உள்துறை அமைச்சகம்
புதிய நாடாளுமன்ற தொடக்கவிழாவின் போது நாடாளுமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதமான செங்கோலினைப் பிரதமர் மோடி நிறுவவுள்ளார்
Posted On:
24 MAY 2023 2:56PM by PIB Chennai
புதிய நாடாளுமன்றம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் ஞாயிறன்று வரலாறு மீண்டும் திரும்பவிருக்கிறது. இந்நாளில் நியாயமான, சமத்துவமான நிர்வாகத்தின் புனித அடையாளமாக விளங்கும் செங்கோலினைப் பிரதமர் பெற்று அதனைப் புதிய நாடாளுமன்றத்தில் நிறுவவிருக்கிறார். இதே செங்கோலினை ஆகஸ்ட் 14 அன்று இரவு பல தலைவர்கள் முன்னிலையில் இந்தியாவின் முதலாவது பிரதமரான திரு ஜவஹர்லால் நேரு தமது இல்லத்தில் பெற்றுக்கொண்டார்.
இந்தியாவின் சுதந்திர நாளில் நடைபெற்ற ஒட்டுமொத்த நிகழ்வையும் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா நினைவுகூர்ந்தார். “சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட பண்டிட் ஜவஹர்லால் நேருவிடம் செங்கோல் ஒப்படைக்கப்பட்டதன் மூலம் இந்தியாவில் அதிகாரமாற்றம் ஏற்பட்டது என்பது பற்றிய புரிதல் பெரும்பாலான மக்களிடம் இல்லை. இந்தியாவின் சுதந்திரத்தைக் கொண்டாடிய 1947 ஆகஸ்ட் 14 அன்றிரவு இந்த சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்த இரவில் சுதந்திர தின விழாவிற்காக தனிப்பட்ட முறையில் வருகை தந்த தமிழ்நாட்டின் திருவாவடுதுறை மடத்தின் ஆதீனங்களிடமிருந்து இந்த செங்கோலினை ஜவஹர்லால் நேரு பெற்றுக்கொண்டார். பிரிட்டிஷாரிடமிருந்து, இந்தியர்களுக்கு அதிகாரம் ஒப்படைக்கப்பட்டதன் தருணத்தை இது குறிப்பால் உணர்த்தியது. செங்கோல் ஒப்படைக்கப்பட்டதன் அந்தத் தருணத்தை சுதந்திர தினமாக நாம் கொண்டாடுகிறோம்”.
அமிர்தகாலத்தின் தேசிய அடையாளமாக செங்கோலினை ஏற்கும் முடிவை மாண்புமிகு பிரதமர் மேற்கொண்டுள்ளார். மாண்புமிகு பிரதமரிடம் ஆதீனங்களால் செங்கோல் வழங்கும் அதேபோன்ற நிகழ்வு புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெறவுள்ளது.
செங்கோல் பற்றிய விவரத்தை எடுத்துரைத்த உள்துறை அமைச்சர், நேர்மை என பொருள்படும் செம்மை என்ற தமிழ் வார்த்தையில் இருந்து செங்கோல் என்ற சொல் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள முதன்மையான தர்மம் மிக்க மடங்களைச் சேர்ந்த உயர்நிலை ஆதினங்களால் இது ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது. இதன் உச்சியில் நியாயத்தைக் குறிக்கும் வகையில் கைகளால் செதுக்கப்பட்ட நந்தியின் உருவம் இடம் பெற்றுள்ளது. மிகமுக்கியமாக செங்கோலைப் பெறுவது என்பது நீதியோடும், நேர்மையோடும் ஆள்வதற்கான ஆணையாக இருக்கும். மக்களுக்கு சேவைசெய்ய தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இதனை ஒருபோதும் மறக்கலாகாது.
இந்த செங்கோல், 1947-ல் இருந்து மக்களவையில் மக்களவைத் தலைவரின் இருக்கைக்கு அருகே பிரதானமாகத் தெரியும் வகையில், மாண்புமிகு பிரதமரால் நிறுவப்படும். நாட்டு மக்கள் காணும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இது சிறப்புமிக்க தருணங்களில் வெளியே கொண்டுவரப்படும்.
வரலாற்றுச் சிறப்புமிக்க “செங்கோலினை” நிறுவுவதற்கு மிகவும் பொருத்தமான, புனிதமான இடம் நாடாளுமன்றமாகும் என்று உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்தார்.
செங்கோல் நிறுவப்படுவது 1947 ஆகஸ்ட் 15-ன் உணர்வை மறக்க முடியாததாக மாற்றுகிறது. இது எல்லையற்ற நம்பிக்கையின் வாக்குறுதியாகவும், எல்லையற்ற சாத்தியங்களின் அடையாளமாகவும் இருப்பதோடு, வலுவான, வளம் மிக்க தேசத்தை கட்டமைப்பதற்கான தீர்மானமாகவும் உள்ளது. இது அமிர்தகாலத்தின் அடையாளமாக இருக்கும். இந்தியா தனது சரியான இடத்தைப் பெறுகின்ற புகழ்மிக்க சகாப்தத்தின் சாட்சியமாகவும் இருக்கும்.
தமிழ்நாட்டு மடங்களின் பங்களிப்பை தமிழ்நாடு அரசு 2021-22-ன் இந்து சமய அறநிலையத்துறை கொள்கைக் குறிப்பில் பெருமிதத்துடன் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் 24-ம் பத்தி அரசவையின் ஆலோசனைத் தளமாக மடங்களின் பங்களிப்பைத் தெளிவாக எடுத்துரைக்கிறது.
ஆதீனத் தலைவர்களின் கலந்தாலோசனையுடன் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் புனிதமான சடங்கின் போது தங்களின் ஆசிகளைப் பொழிவதற்காக 20 ஆதீனங்களின் தலைவர்கள் இந்தப் புனிதமான விழாவில் பங்கேற்கவுள்ளனர். இவர்களுக்கு எனது நன்றியை நான் தெரிவித்துக்கொள்கிறேன். இதன் கட்டமைப்பில் தொடர்புடைய 96 ஆண்டு பழமையான ஸ்ரீ உம்முடி பங்காரு செட்டி அவர்கள் இந்தப் புனித விழாவில் பங்கேற்பதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த செங்கோல் பற்றிய விவரங்களையும், பதிவிறக்கம் செய்யத்தக்க வீடியோக்களையும், சிறப்பு இணையதளத்தையும் (sengol1947.ignca.gov.in) உள்துறை அமைச்சர் இன்று வெளியிட்டார். இந்திய மக்கள் இதனைக் கண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு பற்றி அறிய வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். இது அனைவருக்கும் பெருமிதமான விஷயமாகும் என்று அவர் கூறினார்.
மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி, மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் துறை அமைச்சர் திரு அனுராக்சிங் தாக்கூர், கலாச்சார அமைச்சகத்தின் செயலாளர் திரு கோவிந்த் மோகன் உள்ளிட்டோர் செய்தியாளர் சந்திப்பில் உடனிருந்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1926883
******
AP/SMB/AG/KRS
(Release ID: 1926974)
Visitor Counter : 491
Read this release in:
Malayalam
,
English
,
Urdu
,
Hindi
,
Nepali
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Telugu