பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூரில் கீதா அச்சகத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

Posted On: 07 JUL 2023 6:27PM by PIB Chennai

உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் பட்டேல் அவர்களே, முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத் அவர்களே,  கீதா அச்சக அறக்கட்டளை வாரியத்தின் பொதுச்செயலாளர் திரு விஷ்ணு பிரசாத் சந்த்கோத்தியா அவர்களே,  தலைவர் கேஷோராம் அகர்வால் அவர்களே வணக்கம் !

சகோதர, சகோதரிகளே,

புனிதமான ஸ்ரவண மாதத்திலும், இந்திரதேவின் ஆசீர்வாதத்துடனும் கோரக்பூரில் உள்ள கீதா அச்சகத்திற்கு வருகின்ற வாய்ப்பை நான் பெற்றுள்ளேன். இந்த இடம், சிவனின் அவதாரமான குரு கோராக்நாதரை வழிபாடு செய்யும் இடமாகவும், ஏராளமான துறவிகள் வாழ்ந்த இடமாகவும் உள்ளது. கோரக்பூருக்கு மேற்கொண்டிருக்கும் பயணம், வளர்ச்சியும், பாரம்பரியமும் கைகோர்த்து செல்வதற்கு மிகச்சிறந்த உதாரணமாகும்.

கீதா அச்சகம் என்பது வெறும் அச்சகம் அல்ல, அது வாழும் நம்பிக்கை. கீதா அச்சகத்தின் அலுவலகம் கோடிக்கணக்கான மக்களின் ஆலயமாக விளங்குகிறது. கிருஷ்ணாவுடன் வருவது கீதை; அதில் கருணையும், கர்மாவும் உள்ளது. அதேபோல், தற்போது ஞானமும், அறிவியல் ஆய்வும் உள்ளன. கீதையில்  “வசுதேவ சர்வம் அதாவது அனைத்தும் வசுதேவத்தில் இருந்து வசுதேவத்திற்குள்” என்ற வாசகம் உள்ளது.

நண்பர்களே,

1923-ல் கீதா அச்சக வடிவில் ஏற்றப்பட்ட ஆன்மீக விளக்கு இன்று ஒட்டுமொத்த மனிதகுலத்தின் வழிகாட்டும் விளக்காக மாறியுள்ளது. மனிதாபிமானமிக்க இந்த இயக்கத்தின், பொன்னான நூற்றாண்டு விழாவில், பங்கேற்பதற்கான நல்வாய்ப்புக்கு நன்றி. காந்தி அமைதி விருதினை கீதா அச்சகத்திற்கு வழங்கியிருப்பது சரியானது.  கீதா அச்சகத்துடனான மகாத்மா காந்தியின் உணர்வுபூர்வ இணைப்பு அலாதியானது. கல்யாண் பத்திரிகை மூலம்  கீதா அச்சகத்திற்கு ஒரு காலத்தில் காந்தி எழுதிகொண்டிருந்தார்.  கடந்த நூறு ஆண்டுகளில் கீதா அச்சகத்தால் கோடிக்கணக்கான நூல்களை வெளியிட்டு குறைவான விலையில்  வீடு வீடாக விநியோகம் செய்யப்பட்டது. இதன் மூலம் சமூகத்திற்கு அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட ஏராளமான குடிமக்களை உருவாக்கியது.  எந்த விளம்பரமும், தேவையில்லை என்று தன்னலமில்லாத இந்த யாகத்தில் பங்களிப்பு செய்ய, சேத்ஜி ஜெயதயாள் கோயன்கா, பாய்ஜி ஸ்ரீ ஹனுமன் பிரசாத் பொடார் போன்ற ஆளுமைகள்  பாராட்டுதலுக்குரியவர்கள்.

கீதா அச்சகம் போன்ற அமைப்பு, சமயம் மற்றும் அதுசார்ந்த பணிகளில் மட்டும் தொடர்புடையதாக இல்லாமல், தேசிய பண்பிலும் அங்கம் வகிக்கிறது.  கீதா அச்சகம் இந்தியாவை இணைக்கிறது, இந்தியாவின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்துகிறது. நாடு முழுவதும் இதற்கு 20 கிளைகள் உள்ளன. கீதா அச்சகத்தின் கடைகளை ரயில் நிலையங்களில் காணமுடியும். 15 மொழிகளில் 1600 தலைப்புகளில் நூல்களை கீதா அச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தியாவின் அடிப்படை சிந்தனைகளை மக்களிடையே பிரபலப்படுத்தியுள்ளது. கீதா அச்சகம் ஒரே இந்தியா உன்னத இந்தியா என்ற உணர்வைப் பிரதிநிதித்துவம் செய்கிறது.

