குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
9 ஆண்டுகளில் 332% வளர்ச்சியை பதிவு செய்து காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் சாதனை
Posted On:
08 JUN 2023 7:29PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ் ‘தற்சார்பு இந்தியா திட்டத்தை’ புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் வகையில், காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் வலுவான இந்தியாவின் தோற்றத்தை உலக நாடுகள் முன் வைத்துள்ளது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதன் முறையாக, காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையப் பொருட்களின் விற்றுமுதல் ரூ. 1.34 லட்சம் கோடியைக் கடந்து சாதனை படைத்துள்ளது. ஊரகப் பகுதிகளில் வசிக்கும் கைவினைஞர்களால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட காதி பொருட்களின் விற்பனை, கடந்த 9 ஆண்டுகளில் 332% என்ற இமாலய வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 2013-14 நிதியாண்டில் ரூ. 31,154 கோடியாக இருந்த இந்த ஆணைய பொருள்களின் விற்றுமுதல், 2022-23 நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவில் அதிகபட்சமாக ரூ. 1,34,630 கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோல ஊரகப் பகுதிகளில் 9,54,899 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் மற்றொரு புதிய சாதனையையும் படைத்துள்ளது.
மகாத்மா காந்தியால் எழுச்சி பெற்று, பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் நாட்டின் கடைகோடி கிராமங்களில் உள்ள கைவினைக் கலைஞர்களின் அயராத கடின உழைப்பினால் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது என்று ஆணையத்தின் தலைவர் திரு மனோஜ் குமார் தெரிவித்தார். உள்நாட்டிலும், வெளிநாடுகளின் அனைத்து தளங்களிலும் பிரதமர் திரு நரேந்திர மோடி காதிப் பொருட்களை ஊக்குவித்ததன் காரணமாக, இந்தப் பொருட்கள் அதிகளவில் பிரபலம் அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். உலகளவில் மிகுந்த நம்பகத்தன்மை வாய்ந்த நிறுவனங்களுள் காதிப் பொருட்களும் இடம்பெற்றுள்ளதாக அவர் கூறினார். நிதியாண்டு 2013-14 முதல் 2022-23 வரை காதி மற்றும் கிராமத் தொழில்துறை பொருட்களின் உற்பத்தி 268% அதிகரித்ததோடு, 332%ஆக விற்பனை உயர்ந்து, அனைத்து சாதனைகளையும் முறியடித்தது. ‘உள்நாட்டுத் தயாரிப்புகள்’, ‘உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுத்தல்' மற்றும் ‘மேக் இன் இந்தியா' ஆகிய திட்டங்களின் மீது நாட்டு மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு இது ஒரு சான்றாகும்.
மத்தியில் மோடி அரசின் 9 ஆண்டுகால ஆட்சியில், காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் முயற்சியோடு காதி தயாரிப்புகளுக்கு புதிய வாழ்வு அளிக்கும் வகையில் ‘தன்னிறைவிலிருந்து வளம்’ என்பதை வலியுறுத்தும் 9 சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன:
1. காதி மற்றும் கிராமத் தொழில்துறை பொருட்களின் உற்பத்தியில் அபாரமான வளர்ச்சி: நிதியாண்டு 2013-14இல் ரூ. 26,109 கோடியாக இருந்த காதி மற்றும் கிராமத் தொழில்துறை பொருட்களின் உற்பத்தி, நிதியாண்டு 2022-23இல் 268% அதிகரித்து, ரூ. 95,957 கோடியாக பதிவானது. ஊரகப் பகுதிகளில் மகத்தானப் பணியை ஆணையம் ஆற்றியிருப்பதற்கு இது ஒரு வலுவான எடுத்துக்காட்டு.
2. காதி மற்றும் கிராமத் தொழில்துறை பொருட்களின் விற்பனையில் மிகப்பெரிய ஏற்றம்: கடந்த 9 நிதி ஆண்டுகளில் காதி மற்றும் கிராமத் தொழில்துறை பொருட்களின் விற்பனையில் ஒவ்வொரு ஆண்டும் புதிய சாதனைகள் படைக்கப்பட்டு வருகின்றன. 2013-14 நிதியாண்டில் ரூ. 31,154 கோடியாக இருந்த விற்பனை, முன் எப்போதும் இல்லாத வகையில் 332% அதிகரித்து, 2022-23 நிதியாண்டில் ரூ. 1,34,630 கோடியாக அதிகரித்தது.
3. காதி துணிகளின் உற்பத்தியில் புதிய சாதனை: காதி துணிகளின் உற்பத்தியிலும் கடந்த 9 ஆண்டுகளில் ஈடு இணையற்ற வளர்ச்சி பதிவாகியுள்ளது. நிதியாண்டு 2013-14இல் ரூ. 811 கோடியாக இருந்த காதி ஆடைகளின் உற்பத்தி, நிதியாண்டு 2022-23இல் 260% அதிகரித்து, ரூ. 2916 கோடியை எட்டியது.
