பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மகாராஷ்டிராவில் ரூ. 75,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டியதுடன் முடிவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்


மகாராஷ்டிரா சம்ரித்தி மஹாமார்க்-ஐ தொடங்கி வைத்தார்

" மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்காக இன்று பதினொரு புதிய திட்டங்கள் உதயமாகிறது"

"உள்கட்டமைப்பு என்பது உயிரற்ற சாலைகள் மற்றும் மேம்பாலங்களை மட்டும் கொண்டதல்ல, அதன் விரிவாக்கம் மிகப் பெரியது"

"முன்பு ஒடுக்கப்பட்டவர்கள் இப்போது அரசின் முன்னுரிமையாக மாறியுள்ளனர்"

"குறுக்கு வழிகளைக் கொண்ட அரசியல் ஒரு நோயாகும்"

"குறுக்கு வழிகளைக் கடைப்பிடிக்கும் அரசியல் கட்சிகள் நாட்டின் வரி செலுத்துவோரின் மிகப்பெரிய எதிரிகள்"

" குறுக்குவழிகளுடன் எந்த நாடும் இயங்க முடியாது, நாட்டின் முன்னேற்றத்திற்கு நீண்டகால தொலைநோக்குடன் கூடிய நிரந்தர தீர்வு மிகவும் அவசியம்"

‘’நிரந்தர வளர்ச்சி மற்றும் நிரந்தர தீர்வு என்ற பொருளாதாரக் கொள்கையின் விளைவுதான் குஜராத் தேர்தல் முடிவுகள்’’

Posted On: 11 DEC 2022 2:43PM by PIB Chennai

மகாராஷ்டிராவில்  ரூ.75,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டியதுடன், முடிவடைந்த பல திட்டங்களை  நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதில் ரூ.1500 கோடி மதிப்பிலான தேசிய இரயில் திட்டங்கள், நாக்பூரில் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஒன் ஹெல்த், நாக் நதி மாசு குறைப்பு திட்டம் ஆகியவை அடங்கும். நிகழ்ச்சியின் போது, பிரதமர், சந்திராபூர் மத்திய பெட்ரோகெமிகல்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தை  (சிப்பெட்) நாட்டிற்கு அர்ப்பணித்தார். மேலும், 'ஹெமோகுளோபினோபதியின் ஆராய்ச்சி, மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தையும் அவர்  திறந்து வைத்தார்.

முன்னதாக, நாக்பூரிலிருந்து பிலாஸ்பூருக்கு செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் கொடியசைத்து துவக்கி வைத்ததுடன், நாக்பூர் மெட்ரோ முதல் கட்டப் போக்குவரத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.  'நாக்பூர் மெட்ரோ கட்டம்-II'க்கான அடிக்கல்லையும் நாட்டினார். நாக்பூரையும் ஷீரடியையும் இணைக்கும் 520 கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கிய இந்து ஹ்ருதய்சாம்ராட் பாலாசாகேப் தாக்கரே மகாராஷ்டிரா சம்ருத்தி மகாமார்க்கின் முதல் கட்டத்தையும் பிரதமர் திறந்து வைத்தார்.

ரூ.1575 கோடிக்கும் அதிகமான செலவில் உருவாக்கப்பட்டு வரும் நாக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையையும் பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்த மருத்துவமனை மகாராஷ்டிராவின் விதர்பா பகுதிக்கு நவீன சுகாதார வசதிகளை வழங்குவதுடன், கட்சிரோலி, கோண்டியா மற்றும் மெல்காட் போன்ற பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக உள்ளது.

இந்த நிகழ்ச்சியில்  சங்கஷ்டி சதுர்த்தியின் மங்களகரமான தருணத்தில்  கணபதி பகவானை வணங்கினார்.  மகாராஷ்டிராவின் நாக்பூரில் இருந்து வளர்ச்சிப் பணிகள் தொடங்கப்படும் இந்த சிறப்பான நாள் மக்களின் வாழ்க்கையை மாற்றும் என்று நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் கூறினார்.  மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்காக இன்று பதினொரு புதிய திட்டங்கள் உருவாகி வருகிறது, இது புதிய உயரங்களை அடையவும், புதிய திசையை வழங்கவும் உதவும் என்று அவர் கூறினார். அனைத்து 11 திட்டங்களையும் பட்டியலிட்ட பிரதமர் இந்தத் திட்டங்களுக்காக மகாராஷ்டிரா மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மகாராஷ்டிராவின் இரட்டை எஞ்சின் அரசின் வேலைகளின் வேகத்திற்கு இன்றைய திட்டங்கள் சான்றாகும் என்று பிரதமர் எடுத்துரைத்தார். சம்ருத்தி மஹாமார்க் நாக்பூருக்கும் மும்பைக்கும் இடையிலான தூரத்தை மட்டும் குறைக்காமல், மகாராஷ்டிராவின் 24 மாவட்டங்களை நவீன இணைப்புடன் இணைக்கிறது என்று அவர் கூறினார்.  வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது மட்டுமின்றி, இப்பகுதியில் உள்ள விவசாயிகள், யாத்ரீகர்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு இந்த இணைப்புத் திட்டங்கள் பயனளிக்கும் என்று பிரதமர் கூறினார்.

இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ள திட்டங்கள், உள்கட்டமைப்பு மேம்பாட்டின் முழுமையான பார்வையை சித்தரிப்பதாக பிரதமர் கூறினார். நாக்பூர் எய்ம்ஸ் சம்ரித்தி மஹாமார்க், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், நாக்பூர் மெட்ரோ என இந்த திட்டங்கள் அனைத்தும் அவற்றின் பண்புகளில் வேறுபடலாம், ஆனால் பூங்கொத்து வடிவில் ஒன்றிணைக்கும்போது, முழுமையான வளர்ச்சியின் சாராம்சம் ஒவ்வொரு குடிமகனையும் சென்றடையும் என்று அவர் கூறினார். இரட்டை எஞ்சின் அரசின் முயற்சிகளை பட்டியலிட்ட பிரதமர், அது சாமானியர்களுக்கு சுகாதாரத்தையும், விவசாயிக்கு அதிகாரம் அளித்தலையும் மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

 

 “ஒவ்வொரு ஏழைக்கும் ரூ.5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை அளிக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் நமது சமூக உள்கட்டமைப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டு. காசி, கேதார்நாத், உஜ்ஜயினி முதல் பந்தர்பூர் வரையிலான நமது நம்பிக்கைத் தலங்களின் வளர்ச்சி நமக்கு ஒரு எடுத்துக்காட்டு. கலாச்சார உள்கட்டமைப்பு, ஜன்தன் யோஜனா, 45 கோடிக்கும் அதிகமான ஏழை மக்களை வங்கி அமைப்புடன் இணைத்தல் ஆகியவை நமது  நிதி உள்கட்டமைப்புக்கு ஒரு எடுத்துக்காட்டு. நாக்பூர் எய்ம்ஸ் போன்ற நவீன மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளைத் திறப்பதற்கான பிரச்சாரம் மருத்துவ உள்கட்டமைப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டு’’ என்று அவர் மேலும் கூறினார். "உள்கட்டமைப்பு என்பது உயிரற்ற சாலைகள் மற்றும் மேம்பாலங்களை மட்டும் கொண்டதல்லஅதன் விரிவாக்கம் மிகவும் பெரியது" என்று அவர் மேலும் கூறினார்.

 

சுமார் ரூ. 400 கோடி  மதிப்பீட்டில் முப்பது முதல் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு அஸ்திவாரம் போடப்பட்ட கோசெகுர்த் அணையை பிரதமர் சுட்டிக்காட்டினார்.  அணையின் மதிப்பீடு தற்போது ரூ.18 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளதாக திரு மோடி சுட்டிக்காட்டினார். 2017ல் இரட்டை எஞ்சின் அரசு அமைந்த பிறகு, இந்த அணைக்கான பணிகள் முடுக்கி விடப்பட்டு, ஒவ்வொரு பிரச்னைக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இந்த அணை முழுமையாக நிரம்பியதில் பிரதமர் திருப்தி அடைவதாக தெரிவித்தார்.

 

