பிரதமர் அலுவலகம்

ஜி 20 மாநாட்டில் பிரதமர் ஆற்றிய தொடக்க உரையின் தமிழாக்கம்

Posted On: 09 SEP 2023 12:00PM by PIB Chennai

மேதகு தலைவர்களே,

வணக்கம்!

முறைப்படியான நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு முன், மொராக்கோவில் சிறிது நேரத்திற்கு முன்  ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம் அனைவரின் சார்பிலும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய நாம் பிரார்த்திப்போம். இந்தக் கடினமான நேரத்தில் முழு உலக சமூகமும் மொராக்கோவுடன் உள்ளது. அவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

 

மேதகு தலைவர்களே,

ஜி-20 நாடுகளின் தலைவர் என்ற முறையில், இந்தியா உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறது.

 

இன்று நாம் கூடியிருக்கும் இடத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில், ஏறத்தாழ  இரண்டாயிரத்து ஐநூறு  ஆண்டுகள் பழமையான ஒரு தூண் நிற்கிறது. இந்தத் தூணில் பிராகிருத மொழியில் பொறிக்கப்பட்டுள்ள சொற்கள் உள்ளன.

 

அதன் பொருள்

"மனிதகுலத்தின் நலனும்  மகிழ்ச்சியும் எப்போதும் உறுதிசெய்யப்பட வேண்டும்."

இரண்டாயிரத்து ஐநூறு  ஆண்டுகளுக்கு முன், இந்திய தேசம் இந்தச் செய்தியை முழு உலகிற்கும் வழங்கியது.

 

இந்தச் செய்தியை நினைவுகூர்ந்து இந்த ஜி-20 மாநாட்டைத் தொடங்குவோம்.

 

21 ஆம் நூற்றாண்டு முழு உலகிற்கும் ஒரு புதிய திசையைக் காட்டும் ஆற்றலைக் கொண்டதாகும். பல ஆண்டுகால சவால்கள் நம்மிடமிருந்து புதிய தீர்வுகளைக் கோரும் நேரம் இது. எனவே, மனித மைய அணுகுமுறையுடன் நமது அனைத்துப் பொறுப்புகளையும் நிறைவேற்றுவதன் மூலம் நாம் முன்னேற வேண்டும்.

 

நண்பர்களே,

கொவிட் -19 க்குப் பிறகு, உலகில் நம்பிக்கையின்மை என்ற மிகப்பெரிய நெருக்கடி வந்துள்ளது. மோதல்கள்  இந்த நம்பிக்கைப் பற்றாக்குறையை ஆழப்படுத்தியுள்ளது.

 

கொரோனாவை எப்படி சமாளிக்க முடியுமோ, அதே போல் பரஸ்பர நம்பிக்கையின் இந்த நெருக்கடியையும் நம்மால் சமாளிக்க முடியும்.

 

இன்று, ஜி -20 நாடுகளின் தலைவர் என்ற முறையில், முழு உலகையும் ஒன்றிணைத்து, உலகளாவிய நம்பிக்கைப் பற்றாக்குறையை உலகளாவிய நம்பிக்கையாக மாற்ற இந்தியா அழைப்பு விடுக்கிறது.

 

நாம் அனைவரும் ஒன்றாக நடக்க வேண்டிய நேரம் இது, மேலும் 'அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி' என்ற மந்திரம் நம் அனைவருக்கும் வழிகாட்டும் ஒளியாக மாறும்.

 

கொந்தளிப்பான உலகப் பொருளாதாரம் 

அல்லது வடக்கு-தெற்கு பாகுபாடு,

அல்லது கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையிலான தூரம்,

உணவு, எரிபொருள் மற்றும் உரங்கள் நிர்வாகம்,

அல்லது பயங்கரவாதம் மற்றும் சைபர் பாதுகாப்பைக் கையாளுதல்,

அல்லது ஆரோக்கியம், எரிசக்தி மற்றும் நீர்ப் பாதுகாப்பை உறுதி செய்தல் என எதுவாக இருந்தாலும் சரி,

 

இந்த சவால்களுக்கு நாம் உறுதியான தீர்வுகளை நோக்கி நகர வேண்டும், நிகழ்காலத்திற்கு மட்டுமல்ல, எதிர்கால சந்ததியினருக்கும்.

 

நண்பர்களே,

 

இந்தியாவின் ஜி-20 தலைவர் பதவி என்பது நாட்டிற்குள்ளும் அதற்கு அப்பாலும் 'அனைவரும் இணைவோம் ' என்ற உணர்வைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஓர் அடையாளமாக மாறியுள்ளது.

 

இது 'மக்கள் ஜி-20' ஆக மாறியுள்ளது. இதில் லட்சக்கணக்கான இந்தியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 

நாடு முழுவதும் 60-க்கும் மேற்பட்ட நகரங்களில் 200-க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

 

'அனைவரும் இணைவோம்' என்ற உணர்வில்தான் ஜி-20 அமைப்பில் ஆப்பிரிக்க யூனியனை நிரந்தர உறுப்பினராக்க இந்தியா முன்மொழிந்தது. இந்த முன்மொழிவை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்வோம்  என்று நான் நம்புகிறேன்.

 

 நாம் அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு முன், உங்கள் ஒப்புதலுடன், ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைவரை ஜி-20-ன் நிரந்தர உறுப்பினருக்கான இடத்தை ஏற்குமாறு நான் அழைக்கிறேன்.

 

பொறுப்பு துறப்பு - இது பிரதமரின் பத்திரிகை அறிக்கையின் தோராயமான மொழிபெயர்ப்பு ஆகும். அசல் பத்திரிகை அறிக்கை இந்தியில் வழங்கப்பட்டது.

***

SM/ANU/SMB/DL



(Release ID: 1955812) Visitor Counter : 173