள் அடையாளம் கண்டிருக்கிறோம்.

இந்தியாவும் தான்சானியாவும் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டின் அடிப்படையில் முக்கியமான கூட்டாளிகள்.

உள்ளூர் நாணயங்களில் வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கான ஒப்பந்தத்தில் இரு தரப்பும் ஈடுபட்டு வருகின்றன. பொருளாதார ஒத்துழைப்பின் முழு திறனையும் உணர புதிய வாய்ப்புகளை நாங்கள் தொடர்ந்து ஆராய்வோம்.

தான்சானியா, இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் நெருக்கமான வளர்ச்சிக் கூட்டாளியாக செயல்படும் ஆப்பிரிக்க நாடாகும்.

ஐ.சி.டி மையங்கள், தொழிற்பயிற்சி, பாதுகாப்புப் பயிற்சி, ஐ.டி.இ.சி மற்றும் ஐ.சி.சி.ஆர் உதவித்தொகைகள் மூலம் தான்சானியாவின் திறன் மேம்பாடு மற்றும் திறன் கட்டமைப்பிற்கு இந்தியா குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளது. நீர் வழங்கல், விவசாயம், சுகாதாரம், கல்வி போன்ற முக்கிய துறைகளில் ஒத்துழைப்பதன் மூலம், தான்சானியா மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டு வர நாங்கள் முயற்சித்துள்ளோம். இந்த உறுதிப்பாட்டுடன், எதிர்காலத்திலும் எங்கள் முயற்சிகளைத் தொடர்வோம்.

சான்சிபாரில் ஒரு வளாகத்தை நிறுவ  சென்னை ஐஐடி எடுத்துள்ள  முடிவு, எங்கள் உறவில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. இது உயர்தர கல்வியின் மையமாக மாறும், இது தான்சானியா மட்டுமின்றி பிராந்திய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் பயனளிக்கும்.

இரு நாடுகளின் வளர்ச்சிப் பயணத்திற்குத் தொழில்நுட்பம் ஒரு முக்கிய அடித்தளமாக அமைகிறது. டிஜிட்டல் பொது  சொத்துக்களின் பகிர்வு குறித்த ஒப்பந்தம் எங்கள் கூட்டாண்மையை வலுப்படுத்தும். தான்சானியாவில் யு.பி.ஐ.யின் வெற்றிக் கதையை ஏற்றுக்கொள்வதில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.

நண்பர்களே,

பாதுகாப்புத் துறையில், ஐந்தாண்டு செயல்திட்டத்தை நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம். இது ராணுவப் பயிற்சி, கடல்சார் ஒத்துழைப்பு, திறன் மேம்பாடு மற்றும் பாதுகாப்புத் தொழில் போன்ற துறைகளில் புதிய பரிமாணங்களைச் சேர்க்கும்.

எரிசக்தித் துறையிலும் இந்தியாவும், தான்சானியாவும் நெருங்கிய ஒத்துழைப்பைக் கொண்டுள்ளன. இந்தியாவின் வளர்ந்து வரும் தூய்மையான எரிசக்தி  சூழலைக் கருத்தில் கொண்டு, இந்த முக்கியமான துறையில் ஒத்துழைக்க நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம். ஜி20 மாநாட்டில் இந்தியா அறிவித்துள்ள உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணியில் சேர தான்சானியா முடிவு செய்துள்ளது என்பதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.

விண்வெளி மற்றும் அணுசக்தி தொழில்நுட்பத்தை மக்கள் நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம். இந்த முக்கியமான துறைகளில் உறுதியான முன்முயற்சிகளை அடையாளம் காண்பதன் மூலம் முன்னோக்கிச் செல்ல நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

நண்பர்களே,

இன்று நாங்கள் பல உலகளாவிய மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து விவாதித்தோம். இந்தியப் பெருங்கடல் வழியாக இணைக்கப்பட்ட நாடுகள் என்ற முறையில், கடல்சார் பாதுகாப்பு, கடற்கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றின் சவால்களை எதிர்கொள்ள பரஸ்பர ஒருங்கிணைப்பை அதிகரிப்பதன் அவசியத்தை நாங்கள் அடிக்கோடிட்டுக் காட்டினோம். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அனைத்து முயற்சிகளிலும் தான்சானியாவை ஒரு மதிப்புமிக்க கூட்டாளியாக நாங்கள் காண்கிறோம்.

பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு மிகப் பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலைக் குறிக்கிறது என்ற ஒருமித்த கருத்தை இந்தியாவும் தான்சானியாவும் பகிர்ந்து கொள்கின்றன. அதன்படி, பயங்கரவாத எதிர்ப்பில் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்த முடிவு செய்துள்ளோம்.

நண்பர்களே,

எங்கள் உறவின் மிக முக்கியமான இணைப்பு, மக்களுக்கு இடையிலான  எங்கள் நீடித்த மற்றும் வலுவான  உறவுகளாகும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், குஜராத்தின் மாண்ட்வி துறைமுகத்திற்கும் சான்சிபாருக்கும் இடையே வர்த்தகம் செழித்து வளர்ந்தது. இந்தியாவின் சித்தி பழங்குடியினர் கிழக்கு ஆப்பிரிக்காவின் சான்சி கடற்கரையில் தோன்றியவர்கள்.

இன்றளவும், கணிசமான எண்ணிக்கையிலான இந்தியர்கள் தான்சானியாவைத் தங்கள் இரண்டாவது வீடாகக் கருதுகின்றனர். அவர்களின் நலனுக்கு உறுதுணையாக இருந்த அதிபர் ஹசனுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மீண்டும் ஒருமுறை உங்களையும் உங்கள் குழுவையும் இந்தியாவுக்கு வரவேற்கிறோம்.

மிகவும் நன்றி.

பொறுப்புத்துறப்பு - இது பிரதமர்அறிக்கையின் தோராயமான மொழிபெயர்ப்பு ஆகும். பிரதமரின் அறிக்கை இந்தியில் வழங்கப்பட்டது.

***

(Release ID: 1965893)

ANU/SMB/BR/AG/KRS


(Release ID: 1967555) Visitor Counter : 107