விடுதலையின் அமிர்த காலத்தில், வளர்ந்த இந்தியா என்ற மாபெரும் உறுதியுடன் நாடு முன்னேறி வருகிறது. அதை அனைவரது கூட்டு பலத்தால் சாதிக்க முடியும்’’என்று பிரதமர் கூறினார். வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்புவதற்கான மந்திரம் நாட்டின் வளர்ச்சிக்காகவே  மாநிலத்தின் வளர்ச்சி என்பதாக இருக்க வேண்டும். வளர்ச்சி ஓரளவு மட்டும் இருந்தால்வாய்ப்புகளும் ஒரு அளவிலேயே இருக்கும்.  குறிப்பிட்ட சிலருக்கு மட்டும்  கல்வி  என்று இருந்தால்தேசத்தின் திறமை வெளிவர முடியாது என்று கூறினார். ஒரு சில நகரங்களுக்கு மட்டுமே என வளர்ச்சியும்  மட்டுப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக, நாட்டின் பெரும்பாலான மக்கள்  வளர்ச்சியின் முழுப் பலனையும் பெறவில்லை. அல்லது இந்தியாவின் உண்மையான பலம் வெளிவரவில்லை என்று பிரதமர் கூறினார். கடந்த 8 ஆண்டுகளில், 'சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ் மற்றும் சப்கா பிரயாஸ்' கொள்கைகளுடன் இந்த சிந்தனை மற்றும் அணுகுமுறை இரண்டும் மாறிவிட்டதாக பிரதமர் வலியுறுத்தினார். முன்பு தாழ்த்தப்பட்டவர்கள் இப்போது அரசின் முன்னுரிமை பிரிவில் உள்ளனர் என்றார்.  விதர்பா விவசாயிகளும் பிரதமர் கிசான் சம்மன் நிதியின் பெரிய பலனைப் பெற்றுள்ளனர் என்றும், கால்நடை மேய்ப்பவர்களுக்கு முன்னுரிமை அளித்து கிசான் கிரெடிட் கார்டு வசதியை இணைத்துள்ளது அரசு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

பின்தங்கியவர்களுக்கு முன்னுரிமை என்ற கருப்பொருளுடன் தொடர்ந்து, விற்பனையாளர்களுக்கு எளிதான கடன்கள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட ஆர்வமுள்ள மாவட்டங்கள் போன்ற நடவடிக்கைகளை பிரதமர் பட்டியலிட்டார். மராத்வாடா மற்றும் விதர்பா மாவட்டங்கள் உட்பட நாட்டில் 100க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வளர்ச்சியின் பல அளவுகோல்களில் பின்தங்கியுள்ளன என்று பிரதமர் தெரிவித்தார். "கடந்த 8 ஆண்டுகளாக, இந்த தாழ்த்தப்பட்ட பகுதிகளை விரைவான வளர்ச்சிக்கான புதிய ஆற்றல் மையங்களாக மாற்றுவதற்கு  பணியாற்றி வருகிறோம்" என்று அவர் கூறினார்.

 

இந்தியாவில் குறுக்குவழி அரசியல் தோன்றுவது குறித்து பிரதமர் அனைவருக்கும் எச்சரிக்கை விடுத்தார். அரசியல் கட்சிகள் அரசியல் நலனுக்காகவும், பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சி அமைக்கும் நோக்கிலும் குறுக்குவழிகளை கடைப்பிடித்தும் உழைத்து சம்பாதித்த மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்து வருவதாக அவர் எச்சரித்தார். அடுத்த 25 ஆண்டுகளில் நாடு வளர்ச்சியடைந்த நாடாக உருவெடுக்கும் வேளையில், சில அரசியல் கட்சிகள் தங்கள் சுயலாபத்திற்காக இந்தியாவின் பொருளாதாரத்தை அழிக்க விரும்புகின்றன என்று பிரதமர் கூறினார்.  முதல் தொழில் புரட்சியை பயன்படுத்திக் கொள்ள முடியாமல் இழந்த வாய்ப்புகள் குறித்தும், இரண்டாவது மூன்றாவது தொழில் புரட்சியின் போது பின்தங்கியது குறித்தும் பிரதமர் வருத்தம் தெரிவித்தார். நான்காவது தொழில் புரட்சிக்கான நேரம் வரும்போது, அதை இந்தியா தவறவிட முடியாது என்று அவர்  வலியுறுத்தினார். "எந்தவொரு நாடும் குறுக்குவழிகளுடன் இயங்க முடியாது, நீண்ட கால தொலைநோக்கு பார்வையுடன் கூடிய நிரந்தர தீர்வு நாட்டின் முன்னேற்றத்திற்கு மிகவும் முக்கியமானது" என்று திரு மோடி குறிப்பிட்டார்.

