தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி 100 கோடி இந்தியர்களை சென்றடைந்து இருப்பதாக ஐஐஎம் கருத்துக்கணிப்பில் தகவல்

Posted On: 24 APR 2023 6:52PM by PIB Chennai

பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி 100 கோடி  இந்தியர்களை சென்றடைந்து இருப்பதாக ஐஐஎம் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் நரேந்திர மோடி, தமது எண்ணங்களை நாட்டு மக்களோடு பகிர்ந்துகொள்ளும் மனதில் குரல் நிகழ்ச்சி, கடந்த சில ஆண்டுகளாக அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பப்பட்டு  வருகிறது. இந்த நிகழ்ச்சி தற்போது 100-வது அத்தியாயத்தை எட்டியுள்ள நிலையில், மனதில் குரல் நிகழ்ச்சி நாட்டு மக்களை எவ்வாறு  சென்றடைந்துள்ளது, இந்த நிகழ்ச்சி குறித்த  நேயர்களின் கருத்து பற்றி ஹரியானா மாநிலம் ரோத்தக்கில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐஐஎம்) கருத்துக் கணிப்பு நடத்தியது. இதில் நூறு கோடி மக்களை மனதின் குரல் நிகழ்ச்சி சென்றடைந்து இருப்பதும், ஏதாவது ஒரு அத்தியாயத்தையாவது அவர்கள் கேட்டு ரசித்து இருப்பதும் தெரிய வந்ததுள்ளது.

இந்த கருத்துக்கணிப்பின் முடிவுகள் குறித்து பிரசார் பாரதியின் தலைமை செயல் அதிகாரி திரு கௌரவ் திவேதி, ஐஐஎம் நிறுவனத்தின் இயக்குநர் திரு தீரஜ்.பி.சர்மா ஆகியோர் புதுதில்லியில் இன்று செய்தியாளர்களிடம் விளக்கினர். அப்போது பேசிய திரு சர்மா,  23 கோடி மக்கள், மனதின் குரல் நிகழ்ச்சியை தொடர்ச்சியாக கேட்டு ரசித்து வருவதும், எப்போதாவது கேட்டு ரசித்த 41 கோடி மக்கள் தற்போது ரசிகர்களாக மாறியிருப்பதும் தெரியவந்திருப்பதாக கூறினார். மத்திய அரசின் அணுகுமுறை மக்கள் நலனுக்கு சாதகமானதாக அமைந்திருப்பதாக 63 சதவீதத்தினரும், தேசத்தை கட்டியமைப்பதற்கான முன்முயற்சியாக இருப்பதாக 60 சதவீதத்தினரும் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சி, பிரஞ்சு, சைனீஸ், இந்தோனேஷியன், திபெத்தியன் உட்பட  11 அயல்நாட்டு மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒலிபரப்பப்பட்டு வருவதாக  குறிப்பிட்டார்.  அகில இந்திய வானொலியில் 500-க்கும் மேற்பட்ட ஒலிபரப்பு மையங்கள் வாயிலாக, இந்த மனதின் குரல் நிகழ்ச்சி தொடர்ந்து ஒலிபரப்பப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

2014-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி முதல் மாதந்தோறும் ஒலிபரப்பப்பட்டு வரும்  பிரதமர் திரு நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியின் 100-வது அத்தியாயம், இம்மாதம் 30-ம் தேதி காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலியில் மற்றும் தூர்தர்ஷனின் அனைத்து அலைவரிசைகளிலும் ஒலிபரப்பப்படுகிறது. இந்த நிகழ்ச்சி 22 இந்திய மொழிகளிலும், ஆங்கிலம் தவிர, 11 அயல்நாட்டு மொழிகளிலும் ஒலிபரப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

***

SM/ES/RS/RJ



(Release ID: 1919289) Visitor Counter : 231