பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குஜராத்தின் ராஜ்கோட்டில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 27 JUL 2023 8:08PM by PIB Chennai

குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர பாய் படேல் அவர்களே, எனது அமைச்சரவை சகாவான திரு ஜோதிராதித்ய சிந்தியா அவர்களே, முன்னாள் முதலமைச்சர் திரு விஜய் ரூபானி அவர்களே, திரு சி.ஆர். பாட்டில் அவர்களே,

 

நண்பர்களே,

 

இன்று ராஜ்கோட்டிற்கும், முழு சவுராஷ்டிரா மற்றும் குஜராத்திற்கும் ஒரு முக்கியமான நாள். ஆனால் இயற்கை சீற்றங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு முதலில் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்பகுதியை சூறாவளி தாக்கியது, வெள்ளமும் பெரும் அழிவை ஏற்படுத்தியது. இந்த இக்கட்டான நேரத்தில், பொதுமக்களும், அரசும் இணைந்து போராடி வருகின்றனர். மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், ஒத்துழைப்பையும் மத்திய அரசு வழங்கி வருகிறது.

 

சகோதர சகோதரிகளே,

 

இன்று ராஜ்கோட்டிற்கு ஒரு புதிய மற்றும் பெரிய சர்வதேச விமான நிலையம் கிடைத்துள்ளது. இப்போது ராஜ்கோட்டிலிருந்து நாட்டின் மற்றும் உலகின் பல நகரங்களுக்கு நேரடி விமானங்களை இயக்க முடியும். இனி, இங்குள்ள விவசாயிகள் தங்கள் பழங்களையும், காய்கறிகளையும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெளிநாட்டிலும் உள்ள மண்டிகளுக்கு கொண்டு செல்வது எளிது.

 

இன்று, சவுனி திட்டத்தின் கீழ் பல திட்டங்களும் இங்கு தொடங்கப்பட்டுள்ளன. இவை நிறைவடைவதன் மூலம், சவுராஷ்டிராவில் உள்ள பல  கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு பாசனம் மற்றும் குடிநீர் கிடைக்கும். இது தவிர, ராஜ்கோட்டின் வளர்ச்சி தொடர்பான பல்வேறு திட்டங்களை இன்று இங்கு தொடங்கி வைக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்துள்ளது. இந்த திட்டங்களுக்காக உங்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன்.

 

நண்பர்களே,

 

கடந்த 9 ஆண்டுகளில், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் வாழ்க்கையை எளிதாக்க மத்திய அரசு கடுமையாக உழைத்துள்ளது. ஏழைகளாக இருந்தாலும் சரி, தலித்துகளாக இருந்தாலும் சரி, பிற்படுத்தப்பட்டோராக இருந்தாலும் சரி, பழங்குடி சமூகமாக இருந்தாலும் சரி, அனைவரின் வாழ்க்கையையும் மேம்படுத்த அயராது உழைத்து வருகிறோம்.

 

நமது அரசின் முயற்சியால் இன்று நாட்டில் வறுமை வேகமாக குறைந்து வருகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை, நமது அரசின் 5 ஆண்டு கால ஆட்சியில் 13.5 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளதாக குறிப்பிடுகிறது.

 

2014-ஆம் ஆண்டில், 4 நகரங்களில் மட்டுமே மெட்ரோ சேவை இருந்தது. இன்று மெட்ரோ சேவை நாட்டின் 20 க்கும் மேற்பட்ட நகரங்களை அடைந்துள்ளது. இன்று, வந்தே பாரத் போன்ற நவீன ரயில்கள்  25 வெவ்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. கடந்த, 2014இல், நாட்டில் 70 விமான நிலையங்கள் இருந்தன. இப்போது அந்த எண்ணிக்கையும் அதிகரித்து இரு மடங்காக உயர்ந்துள்ளது. விமான சேவையின் விரிவாக்கம் இந்தியாவின் விமானத் துறைக்கு உலகில் ஒரு புதிய உயரத்தை அளித்துள்ளது.

 

சகோதர சகோதரிகளே,

 

எளிமையான வாழ்க்கை, வாழ்க்கைத் தரம் ஆகியவை நமது அரசாங்கத்தின் மிக உயர்ந்த முன்னுரிமைகளில் ஒன்றாகும். இதற்கு முன்னர் நாட்டு மக்கள் எதிர்கொண்ட சவால்களை நாம் மறந்துவிட முடியாது. மின்சாரம், குடிநீர் கட்டணம் செலுத்த வரிசையில் நிற்க வேண்டியிருந்தது, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரிசையில் நிற்க வேண்டியிருந்தது. நீங்கள் காப்பீடு மற்றும் ஓய்வூதியம் பெற விரும்பினால் இன்னும் பல சவால்கள் இருந்தன. வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு கூட நீங்கள் நிறைய சிக்கல்களை சந்திக்க வேண்டியிருந்தது. இந்த பிரச்சினைகள் அனைத்திற்கும் டிஜிட்டல் இந்தியா மூலம் தீர்வு வழங்கினோம். முன்பெல்லாம் வங்கிகளுக்குச் சென்று வேலையைச் செய்ய நிறைய நேரமும் ஆற்றலும் தேவைப்படும். இன்று உங்கள் வங்கி உங்கள் செல்பேசியில்  உள்ளது.

 

உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். திரு பூபேந்திர பாயின் அரசாங்கம் உங்கள் நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களையும் நிறைவேற்ற எந்த முயற்சியையும் கைவிடாது என்று நான் முழுமையாக நம்புகிறேன்.

 

இந்த வரவேற்புக்கும், இந்த அன்பிற்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

மிகவும் நன்றி!

 

பொறுப்புத்துறப்பு: இது பிரதமர்  உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியிலும், குஜராத்தியிலும் வழங்கியிருந்தார்.    

***

AP/RB/DL


(Release ID: 1944117) Visitor Counter : 145