பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணியின் மூலம் உயிரி எரிபொருள் துறையில் இந்தியா உலகிற்கு ஒரு புதிய பாதையைக் காட்டும்: மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி
Posted On:
11 SEP 2023 12:13PM by PIB Chennai
உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி மூலம் உயிரி எரிபொருட்களில் இந்தியா உலகிற்கு ஒரு புதிய பாதையைக் காட்டும் என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி கூறினார். சமூக ஊடக 'எக்ஸ்' தளத்தில் தொடர்ச்சியான பதிவுகள் மூலம் தனது கருத்துக்களை வெளிப்படுத்திய அமைச்சர், 'வசுதைவ குடும்பகம்' என்ற மந்திரத்தைப் பின்பற்றி, பிரதமர் திரு நரேந்திர மோடியின் இந்த முயற்சி நிச்சயமாக உலகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசலைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகளாவிய எரிசக்தித் துறையில் வரலாறு படைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜி20 உச்சிமாநாட்டின் போது உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணியை (ஜி.பி.ஏ) நேற்று தொடங்கி வைத்தார். இந்தக் கூட்டணியில் சேர 19 நாடுகளும், 12 சர்வதேச அமைப்புகளும் ஒப்புக் கொண்டுள்ளன.
ஜி.பி.ஏ என்பது உயிரி எரிபொருட்களை ஏற்றுக்கொள்வதற்கு வசதியாக அரசுகள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் தொழில்துறையின் கூட்டணியை உருவாக்குவதற்கான இந்தியா தலைமையிலான முயற்சியாகும். நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளர்களை ஒன்றிணைத்து, உயிரி எரிபொருள் மேம்பாடு மற்றும் நிலைநிறுத்தலை ஊக்குவிக்கும் இந்த முன்முயற்சி, உயிரி எரிபொருட்களை, எரிசக்தி மாற்றத்திற்கான முக்கிய காரணியாக நிலைநிறுத்துவதையும், வேலைவாய்ப்புகள் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஜி20 உச்சிமாநாட்டின்போது ஜி.பி.ஏ தொடங்கப்பட்டதன் மூலம், தூய்மையான மற்றும் பசுமையான எரிசக்திக்கான உலகின் தேடல், வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ளது என்று திரு ஹர்தீப் சிங் பூரி குறிப்பிட்டார்.
உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணியை உருவாக்குவதற்கான விதைகளை விதைத்ததற்காக அமெரிக்காவின் எரிசக்தித் துறை செயலாளர் திருமதி ஜெனிபர் கிரான்ஹோம், பிரேசில் எரிசக்தித்துறை அமைச்சர் திரு அலெக்சாண்டர் சில்வேரா, யுனிகா பிரேசிலின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் எவாண்ட்ரோ குஸ்ஸி ஆகியோருக்கு இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் நன்றி தெரிவித்தார்.
ஜி20 நாடுகள் மற்றும் சர்வதேச எரிசக்தி முகமை (ஐ.இ.ஏ), சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு (ஐ.சி.ஏ.ஓ), உலகப் பொருளாதார அமைப்பு (டபிள்யூ.இ.ஓ) உலக எல்.பி.ஜி சங்கம் போன்ற எரிசக்தி தொடர்பான உலகளாவிய அமைப்புகளின் ஆதரவுடன், தொலைநோக்குப் பார்வை கொண்ட உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி, சர்வதேச உயிரி எரிபொருள் வர்த்தகம் மற்றும் சிறந்த நடைமுறைகளை வலுப்படுத்தும் என்று திரு ஹர்தீப் சிங் பூரி கூறினார். கடந்த 9 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு ரூ.71,600 கோடி வழங்கியுள்ளோம். 2025 ஆம் ஆண்டிற்குள் இ20 அமலாக்கத்தின் மூலம், இந்தியா எண்ணெய் இறக்குமதியில் சுமார் 45,000 கோடி ரூபாயையும், ஆண்டுக்கு 63 மெட்ரிக் டன் எண்ணெயையும் மிச்சப்படுத்தும் என்று அவர் மேலும் கூறினார்.
இந்த முயற்சி இந்தியாவுக்கும் பல முனைகளில் பயனளிக்கும். ஜி20 தலைமைத்துவத்தின் உறுதியான விளைவாக, ஜி.பி.ஏ, உலக அளவில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்த உதவும். மேலும், இந்தக் கூட்டணி, ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும். தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களை ஏற்றுமதி செய்வதன் வழியாக இந்திய தொழில்களுக்கு கூடுதல் வாய்ப்புகளை வழங்கும். இது இந்தியாவின் தற்போதைய உயிரி எரிபொருள் திட்டங்களான பிரதமரின் ஜீவன் யோஜனா, சதத் மற்றும் கோபர்தன் திட்டங்களை விரைவுபடுத்த உதவும். இதன் மூலம் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், இந்திய சூழல் அமைப்பின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பங்களிக்கும். உலகளாவிய எத்தனால் சந்தையின் மதிப்பு 2022-ஆம் ஆண்டில் 99.06 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. மேலும் 2032-ஆம் ஆண்டில் 5.1% சி.ஏ.ஜி.ஆர் ஆகவும், 2032-ஆம் ஆண்டில் 162.12 பில்லியன் அமெரிக்க டாலராகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நிகர பூஜ்ஜிய இலக்குகள் காரணமாக, 2050- ஆம் ஆண்டில் 3.5-5 மடங்கு உயிரி எரிபொருள் வளர்ச்சி திறன் இருக்கும், இது இந்தியாவுக்கு ஒரு பெரிய வாய்ப்பை உருவாக்கும் என்று ஐ.இ.ஏ தெரிவித்துள்ளது.
(Release ID: 1956303)
Visitor Counter : 248
Read this release in:
English
,
Khasi
,
Urdu
,
Marathi
,
Nepali
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam