பிரதமர் அலுவலகம்

வள்ளலார் என்று அழைக்கப்படும் ஸ்ரீராமலிங்க அடிகளாரின் 200-வது பிறந்த நாளில் பிரதமர் உரையாற்றினார்


வள்ளலாரின் தாக்கம் உலகளாவியது"

"வள்ளலாரை நினைவுகூரும் போது, அவரது அக்கறையும் இரக்கமும் நம் நினைவுக்கு வருகிறது"

"பசித்தவருடன் உணவைப் பகிர்ந்து கொள்வது எல்லா இரக்கச் செயல்களிலும் மிகவும் உன்னதமானது என்று வள்ளலார் நம்பினார்"

"சமூக சீர்திருத்தத்தில் வள்ளலார் தனது காலத்தை விட முன்னணியில் இருந்தார்"

"வள்ளலாரின் போதனைகள் சமத்துவ சமுதாயத்திற்காகப் பாடுபடுவதை நோக்கமாகக் கொண்டவை"

"காலத்திலும் இடத்திலும் இந்தியாவின் கலாச்சார ஞானத்தின் பன்முகத்தன்மை பெரிய மகான்களின் போதனைகளின் பொதுவான பிணைப்பால் இணைக்கப்பட்டுள்ளது, இது ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற கூட்டு மனப்பான்மைக்கு வலு சேர்க்கிறது"

Posted On: 05 OCT 2023 1:48PM by PIB Chennai

வள்ளலார் என்று அழைக்கப்படும் ஸ்ரீராமலிங்க அடிகளாரின் 200-வது பிறந்த நாளை முன்னிட்டுப் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணாலிக் காட்சி மூலம் உரையாற்றினார்.

கூட்டத்தில் பேசிய பிரதமர், வள்ளலாருடன் நெருங்கிய தொடர்புடைய இடமான வடலூரில் நிகழ்ச்சி நடைபெறுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். வள்ளலார் 19-ஆம் நூற்றாண்டில்  இந்தியாவில் வாழ்ந்த மிகவும் மரியாதைக்குரிய மகான்களில் ஒருவர் என்றும், அவரது ஆன்மீக போதனைகள் இன்றும் கோடிக்கணக்கானவர்களுக்கு ஊக்கமளிக்கின்றன என்றும் அவர் கூறினார். "வள்ளலாரின் தாக்கம் உலகளாவியது" என்று கூறிய திரு நரேந்திர மோடி, அவரது சிந்தனைகள் மற்றும் லட்சியங்களைப் பின்பற்றி பல அமைப்புகள் செயல்படுகின்றன என்பதை எடுத்துரைத்தார்.

வள்ளலாரை நாம் நினைவுகூரும் போது, அவரது அக்கறை மற்றும் இரக்க உணர்வை நாம் நினைவுகூர்வோம் என்று பிரதமர் கூறினார். வள்ளலார் சக மனிதர்களிடம் இரக்கம் காட்டுவதையே முதன்மையாகக் கொண்ட வாழ்க்கை முறையை நம்பினார் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். பசியைப் போக்குவதில் வள்ளலாரின் மிக முக்கியமான பங்களிப்பு மற்றும் அர்ப்பணிப்பை எடுத்துரைத்த பிரதமர், "ஒரு மனிதன் வெறும் வயிற்றுடன் படுக்கைக்குச் செல்வதை விட வேறு எதுவும் அவரை வேதனைப்படுத்தியதில்லை என்றார். பசித்தவர்களுடன் உணவைப் பகிர்வது எல்லா இரக்க நடவடிக்கைகளிலும் மிகவும் உன்னதமானது என்று வள்ளலார் நம்பியதாகப் பிரதமர் தெரிவித்தார். ஒவ்வொரு முறையும் பயிர்கள் வாடுவதைக் காணும் போதெல்லாம், தானும் வாடிவிட்டதாக வள்ளலார் கூறியதை பிரதமர் சுட்டிக்காட்டினார். அவரது லட்சியத்தில்  அரசு உறுதிபூண்டு செயல்படுவதாக பிரதமர் கூறினார். கொவிட் பெருந்தொற்றுக் காலத்தில் இலவச உணவு தானியஙகள் வழங்கியதன் மூலம் 80 கோடிக்கும் மாபெரும் நிவாரணத்தை அரசு வழங்கியதை  உதாரணமாக அவர் குறிப்பிட்டார்.

