பிரதமர் அலுவலகம்

கோவாவில் மோபா பசுமை சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் திறந்துவைத்தார்

Posted On: 11 DEC 2022 7:50PM by PIB Chennai

கோவாவில் மோபா பசுமை சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்துவைத்தார். கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் இந்த விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார். சுமார் 2870 கோடி ரூபாய் செலவில் நீடித்த உள்கட்டமைப்புடன் இந்த விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது.  சூரியசக்தி மின் நிலையம், பசுமை கட்டிடங்கள், ஓடு தளத்தில் எல்இடி விளக்குகள், மழைநீர் சேகரிப்பு, மறுசுழற்சி வசதிகளுடன் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை உள்ளிட்ட இதர வசதிகள் இந்த விமான நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், மோபாவில் பசுமை விமான நிலையம் திறக்கப்பட்டதற்காக நாட்டு மக்களுக்கும், கோவா மக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். மறைந்த மனோகர் பாரிக்கரின் பெயர் விமான நிலையத்திற்கு சூட்டப்பட்டுள்ளது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த விமான நிலையத்தில் ஆண்டிற்கு 40 லட்சம் பயணிகளை கையாள முடியும் என்று தெரிவித்த பிரதமர், எதிர்காலத்தில் மூன்றரை கோடி பயணிகளை கையாள முடியும் என்றும் கூறினார்.

முன்னதாக 70 வருடங்களில் 70 விமான நிலையங்கள் இருந்த நிலையில், கடந்த 8 வருடங்களில் 72 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.  உலக விமான போக்குவரத்து சந்தையில் இந்தியா 3-ம் இடம் வகிப்பதாகவும் அவர் தெரிவித்தார். உடான் திட்டத்தின் மூலம் சாதாரண குடிமக்களும் விமானப் பயணத்தை மேற்கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாக அவர் கூறினார். இத்திட்டத்தின் மூலம் 1 கோடிக்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த 8 வருடங்களில் நாட்டின் சுற்றுலா துறையை மேம்படுத்தவும், எளிதாக பயணம் செய்யப்படுவதை உறுதி செய்யவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பிரதமர் பட்டியலிட்டார். கடந்த 2015-ம் ஆண்டு இந்தியாவில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 14 கோடியாக இருந்தது என்றும், கடந்த வருடம் இது சுமார் 70 கோடியாக அதிகரித்தது என்றும் பிரதமர் கூறினார்.  

சுற்றுலாத்துறை மூலம் வேலைவாய்ப்பு மற்றும் சுயவேலைவாய்ப்பு கிடைப்பதாக கூறிய பிரதமர், கோவாவில் சுற்றுலா உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விவரித்தார்.

இந்நிகழ்ச்சியில் கோவா முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த், கோவா ஆளுநர் திரு பி எஸ் ஸ்ரீதரன் பிள்ளை, விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு ஜோதிர் ஆதித்ய சிந்தியா, கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் திரு ஸ்ரீபத் யசோ நாயக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

**************

SRI/IR/AG/IDS



(Release ID: 1882666) Visitor Counter : 145