சகோதர, சகோதரிகளே,

நாடு 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில், கீதா அச்சகத்தின் பயணம் நூறாவது ஆண்டினை நிறைவு செய்திருக்கிறது.  இந்தியா, பல நூற்றாண்டுகளுக்கு அடிமைப்பட்டிருந்தது.   வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களால் இந்தியாவின் நூலகங்கள் எரிக்கப்பட்டன.  குருகுலம் மற்றும் குரு பாரம்பரியம், பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் ஏறத்தாழ அழிக்கப்பட்டு விட்டது.

அநீதியும், அச்சுறுத்தலும் வலுவடையும்போது, வாய்மையை அபாயம் சூழும்போது பகவத் கீதை ஊக்கமளிக்கும் சக்தியாக எப்போதும் விளங்குகிறது. சமயம் மற்றும் வாய்மையின் ஆளுமைக்கு நெருக்கடி ஏற்படும் போது, அதனை பாதுகாக்க கடவுள் பூமியில் அவதரிக்கிறார்.   எதாவது ஒரு வடிவில் கடவுள் தோன்றுவது பற்றி கீதையின் 10-வது அத்தியாயம் விவரிக்கிறது.   கீதா அச்சகம் போன்ற அமைப்புகள் மனித மாண்புகளுக்கும், சிந்தனைகளுக்கும் மறுவாழ்வளிக்க பிறந்துள்ளன.

நண்பர்களே,

உங்களின் நோக்கங்கள் தூய்மையாக இருக்கும் போது, உங்களின் மாண்புகள் தூய்மையாக இருக்கும் போது, வெற்றியும், அதற்கேற்பவே அமையும் என்பதற்கு கீதா அச்சகம் உதாரணமாகும். கீதா அச்சகம் சமூக மாண்புகளை வளப்படுத்தியதோடு, மக்களுக்கு கடமைப்பாதையையும் காட்டியது. அடிமை மனப்பான்மையிலிருந்து விடுபட வேண்டும். பாரம்பரியத்தில் பெருமைகொள்ள வேண்டும். நாடு வளர்ச்சியையும், பாரம்பரியத்தையும் முன்னோக்கி கொண்டு செல்கிறது. ஒரு பக்கம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இந்தியா புதிய சாதனைகளை படைக்கிறது, அதேசமயம் காசியில் உள்ள விஸ்வநாதர் ஆலயம், தெய்வீக தன்மையை அடைகிறது. பல நூற்றாண்டுகளுக்கு பின், அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் என்ற கனவு நனவாக உள்ளது.  கப்பற்படையின் புதிய கொடியில் சத்ரபதி சிவாஜி மகராஜின் காலம் பொறிக்கப்பட்டு இருக்கிறது. ராஜபாதை என்பது கடமைப்பாதையாக பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது கடமை உணர்வை மேம்படுத்தும்.   பழங்குடி பாரம்பரியங்களை கௌரவப்படுத்தவும், பழங்குடியைச் சேர்ந்த விடுதலைப்போராட்ட வீரர்களை பெருமைப்படுத்தவும் அருங்காட்சியகங்கள்  அமைக்கப்பட்டுள்ளன.

வளர்ச்சியடைந்த மற்றும் ஆன்மீக இந்தியா என்ற சிந்தனை நமது ஆன்றோர்களால் நமக்கு வழங்கப்பட்டுள்ளது. இது அர்த்தமுள்ளதாக மாறிவருவதை எவரும் காணமுடியும்.  நாம் புதிய இந்தியாவைக் கட்டமைப்போம், உலக நலன் என்ற நமது தொலைநோக்குப் பார்வையை வெற்றிகரமாக்குவோம்.

***

AD/PKV/DL


(Release ID: 1938269) Visitor Counter : 159