பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜூலை 27 மற்றும் 28 தேதிகளில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்

Posted On: 25 JUL 2023 1:54PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி 2023 ஜூலை 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் பயணம் மேற்கொள்கிறார்.

ஜூலை 27 ஆம் தேதி காலை 11:15 மணியளவில், ராஜஸ்தானின் சிகாரில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவேற்றப்பட்ட புதிய திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். பின்னர் மாலை 3.15 மணியளவில் குஜராத் மாநிலம் ராஜ்கோட் செல்லும் பிரதமர், ராஜ்கோட் சர்வதேச விமான நிலையத்தை பார்வையிடுகிறார். அதன் பின்னர் மாலை 4.15 மணியளவில் ராஜ்கோட்டில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார். ஜூலை 28 ஆம் தேதி காலை 10:30 மணியளவில், காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் செமிகான் இந்தியா 2023  மாநாட்டைப் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

சிகாரில் பிரதமர்

விவசாயிகளுக்கு பயனளிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, 1.25 லட்சம் பிரதமரின் கிசான் சம்ரிதி கேந்திரா (பி.எம்.கே.எஸ்.கே) எனப்படும் பிரதமரின் விவசாயிகள் வள மையங்களைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அனைத்து விவசாயிகளின் தேவைகளுக்கும் ஒரே நேரத்தில் தீர்வு காணும் வகையில் இந்த மையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. வேளாண் இடுபொருட்கள் (உரங்கள், விதைகள், கருவிகள்) பற்றிய தகவல்கள்முதல் மண், விதைகள் மற்றும் உரங்களுக்கான சோதனை வசதிகள், பல்வேறு அரசாங்க திட்டங்கள் பற்றிய தகவல்கள் வரை, அனைத்தையும் இந்த மையங்கள் நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு வழங்கும். வட்டார மற்றும் மாவட்ட அளவிலான விற்பனை நிலையங்களில் உர சில்லறை விற்பனையாளர்களின் வழக்கமான திறன்களையும் இந்த மையங்கள் உறுதி செய்யும்.

சல்பர் பூசப்பட்ட புதிய வகை யூரியாவான யூரியா கோல்ட்-ஐ பிரதமர் அறிமுகம் செய்து வைக்கிறார். சல்பர் பூசப்பட்ட யூரியாவை அறிமுகப்படுத்துவதன் மூலம் மண்ணில் உள்ள கந்தகக் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும். இந்தப் புதுமையான உரம் வேம்பு பூசப்பட்ட யூரியாவை விட சிக்கனமானது மற்றும் செயல்திறன் கொண்டது. இது தாவரங்களில் நைட்ரஜன் பயன்பாட்டு திறனை மேம்படுத்தி உர நுகர்வைக் குறைப்பதுடன் பயிரின் தரத்தை மேம்படுத்துகிறது.

இந்நிகழ்ச்சியின் போது, டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த இணையகதள அமைப்பில் (ஓ.என்.டி.சி) 1500 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை (எஃப்.பி.ஓ) இணைக்கும் நடைமுறையைப் பிரதமர் தொடங்கி வைக்கிறார். ஓ.என்.டி.சி டிஜிட்டல் சந்தைப்படுத்தல், இணையதள பணப் பரிமாற்றம், வணிகத்திலிருந்து வணிகம் (பி 2 பி) மற்றும் வணிகத்திலிருந்து நுகர்வோர் பரிவர்த்தனைகளுக்கு நேரடி அணுகல் மூலம் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை இது அதிகாரப்படுத்துகிறது. மேலும் உள்ளூர் மதிப்பு கூட்டலை ஊக்குவிப்பதுடன் கிராமப்புறங்களில் சரக்குப் போக்குவரத்து வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

விவசாயிகளின் நலனில் பிரதமரின் அர்ப்பணிப்புக்கு மற்றொரு எடுத்துக்காட்டு, பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (பி.எம்-கிசான்) எனப்படும் பிரதமரின் விவசாயிகளுக்கான வருவாய் ஆதரவுத் திட்டம் ஆகும். இத்திட்டத்தின் கீழ் 14 வது தவணை தொகை சுமார் ரூ. 17,000 கோடியை, 8.5 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு நேரடி பணப்பரிமாற்றம்  மூலம்  பிரதமர் விடுவிக்கவுள்ளார்.

சித்தோர்கர், தோல்பூர், சிரோஹி, சிகார் மற்றும் ஸ்ரீ கங்காநகர் ஆகிய இடங்களில் ஐந்து புதிய மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைப்பதோடு, பரண், பூண்டி, கரௌலி, ஜுன்ஜுனு, சவாய் மாதோபூர், ஜெய்சால்மர் மற்றும் டோங்க் ஆகிய இடங்களில் ஏழு மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

தற்போதுள்ள மாவட்ட மருத்துவமனைகளுடன் புதிய மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதற்காக மத்திய அரசின் நிதியுதவி திட்டத்தின் கீழ் மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்படுகின்றன. பிரதமரால் திறந்து வைக்கப்படும் 5 மருத்துவக் கல்லூரிகள் ரூ. 1400 கோடிக்கும் அதிகமான செலவில் உருவாக்கப்பட்டுள்ளன. அடிக்கல் நாட்டப்படும் ஏழு மருத்துவக் கல்லூரிகள் ரூ. 2275 கோடி செலவில் கட்டப்படவுள்ளன.

