சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

உலகளாவிய உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறையாளர்களின் முதல் உச்சிமாநாட்டைத் தொடங்கி வைத்தார், மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா

Posted On: 20 JUL 2023 12:57PM by PIB Chennai

உலகளாவிய உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறையாளர்களின் முதல் உச்சிமாநாட்டை மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், நேபாள அரசின் விவசாயம் மற்றும் கால்நடை மேம்பாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் பேடு ராம் பூசல் ஆகியோர் முன்னிலையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் மற்றும் பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகேல் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். உணவு சங்கிலியில் உணவு பாதுகாப்பு அமைப்புமுறைகளை வலுப்படுத்துவது மற்றும் ஒழுங்குமுறைத் திட்டங்கள் குறித்த கருத்துக்களை உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறையாளர்கள் பகிர்ந்து கொள்வதற்கு உலகளாவிய தளத்தை உருவாக்குவது தான் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்தின் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் ஏற்பாடு செய்திருந்த இந்த உச்சிமாநாட்டின் நோக்கமாகும்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் டாக்டர் மாண்டவியா, பாதுகாப்பான உணவும், ஆரோக்கியமான உடல் நலனும் ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளது என்றும், சமமான, பாதுகாப்பான மற்றும் ஊட்டச்சத்துமிக்க உணவுகள் நோய்களை எதிர்க்கும் திறனை பெற்றிருப்பதுடன் நமது ஆரோக்கியம் மற்றும் நலனையும் உறுதி செய்கின்றன என்றும் தெரிவித்தார். உலகளாவிய நிலையான வளர்ச்சிக்கு உணவு தானியங்கள், உணவு பாதுகாப்பு முதலிய விஷயங்கள் இன்றியமையாதது என்று அவர் குறிப்பிட்டார்.

பருவநிலை, மனித சமூகம், விலங்குகள் மற்றும் தாவரங்களின் ஆரோக்கியத்தை கூட்டாக ஒருங்கிணைக்கும் தளத்தை அளிக்கும் ‘ஒரே சுகாதாரம்' என்ற அணுகுமுறையின் கீழ் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற அமைப்பு முறையை உருவாக்குவதில் உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறையாளர்களுக்கு கூடுதல் பொறுப்பு இருப்பதாக அவர் வலியுறுத்தினார். இந்தியா தலைமையிலான ஜி20 அமைப்பின் சுகாதார பணிக்குழு, 'ஒரே சுகாதாரம்' என்ற அணுகுமுறைக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், இந்தியாவின் வேளாண் துறை மற்றும் உணவு தொழில்துறையின் அளவைக் கருத்தில் கொண்டு, உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வேளாண் உள்ளீடுகள் முதல் நுகர்வோரைச் சென்றடையும் தயாரிப்புகள் வரையான ஒட்டுமொத்த மதிப்பு சங்கிலி இணைப்பையும் ஒற்றை உரு பொருளாக கருதுவது மிக அவசியம் என்று கூறினார்.

உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் அதானன் கெப்ரெய்சஸ்சின் பதிவு செய்யப்பட்ட காணொளி செய்தி நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டது. மாநாட்டின் போது இரண்டு நாள் கண்காட்சி, உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறையாளர்களுக்கான பொதுவான தளம், டிஜிட்டல் தகவல் பலகை போன்ற பல்வேறு முன்முயற்சிகளையும் அமைச்சர் டாக்டர் மாண்டவியா தொடங்கி வைத்தார்.

*****

 LK/BR/RJ

 



(Release ID: 1941180) Visitor Counter : 121