4. காதி துணிகளின் விற்பனையிலும் புதிய வரலாறு: காதி துணி வகைகளின் தேவையும் கடந்த 9 நிதி ஆண்டுகளில் வேகமாக வளர்ந்துள்ளது. நிதியாண்டு 2013-14இல் ரூ. 1081 கோடியாக இருந்த இவற்றின் விற்பனை, நிதியாண்டு 2022-23இல் 450% உயர்ந்து, ரூ. 5943 கோடியை பதிவு செய்தது. கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு, உலகம் முழுவதும் இயற்கை சார்ந்த துணிகளின் தேவை பெருவாரியாக அதிகரித்தது. இதன் காரணமாக காதி ஆடைகளின் தேவையும் வேகமாக உயர்ந்தது. இதனுடன், அனைத்து தளங்களிலும் பிரதமர் திரு நரேந்திர மோடி காதிப் பொருட்களை ஊக்குவித்தது, காதி துணி வகைகளின் விற்பனையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
5. வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் புதிய சாதனை : ஊரகப் பகுதிகளில் அதிகபட்ச வேலைவாய்ப்புகளை உருவாக்குவது தான், காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் பிரதான நோக்கம். இந்தத் துறைகளிலும், ஆணையம், கடந்த 9 ஆண்டுகளில் புதிய சாதனையைப் படைக்க தவறவில்லை. நிதியாண்டு 2013-14இல் 130,38,444 ஆக இருந்த ஒட்டு மொத்த வேலைவாய்ப்பு, நிதியாண்டு 2022-23இல் 36% அதிகரித்து 177,16,288 என்ற எண்ணிக்கையை பதிவு செய்தது. அதேபோல நிதியாண்டு 2013-14இல் 5,62,521 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்ட நிலையில், நிதியாண்டு 2022-23இல் இந்த எண்ணிக்கை 70% அதிகரித்து, 9,54,899 ஆக இருந்தது.
6. காதி கைவினைக் கலைஞர்களின் ஊதியம் உயர்வு: காதி துணி வகைகளின் உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரித்ததன் பலன்களை காதி துறையுடன் சம்பந்தப்பட்ட காதி கைவினைக் கலைஞர்களும் பெற்று வருகிறார்கள். நிதியாண்டு 2013-14 முதல் அவர்களது ஊதியம் சுமார் 150% அதிகரித்துள்ளது. அண்மையில் ஏப்ரல் 1, 2023 முதல், காதி கைவினைக் கலைஞர்களின் ஊதியம் மேலும் 33% கூடுதலாக உயர்த்தப்பட்டுள்ளது.
7. புதுதில்லியின் கனாட் ப்ளேசில் உள்ள ‘காதி பவனின்’ புதிய சாதனை: அக்டோபர் 2, 2022 அன்று புதுதில்லியின் கனாட் ப்ளேசில் உள்ள ‘காதி பவனின் விற்பனை புதிய சாதனையை படைத்தது. பிரதமரின் கோரிக்கையை ஏற்று காதி ஆர்வலர்கள் ஒரே நாளில் ரூ. 1.34 கோடி மதிப்பிலான பொருட்களை வாங்கியது, மிகப்பெரிய சாதனைக்கு வித்திட்டது.
8. பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தின் மூலம் தற்சார்பு இந்தியாவை அடைதல்: பிரதமர் திரு நரேந்திர மோடியின் சுதேசி திட்டத்தில் நாட்டின் இளைஞர்களை ஈடுபடுத்தி, பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம் புதிய சாதனையை படைத்துள்ளது. ‘வேலைத் தேடுபவராக இல்லாமல், வேலை வழங்குபவராக மாறுதல்’ என்ற பிரதமரின் கனவை இந்தத் திட்டம் நிறைவேற்றுகிறது. இந்த நிதியாண்டில் 8.69 லட்சம் புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டு, அதன் மூலம் மொத்தம் 73.67 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2008-09 முதல் 2022-23 வரை ரூ. 21870.18 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் 80% அலகுகள் ஊரகப் பகுதிகளில் அமைக்கப்பட்டிருப்பதோடு, இவற்றில் 50%, பட்டியலின, பட்டியல் பழங்குடி மற்றும் பெண் தொழில்முனைவோரால் நிர்வகிக்கப்படுகின்றன. மேலும் 14% அலகுகள் முன்னேற விரும்பும் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளன. 2022-23இல் 85167 அலகுகளில் 9.37 லட்சம் வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டன.
9. ‘கிராமத் தொழில்கள் மேம்பாட்டுத் திட்டத்தின்' புதிய சாதனை: நலிவடைந்த பிரிவினர் மற்றும் சமூகத்தின் அடிமட்ட நிலையில் பணியாற்றும் கைவினைக் கலைஞர்களின் நலனுக்காக கிராமத் தொழில்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஏராளமான முக்கிய திட்டங்களை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் செயல்படுத்தி வருகிறது. 2017-18 முதல் தற்போது வரை, “தேன் இயக்கம்” திட்டத்தின் கீழ் 19118 பயனாளிகளுக்கு 1,89,989 லட்சம் தேனீ வளர்ப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல ‘குயவர் மேம்பாட்டுத் திட்டத்தின்' வாயிலாக இதுவரை சுமார் 25,000 குயவர்களுக்கு மின்சாரத்தில் இயங்கும் நவீன சக்கரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
***
AP/BR/RK
(Release ID: 1930969)
Visitor Counter : 715
Read this release in:
Gujarati
,
Telugu
,
Kannada
,
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Punjabi
,
Odia