நிதி அமைச்சகம்

2018-19-ல் 8 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம் 2020-21 –ல் 4.2 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது

Posted On: 31 JAN 2023 1:38PM by PIB Chennai

ஊரகம் மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில், கொவிட் நோய்த் தொற்று காலத்திற்கு முந்தைய நிலைக்கு தொழிலாளர் வேலைவாய்ப்பு மீண்டிருப்பதால்,  2018-19-ல் 8 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம் 2020-21 –ல் 4.2 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது.  மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில்  இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018-19-ல் வேலைகளில்  ஈடுபட்ட ஆண்களின் சதவீதம் 55.6 என்பதுடன் ஒப்பிடுகையில்  2020-21-ல் 57.5 சதவீதமாக  அதிகரித்துள்ளது.  பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு விகிதம் இதே காலத்தில் முறையே 18.6 சதவீதமாகவும், 25.1 சதவீதமாகவும் உள்ளது. 

வேளாண் துறையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் விகிதம் 2018-19-ல் 45.6 சதவீதம் என்பதில் இருந்து 2020-21-ல் 46.5 சதவீதமாக  அதிகரித்துள்ளது. 

தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பின் பங்களிப்பு  கணிசமாக அதிகரித்துள்ளது.   குறிப்பாக, உணவுப் பொருட்கள்  தயாரிப்புத் தொழிற்சாலையில் அதிகபட்சமாக 11.1 சதவீதமாக இருந்தது.  அடுத்த நிலையில் ஆடைகள் தயாரிப்பில் 7.5 சதவீதமும், அடிப்படை உலோகங்கள் தயாரிப்பில் 7.3 சதவீதமும்  மோட்டார் வாகனங்கள், டிரக் வாகனங்கள் போன்றவற்றின்  உற்பத்தியில்  6.5 சதவீதமும்  வேலைவாய்ப்பு இருந்தது.  மாநில வாரியான  வேலைவாய்ப்பில் தமிழ்நாட்டில் மிக அதிக அளவாக தொழிற்சாலைகளில் 26.6 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  இதற்கு அடுத்த இடங்களை  குஜராத் (20.7 லட்சம்), மகாராஷ்டிரா (20.4 லட்சம்), உத்தரப்பிரதேசம் (11.3 லட்சம்), கர்நாடகா (10.8 லட்சம்) பெற்றுள்ளன. 

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாக்களை பொறுத்தவரை, நிதியாண்டு 21-ஐ விட, நிதியாண்டு 22-ல் 58.7 சதவீதம் அதிகரித்திருந்தது.  2021 ஏப்ரல்-நவம்பர் வரையிலான காலத்தில் 8.8 லட்சமாக இருந்த சந்தாதாரர் எண்ணிக்கை 2022 ஏப்ரல் – நவம்பர் காலத்தில் 13.2 லட்சமாக  அதிகரித்தது. 

2022 டிசம்பர் 31 நிலவரப்படி, இ-ஷ்ரம் இணையப் பக்கத்தில்  மொத்தம் 28.5 கோடி முறைசாரா தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.  மொத்தம் பதிவு செய்தவர்களில் 52.8 சதவீதம் பேர் பெண்கள்.  அதேபோல், மொத்தம் பதிவு செய்தவர்களில் 61.7 சதவீதம் பேர் 18-40 வயதிற்கு உட்பட்டவர்கள்.  இந்த பதிவில் உத்தரப்பிரதேசம் அதிகபட்ச எண்ணிக்கையை  (29.1 சதவீதம்) கொண்டுள்ளது.   10 சதவீதத்துடன் பீகார் இரண்டாவது இடத்திலும், 9 சதவீதத்துடன் மேற்கு வங்கம் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும். https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1894913

***

AP/SMB/PK/GK(Release ID: 1895123) Visitor Counter : 282