கல்வி மற்றும் கற்றலின் சக்தியில் வள்ளலாரின் நம்பிக்கையை எடுத்துரைத்த பிரதமர், ஒரு வழிகாட்டியாக, அவர் கதவுகளை எப்போதும் திறந்தே வைத்திருந்து எண்ணற்ற மக்களை வழிநடத்தியதாக தெரிவித்தார். திருக்குறளை மேலும் பிரபலப்படுத்த வள்ளலார் மேற்கொண்ட முயற்சிகளையும், நவீன பாடத்திட்டங்களுக்கு அவர் அளித்த முக்கியத்துவத்தையும் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். கடந்த 9 ஆண்டுகளில் இந்தியக் கல்வியின் உள்கட்டமைப்பை மாற்றுவதற்கான அரசின் முயற்சிகளைப் பிரதமர் எடுத்துரைத்தார். இளைஞர்கள் தமிழ், சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேச வேண்டும் என்று வள்ளலார் விரும்பியதாகப் பிரதமர் கூறினார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா உருவாக்கியுள்ள புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து பேசிய பிரதமர், புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் கவனம் செலுத்தும் அதே நேரத்தில் முழு கல்விச் சூழலையும் இந்தக் கொள்கை மாற்றுகிறது என்றார். கடந்த 9 ஆண்டுகளில் நிறுவப்பட்ட பல்கலைக்கழகங்கள், பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் சாதனை எண்ணிக்கையிலானவை என்று கூறிய அவர், இளைஞர்கள் தங்கள் உள்ளூர் மொழிகளில் படிப்பதன் மூலம் இப்போது மருத்துவர்களாகவும் பொறியாளர்களாகவும் மாற முடியும் என்று கூறினார். இதன் மூலம் இளைஞர்களுக்கு பல வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.  

சமூக சீர்திருத்தம் என்று வரும்போது வள்ளலார் தனது காலத்தை விட முன்னணியில் இருந்தார் என்று குறிப்பிட்ட பிரதமர், வள்ளலாரின் கடவுள் மீதான பார்வை மதம், சாதி மற்றும் இன எல்லைகளைத் தாண்டியது என்று குறிப்பிட்டார். பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவிலும் தெய்வீகத்தைக் கண்ட வள்ளலார், இந்த தெய்வீகத் தொடர்பை மனித குலம் அங்கீகரித்துப் போற்ற வேண்டும் என்று வலியுறுத்தியதாக அவர் கூறினார். வள்ளலாரின் போதனைகள் சமத்துவ சமுதாயத்திற்காகப் பாடுபடுவதை நோக்கமாகக் கொண்டிருப்பதால், அவருக்கு அஞ்சலி செலுத்தும் போது அனைவரும் இணைவோம்,  அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி  என்பதன் மீதான நம்பிக்கை மேலும் வலுவடைகிறது என்று பிரதமர் தெரிவித்தார். மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறுவதற்காக வள்ளலார் ஆசீர்வதித்திருப்பார் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். வள்ளலார் படைப்புகளின் எளிமையை எடுத்துரைத்த பிரதமர், அவை படிக்கவும் புரிந்துகொள்ளவும் எளிதானவை என்றும், சிக்கலான ஆன்மீக ஞானத்தை எளிய சொற்களில் வெளிப்படுத்துகின்றன என்றும் குறிப்பிட்டார். காலத்தாலும் இடத்தாலும் இந்தியாவின் கலாச்சார ஞானத்தில் உள்ள பன்முகத்தன்மை, ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற கூட்டு எண்ணத்துக்கு வலு சேர்க்கும் மகான்களின் போதனைகளின் பொதுவான பிணைப்பால் இணைக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.

இந்தப் புனிதமான சந்தர்ப்பத்தில், வள்ளலாரின் கொள்கைகளை நிறைவேற்றுவதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் எடுத்துரைத்த பிரதமர், அன்பு, கருணை மற்றும் நீதியின் செய்தியை அனைவரும் பரப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார். வள்ளலாரின் இதயத்திற்கு நெருக்கமான முறையில் நடந்து கொள்ள நாமும் தொடர்ந்து கடினமாக உழைப்போம் என்று பிரதமர் கூறினார். நம்மைச் சுற்றி யாரும் பட்டினியாக இருக்காமல் பார்த்துக் கொள்வோம் என்றும் ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்வோம் என்றும் கூறி பிரதமர் திரு நரேந்திர மோடிது உரையை நிறைவு செய்தார்.

*****

ANU/SMB/PLM/KPG/KV



(Release ID: 1964776) Visitor Counter : 211