நிதி அமைச்சகம்

மின்சாரத் துறையில் சீர்திருத்தங்களை தீவிரப்படுத்தும் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி ஊக்குவிப்பை வழங்குகிறது

2 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு ரூ. 7,054 கோடி கூடுதல் கடன் பெறுவதற்கு அனுமதி

Posted On: 28 JUN 2023 12:03PM by PIB Chennai

மின்சாரத் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் மாநிலங்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில், கூடுதல் கடன்களைப் பெறுவதற்கு அனுமதியளிப்பது போன்ற நிதி ஊக்குவிப்பை மத்திய நிதி அமைச்சகத்தின் செலவுத்துறை வழங்கி வருகிறது.  மின்சாரத்துறையில் செயல்திறன் மற்றும் திறனை அதிகரிக்க சீர்திருத்தங்களை செயல்படுத்தி வரும் மாநிலங்களை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

மத்திய அரசின் 2021-22 பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் இந்த முன்முயற்சியை அறிவித்தார். இந்த முன்முயற்சியின் கீழ், கூடுதல் கடன் பெறும் வசதி, மாநிலத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5 சதவீதம் அதிகரிக்கும்.  இது 2021-22 முதல் 2024-25 வரை நான்கு ஆண்டு காலத்துக்கு கிடைக்கும். இந்த கூடுதல் நிதி ஆதரவு, மாநிலங்கள் மின்சாரத்துறையில் மேற்கொள்ளும் சீர்திருத்த அமலாக்கங்களைப் பொறுத்து அமையும்.  

இந்த முன்முயற்சி, மாநில அரசுகள் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள உந்துதலாக இருக்கிறது.  பல்வேறு மாநிலங்கள் மேற்கொண்ட சீர்திருத்தங்கள், புரிந்த சாதனைகள் குறித்த விவரங்களை மத்திய மின்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க முன்வந்துள்ளன.      

மத்திய மின்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் 2021-22, 2022-23-ல் 12 மாநில அரசுகளுக்கு சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான அனுமதியை மத்திய நிதியமைச்சகம் வழங்கியுள்ளது.  கடந்த இரண்டு நிதியாண்டுகளில், கூடுதல் கடன் அனுமதியின் மூலம் ரூ. 66,413 கோடி நிதி ஆதாரத்தைப் பெருக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் தமிழ்நாட்டுக்கு ரூ. 7,054 கோடி கூடுதல் கடன் பெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  மேற்கு வங்கத்துக்கு அதிகபட்சமாக ரூ. 15,263 கோடியும், ராஜஸ்தானுக்கு ரூ. 11,308 கோடியும், ஆந்திராவுக்கு ரூ. 9,574 கோடியும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1935826

***

AP/PKV/RJ/RR



(Release ID: 1935835) Visitor Counter : 160