2014 ஆம் ஆண்டு வரை, ராஜஸ்தான் மாநிலத்தில் 10 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன. மத்திய அரசின் முயற்சியால், மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 35 ஆக உயர்ந்துள்ளது. இது 250 சதவீத உயர்வாகும். மாநிலத்தில் 2013-14 ஆம் ஆண்டில் 1750 இடங்களாக எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை இருந்தது.  12 புதிய மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதன் மூலம் ராஜஸ்தானில் எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை 6275 ஆக உயரும். இது 258 சதவீத உயர்வாகும்.

உதய்பூர், பன்ஸ்வாரா, பர்தாப்கர் மற்றும் துங்கர்பூர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஆறு ஏகலவ்யா மாதிரி உறைவிடப் பள்ளிகளைப் பிரதமர் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் ஜோத்பூரில் உள்ள கேந்திரிய வித்யாலயா திவ்ரி எனப்படும் சிறப்பு மையத்தையும் அவர் தொடங்கி வைக்கிறார்.

 

ராஜ்கோட்டில் பிரதமர்

ராஜ்கோட்டில் புதிய சர்வதேச விமான நிலையத்தைத் திறப்பதன் மூலம் நாடு முழுவதும் விமான இணைப்பை மேம்படுத்துவதற்கான பிரதமரின் தொலைநோக்கு பார்வைக்கு உத்வேகம் கிடைக்கும். கிரீன்ஃபீல்டு எனப்படும் இந்தப் பசுமை விமான நிலையம் மொத்தம் 2500 ஏக்கர்  நிலப்பரப்பில் சுமார் ரூ. 1400 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய விமான நிலையம் நவீன தொழில்நுட்பம் மற்றும் நிலையான அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த முனைய கட்டிடம் கிரிகா-4 (GRIHA -4) எனப்படும் ஒருங்கிணைந்த வாழ்விட மதிப்பீட்டிற்கான பசுமை அம்சத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தப் புதிய முனைய கட்டிடம் (என்ஐடிபி) இரட்டைப் பாதுகாப்புக் கூரை அமைப்பு, ஸ்கைலைட்டுகள், எல்இடி விளக்குகள், குறைந்த வெப்ப அமைப்புகள் போன்ற பல்வேறு நிலைத்தன்மை அம்சங்களைக் கொண்டுள்ளது.

ராஜ்கோட்டின் கலாச்சார துடிப்புக்கு ஏற்ப இந்த விமான நிலைய முனையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது லிப்பன் கலை முதல் தண்டியா நடனம் வரையிலான கலை வடிவங்களை சித்தரிக்கிறது. இந்த விமான நிலையம் உள்ளூர் கட்டிடக்கலை பாரம்பரியத்தின் அடையாளமாகவும், குஜராத்தின் கத்தியவார் பிராந்தியத்தின் கலை மற்றும் நடன வடிவங்களின் கலாச்சார பெருமையை பிரதிபலிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.  ராஜ்கோட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய விமான நிலையம் ராஜ்கோட்டின் உள்ளூர் ஆட்டோமொபைல் துறை வளர்ச்சிக்கு முக்கியப் பங்களிப்பது மட்டுமல்லாமல், குஜராத் முழுவதும் வர்த்தகம், சுற்றுலா, கல்வி மற்றும் தொழில்துறை துறைகளை மேம்படுத்தும்.

இத்துடன் ரூ. 860 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். சவுனி யோஜனா 3-ம் இணைப்பு, 8 மற்றும் 9-ம் தொகுப்பு, நீர்ப்பாசன வசதிகளை மேலும் வலுப்படுத்தவும், சவுராஷ்டிரா பிராந்தியத்திற்கு குடிநீர் வசதிகளை அதிகரிக்கவும் உதவும். துவாரகா கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் அப்பகுதி கிராமங்களுக்கு போதுமான அளவு குடிநீர் மற்றும் குழாய் மூலம் பாதுகாப்பான குடிநீர் வழங்கும் பணி வலுவடையும். உபர்கோட் கோட்டையின் பாதுகாப்பு, சீரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்டப் பணிகள், நீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டுதல், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், மேம்பாலம் அமைத்தல் உள்ளிட்ட திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன.

காந்திநகரில் பிரதமர்

ஜூலை 28 அன்று காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் செமிகான் இந்தியா 2023 மாநாட்டை தொடங்கி வைத்து அதில் பிரதமர் உரையாற்றுகிறார். இந்த மாநாட்டின் கருப்பொருள் 'இந்தியாவின் செமிகண்டக்டர் சூழல் அமைப்பை ஊக்கப்படுத்துதல்' என்பதாகும். தொழில்துறையினர், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களைச் சேர்ந்த உலகளாவிய வல்லுநர்களை ஒருங்கிணைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. செமிகண்டக்டர் வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான உலகளாவிய மையமாக இந்தியாவை மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட இந்தியாவின் செமிகண்டக்டர் உத்தி மற்றும் கொள்கையை வெளிப்படுத்தும் வகையில் இது அமைந்துள்ளது. செமிகான் இந்தியா 2023  மாநாட்டில் மைக்ரான் டெக்னாலஜி, அப்ளைடு மெட்டீரியல்ஸ், ஃபாக்ஸ்கான், செமி, கேடன்ஸ், ஏஎம்டி போன்ற முக்கிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

***

ANU/PLM/KPG



(Release ID: 1942439) Visitor Counter : 179