பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பெங்களூரூ தொழில்நுட்ப உச்சிமாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 16 NOV 2022 11:02AM by PIB Chennai
தொழில்நுட்ப உலகின் தலைவர்களே, சர்வதேச பிரதிநிதிகளே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் வணக்கம், இந்தியாவிற்கு வருக, எங்கள் கன்னட நாட்டுக்கு வருக, எங்கள் பெங்களூருக்கு வருக என வரவேற்கிறோம்.

 

பெங்களூரூ தொழில்நுட்ப உச்சிமாநாட்டில் மீண்டும் ஒருமுறை உரையாற்றுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கர்நாடகத்தின் எழுச்சிமிகு கலாச்சாரம், மக்களின் அன்பான உபசரிப்பு ஆகியவற்றை நீங்கள் அனைவரும் விரும்பி அனுபவித்திருப்பீர்கள் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.

நண்பர்களே..

தொழில்நுட்பம் மற்றும் சிந்தனை தலைமையின் இல்லமாக பெங்களூரு திகழ்கிறது. இது அனைவரையும் அரவணைக்கும் நகரமாகும். இது ஒரு புதுமையான நகரமும் கூட. பல ஆண்டுகளாக இந்தியாவின் புதிய கண்டுபிடிப்பு குறியீட்டு தரவரிசையில் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது.

நண்பர்களே..

இந்தியாவின் தொழில்நுட்பம், புத்தாக்கம் ஆகியவை ஏற்கனவே உலகை கவர்ந்துள்ளது. ஆனால் எதிர்காலம் நமது நிகழ்காலத்தை விட மிகப் பெரியதாகும். ஏனெனில் இந்தியா புதுமையில் நாட்டம் கொண்ட இளைஞர்கள், தொழில்நுட்ப பயன்பாடு அதிகரிப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

நண்பர்களே..

இந்திய இளைஞர்களின் ஆற்றலை உலகம் முழுவதும் அறிந்துள்ளது. தொழில்நுட்ப உலகமயமாக்கல், திறமை உலகமயமாக்கல், சுகாதாரம், மேலாண்மை, நிதி ஆகியவற்றை அவர்கள் உறுதி செய்துள்ளனர். பல துறைகளில் இந்திய இளைஞர்கள் முன்னணி வகிப்பதை நீங்கள் காணலாம். நாங்கள் உலக நலனுக்காக எங்களது திறமையைப் பயன்படுத்தி வருகிறோம். இந்தியாவில் கூட அவர்களது தாக்கத்தை  கண்கூடாக காண்கிறோம். உலக புதுமை குறியீட்டில் இந்த ஆண்டு நாற்பதாவது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது. 2015-ல் நாங்கள் 81-வது இடத்தில் இருந்தோம். இந்தியாவில் யுனிகான் ஸ்டார்ட்அப்களின் எண்ணிக்கை 2021-ஆம் ஆண்டு முதல் இருமடங்காக உயர்ந்துள்ளது. நாங்கள் இப்போது உலகின் 3-வது பெரிய ஸ்டார்ட்அப் மையமாக மாறியுள்ளோம். எங்களிடத்தில் 81,000-க்கும் அதிகமாக அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட்அப்கள் உள்ளனர். நூற்றுக்கணக்கான சர்வதேச நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் இந்தியாவில் உள்ளன. இந்தியாவின் திறமையால்தான் இது சாத்தியமாகியுள்ளது.

நண்பர்களே..

இந்திய இளைஞர்கள் தொழில்நுட்பத்தை எளிதில் அணுகுவது அதிகரித்திருப்பதால் அவர்கள் அதிகாரம் பெற்று வருகின்றனர். நாட்டில் மொபைல் மற்றும் தரவுப் புரட்சி நடந்து வருகிறது. கடந்த 8 ஆண்டுகளில் அகண்ட அலைவரிசை இணைப்புகள் 60 மில்லியனிலிருந்து 810 மில்லியனாக உயர்ந்துள்ளது. ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 150 மில்லியனிலிருந்து 750 மில்லியனாக உயர்ந்துள்ளது. இணையதள வளர்ச்சி நகர்ப்புற பகுதிகளை விட கிராமப்புற பகுதிகளில் வேகம் பெற்றுள்ளது. பெருமளவுக்கு மக்கள் தகவல் இணைப்பைப் பெற்றுள்ளனர்.

நண்பர்களே..

நீண்டகாலமாக தொழில்நுட்பம் ஒரு பிரிவினருக்காக மட்டும் இருந்து வந்தது. உயர் மற்றும் வலுவான பிரிவினருக்கானது என அது கருதப்பட்டது. ஆனால் தொழில்நுட்பத்தை எவ்வாறு ஜனநாயகப்படுத்துவது என்பதை இந்தியா காட்டியுள்ளது. மனிதர்களுக்கு தொழில்நுட்பத்தை எப்படி கொண்டு செல்வது என்பதை இந்தியா காண்பித்துள்ளது. இந்தியாவில் சமத்துவம் மற்றும் அதிகாரமளித்தலின் சக்தியாக தொழில்நுட்பம் திகழ்கிறது. உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் சுமார் 200 மில்லியன் குடும்பங்களுக்குப் பாதுகாப்பை வழங்குகிறது. 600 மில்லியன் மக்கள் என்பது இதன் பொருளாகும். இந்த திட்டம் தொழில்நுட்ப தளத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தியா உலகின் மிகப்பெரிய கொவிட் 19 தடுப்பூசி இயக்கத்தை நடத்தியது. தொழில்நுட்ப அடிப்படையிலான கோவின் தளம் வாயிலாக இது நடைபெற்றது. இப்போது சுகாதாரத் துறையிலிருந்து நாம் கல்விக்கு செல்வோம்.

