சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் முதலாவது ஜி20 சுகாதார பணிக்குழுக் கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார், வெளியுறவு இணையமைச்சர் திரு எஸ் வி முரளிதரன் ஆகியோர் உரையாற்றினர்

Posted On: 18 JAN 2023 11:47AM by PIB Chennai

எந்தவித சுகாதார நெருக்கடியும், உலகின்  ஒருங்கிணைந்த பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்பதால், தொற்றுநோய்க்கான கொள்கையை நமது சுகாதாரக் கொள்கையின் ஒரு பகுதியாக உருவாக்க வேண்டும் என்று  மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார் தெரிவித்துள்ளார். ஜி20 இந்தியா தலைமைத்துவத்தின் கீழ், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று தொடங்கிய முதலாவது ஜி20 சுகாதார பணிக்குழுக் கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

பெருந்தொற்று தடுப்பு, தயார் நிலை மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் பல்வேறு துறைகள், ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம் என்று அவர் கூறினார். எதிர்கால சுகாதாரப் பேரிடரை எதிர்கொள்வதற்கு, சமுதாயத்தை வலுப்படுத்துவதும், அதிகாரமளித்தலும் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். கொவிட்-19 தொற்று இறுதி தொற்றாக இருக்காது என்று கூறிய அவர், இதன் மூலம் கற்றுக்கொண்ட பாடத்தை எதிர்கால தயார் நிலை, மீட்புக்கான திட்டங்களை உருவாக்குதல் ஆகியவற்றுக்கு பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நமது திறன்களை பல்வகைப்படுத்துவது அவசியம் என்று கூறிய அவர், எந்தவொரு சுகாதார நெருக்கடியையும் நாம் கூட்டாக எதிர்கொண்டு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய  வெளியுறவுத்துறை இணையமைச்சர் திரு எஸ் வி முரளிதரன், இந்தியாவின் வலிமையான மருத்துவ நடைமுறை மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளின் கலாச்சாரம் குறித்து எடுத்துரைத்தார். எந்தவித சுகாதார நெருக்கடியையும், திறம்பட எதிர்கொள்வதற்கு நமது திட்டத்தை சீரமைப்பது அவசியம் என்று பிரதிநிதிகளை அவர் வலியுறுத்தினார். எதிர்காலத்தில் எந்தவொரு சுகாதார சவாலையும் எதிர்கொள்ள நம்மைக் கூட்டாக தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

இந்தக் கூட்டத்தில்  நித்தி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி கே பால், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் திரு ராஜேஷ் பூஷன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

***

PKV/IR/RS/RR



(Release ID: 1891920) Visitor Counter : 191