 

தென் கொரியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகள் ஒரு காலத்தில் ஏழை நாடுகளாகக் கருதப்பட்டது, பின் உள்கட்டமைப்பில் ஏற்றம் பெற்றதன் மூலம் தங்கள் தலைவிதியை மாற்றியமைத்து, இப்போது பொருளாதாரத்தின் மிகப்பெரிய மையங்களாக மாறியிருக்கிறது என்று  பிரதமர் கூறினார். இளம் தலைமுறையினருக்கு ஒளிமயமான எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்காக அரசின் கருவூலத்தின் ஒவ்வொரு பைசாவும் செலவிடப்படுவது காலத்தின் தேவை என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

 

'குறைவாக சம்பாதிப்பது, அதிகம் செலவு செய்வது' என்ற கொள்கையில் செயல்படும் சுயநல அரசியல் கட்சிகளை அம்பலப்படுத்த வேண்டும் என்றும் நாட்டின் இளைஞர்கள் மற்றும் வரி செலுத்துவோர்களுக்கு பிரதமர் வலியுறுத்தினார். இதுபோன்ற மோசமான கொள்கை வகுப்பால் ஒட்டுமொத்த பொருளாதாரமும் சரிந்த உலகின் பல நாடுகளை பிரதமர் எடுத்துரைத்தார். மறுபுறம், நாட்டில் நிலையான வளர்ச்சி மற்றும் நிலையான தீர்வுகளுக்கான முயற்சிகளுக்கு மக்கள் அளித்த ஆதரவுக்கு பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். குஜராத் தேர்தல் முடிவுகள் அதன் விளைவுதான் என்றும், நிரந்தர வளர்ச்சி  மற்றும் நிரந்தர தீர்வுக்கான பொருளாதாரக் கொள்கை அவசியம் என்றும்  என்று பிரதமர் மேலும் கூறினார்.

 

மகாராஷ்டிர முதல்வர் திரு ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிரா ஆளுநர் திரு பகத் சிங் கோஷ்யாரி, மகாராஷ்டிர துணை முதல்வர் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

பின்னணி

 

நாக்பூர் மெட்ரோ

 

நகர்ப்புற இயக்கத்தில் புரட்சியை ஏற்படுத்தும் மற்றொரு படிநிலையாக, பிரதமர் 'நாக்பூர் மெட்ரோ முதல் கட்டத்தை' நாட்டுக்கு அர்ப்பணித்தார். காப்ரியில் இருந்து ஆட்டோமோட்டிவ் சதுக்கம் (ஆரஞ்சு லைன்) மற்றும் பிரஜாபதி நகரிலிருந்து லோக்மான்யா நகர் (அக்வா லைன்) - காப்ரி மெட்ரோ ரயில் நிலையத்தில் இரண்டு மெட்ரோ ரயில்களையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நாக்பூர் மெட்ரோவின் முதல் கட்டம் ரூ.8650 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. மெட்ரோ இரண்டாம் கட்டத்தின் அடிக்கல்லையும் பிரதமர் நாட்டினார். இத்திட்டம் ரூ.6700 கோடிக்கும் அதிகமான செலவில் உருவாக்கப்படும்.

 

ரயில் திட்டங்கள்

 

நாக்பூர் ரயில் நிலையத்தில், நாக்பூர் மற்றும் பிலாஸ்பூர் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

 

நாக்பூர் ரயில் நிலையம் மற்றும் அஜ்னி ரயில் நிலையங்கள் முறையே சுமார் ரூ.590 கோடி மற்றும் ரூ.360 கோடி செலவில் மறுவடிவமைப்பு செய்ய பிரதமர் அடிக்கல் நாட்டினார். அரசு பராமரிப்புக் கிடங்கு, அஜ்னி (நாக்பூர்) மற்றும் நாக்பூரின் கோஹ்லி-நார்கெர் பகுதி-இடார்சி மூன்றாம் வரித் திட்டத்தை நாட்டிற்கு பிரதமர் அர்ப்பணித்தார். இந்த திட்டங்கள் முறையே சுமார் ரூ.110 கோடி மற்றும் சுமார் ரூ.450 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளன.

 

சம்ருத்தி மஹாமார்க்

 

நாக்பூரையும் ஷீரடியையும் இணைக்கும் 520 கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கிய இந்து ஹ்ருதய்சாம்ராட் பாலாசாஹேப் தாக்கரே மகாராஷ்டிரா சம்ருத்தி மகாமார்க்கின் முதல் கட்டத்தை பிரதமர் திறந்து வைத்தார்.

 

சம்ருத்தி மகாமார்க் அல்லது நாக்பூர்-மும்பை சூப்பர் கம்யூனிகேஷன் எக்ஸ்பிரஸ்வே திட்டம், நாடு முழுவதும் மேம்படுத்தப்பட்ட இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு பற்றிய பிரதமரின் பார்வையை நனவாக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாகும். 701 கிமீ விரைவுச் சாலை - சுமார் ரூ. 55,000 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது – இது இந்தியாவின் மிக நீளமான விரைவுச் சாலைகளில் ஒன்றாகும், இது மகாராஷ்டிராவின் 10 மாவட்டங்கள் மற்றும் அமராவதி, அவுரங்காபாத் மற்றும் நாசிக் ஆகிய முக்கிய நகர்ப்புற பகுதிகள் வழியாக செல்கிறது. இந்த விரைவுச் சாலையானது அருகிலுள்ள 14 மாவட்டங்களின் இணைப்பை மேம்படுத்தவும் உதவும், இதனால் விதர்பா, மராத்வாடா மற்றும் வடக்கு மகாராஷ்டிரா பகுதிகள் உட்பட மாநிலத்தின் சுமார் 24 மாவட்டங்களின் வளர்ச்சிக்கு உதவும்.

 

பிரதமரின் விரைவு சக்தியின் கீழ் ஒருங்கிணைந்த திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு இணைப்புத் திட்டங்களை செயல்படுத்துவதற்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை வலியுறுத்தி, சம்ருத்தி மகாமார்க் தில்லி மும்பை விரைவுச் சாலை, ஜவஹர்லால் நேரு துறைமுகம், அஜந்தா எல்லோரா குகைகள், ஷீரடி, வெருல், லோனார் போன்ற சுற்றுலா இடங்களுடன் இணைக்கப்படும். . மகாராஷ்டிராவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிப்பதில் சம்ருத்தி மஹாமார்க் முக்கிய பங்காற்றும்.

 

எய்ம்ஸ் நாக்பூர்

 

நாக்பூரின் எய்ம்ஸ் மருத்துவமனையை நாட்டுக்கு அர்ப்பணிப்பதன் மூலம், நாடு முழுவதும் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான பிரதமரின் நோக்கம் வலுப்படும். 2017- ம் ஆண்டு ஜூலை மாதம் பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த மருத்துவமனை, மத்திய அரசின் பிரதமரின் ஸ்வஸ்த்ய சுரக்ஷா யோஜனாவின் கீழ் நிறுவப்பட்டது.

 

அதிநவீன வசதிகளுடன் ரூ. 1575 கோடிக்கும் அதிகமான செலவில் உருவாக்கப்பட்டு வரும் இந்த மருத்துவமனை  மகாராஷ்டிராவின் விதர்பா பகுதிக்கு நவீன சுகாதார வசதிகளை வழங்குகிறது. கட்சிரோலி, கோண்டியா மற்றும் மெல்காட் போன்ற பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக உள்ளது.

 

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஒன் ஹெல்த், நாக்பூர்

 

நாக்பூரில் தேசிய ஒரு சுகாதார நிறுவனத்திற்கு) பிரதமர் அடிக்கல் நாட்டியது, 'ஒரே சுகாதாரம்' அணுகுமுறையின் கீழ் நாட்டில் திறன் மற்றும் உள்கட்டமைப்பைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு நடவடிக்கையாகும்.

 

மனிதர்களின் ஆரோக்கியம் விலங்குகளின் ஆரோக்கியம் ஆகியவை  சுற்றுச்சூழலுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதை 'ஒன் ஹெல்த்' அணுகுமுறை அங்கீகரிக்கிறது.  நாடு முழுவதும் 'ஒன் ஹெல்த்' அணுகுமுறையில் ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டை மேம்படுத்த ஒரு ஊக்கியாக இது செயல்படும்.

 

மற்ற திட்டங்கள்

 

நாக்பூரில் நாக் நதியின் மாசுபாட்டை குறைக்கும் திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். தேசிய நதிகள் பாதுகாப்புத் திட்டத்தின்  கீழ் இந்த திட்டம் – ரூ.1925 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

 

விதர்பா பகுதியில், குறிப்பாக பழங்குடியின மக்களில் ஒருவகை காய்ச்சல்  நோயின் பாதிப்பு ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது. இந்த நோய் தலசீமியா போன்ற பிற நோய்களுடன் சேர்ந்து நாட்டில் குறிப்பிடத்தக்க நோய்ச் சுமையை ஏற்படுத்துகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காணஆராய்ச்சி, மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் அடிக்கல்லை பிரதமர் நாட்டினார்

சந்திராபூரில் உள்ள சிப்பெட்  நிறுவனத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். பாலிமர் மற்றும் அதைச் சார்ந்த தொழில்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய திறமையான மனித வளங்களை உருவாக்குவதை இந்த நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது

******

SRI / PKV / DL


(Release ID: 1882513) Visitor Counter : 226