திறந்தநிலைப் படிப்புகளுக்கான மிகப்பெரிய ஆன்லைன் களஞ்சியங்களில் ஒன்றை இந்தியா கொண்டுள்ளது. பல்வேறு பாடங்களில் ஆயிரக்கணக்கான படிப்புகள் உள்ளன. 10 மில்லியனுக்கும் அதிகமாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஆன்லைன் மூலம் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. எங்களது தரவுக் கட்டணங்கள் உலகிலேயே மிகவும் குறைவானதாகும். கொவிட் 19 பெருந்தொற்று காலத்தில் குறைந்த தரவுக் கட்டணங்கள், ஆன்லைன் வகுப்புகளில் பங்கெடுக்க ஏழை மாணவர்களுக்கு உதவியது. இது இல்லாவிட்டால் இரண்டு மதிப்புமிக்க ஆண்டுகளை அவர்கள் இழந்திருப்பார்கள்.

நண்பர்களே..

வறுமைக்கு எதிரான போரில் இந்தியா தொழில்நுட்பத்தை ஆயுதமாக பயன்படுத்தி வருகிறது. ஸ்வமிதா திட்டத்தின்கீழ், கிராமப்புற பகுதிகளில் நிலங்களை வரையறுக்க ட்ரோன்களை நாம் பயன்படுத்தி வருகிறோம். இதன் தொடர்ச்சியாக சொத்து அட்டைகள் மக்களுக்கு வழங்கப்படுகின்றன. இது நிலத்தகராறுகளை குறைக்கிறது. ஏழைகள் நிதி சேவைகளை அணுகி கடன் பெற இது உதவுகிறது. கொவிட் 19 பெருந்தொற்று காலத்தில் ஒரு பிரச்சினையில் சிக்கி பல நாடுகள் திண்டாடி வந்தன. மக்களுக்கு உதவி தேவை என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். பயன் பரிமாற்றம் நன்மை பயக்கும் என அவர்கள் அறிந்திருந்தனர். ஆனால் பயன்களை மக்களுக்குக் கொண்டு செல்லும் உள்கட்டமைப்பை அவர்கள் பெற்றிருக்கவில்லை. ஆனால் இந்தியா நன்மைக்கான ஆற்றலாக தொழில்நுட்பத்தை எப்படி பயன்படுத்துவது என்பதை உலகிற்கு காட்டியது. எங்களது ஜன்தன், ஆதார், மொபைல் இணைப்பு, நேரடி பரிமாற்ற பயன்களின் சக்தியை எங்களுக்கு வழங்கியது. தகுதியுள்ள அங்கீகரிக்கப்பட்ட பயனாளிகளுக்கு பயன்கள் நேரடியாக சென்றன. கோடிக்கணக்கான ரூபாய் ஏழைகளின் வங்கிக் கணக்குகளை சென்றடைந்தது. பெருந்தொற்று காலத்தில் சிறு வியாபாரங்கள் குறித்து ஒவ்வொரும் கவலைப்பட்டனர். நாங்கள் அவர்களுக்கு ஒருபடி முன்னே சென்று உதவினோம். தெருவோர வியாபாரிகள் தங்கள் தொழிலை மீண்டும் தொடங்குவதற்கான முதலீட்டை வழங்கி நாங்கள் உதவினோம். டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்வோருக்கு ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டன. இது டிஜிட்டல் பரிவர்த்தனையை அவர்களுடைய வாழ்க்கை முறையாக மாற்றியது.

நண்பர்களே..

வெற்றிகரமான இ-வணிகதளத்தை அரசு நடத்தியது என்பதை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? இது இந்தியாவில் நடந்தது. நாங்கள் ஜிஇஎம் என்கிற அரசு இ-சந்தையை கொண்டுள்ளோம். இது சிறு வணிகர்கள் மற்றும் சிறுதொழில்கள் நிறுவனங்கள் அரசின் தேவைகளை பூர்த்தி செய்யும் தளமாகும். பெரிய வாடிக்கையாளரை சிறு தொழில் நிறுவனங்கள் கண்டுபிடிப்பதற்கு தொழில்நுட்பம் உதவியது. இது ஊழலுக்கான வாய்ப்பைக் குறைத்தது. இதேபோல தொழில்நுட்பம் ஆன்லைன் டெண்டர் முறைக்கும் உதவியது. இதனால் திட்டங்கள் வேகமாக செயல்படவும், வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கவும் முடிந்தது. கடந்த ஆண்டு 1 டிரில்லியன் ரூபாய் மதிப்பிலான கொள்முதல் செய்யப்பட்டது.

நண்பர்களே..

புத்தாக்கம் எனப்படும் புதிய கண்டுபிடிப்புகள் மிகவும் முக்கியமானதாகும். ஒருமைப்பாட்டு ஒத்துழைப்புடன் அது நிகழும்போது பெரிய சக்தியாக உருமாறுகிறது. குறைபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், ஒத்துழைப்பு மற்றும் சேவையை உறுதி செய்யவும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. பகிரப்பட்ட தளத்தில் குறைபாடுகளுக்கு இடமில்லை. பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டத்தை இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். கடந்த சில ஆண்டுகளில் உள்கட்டமைப்புக்கு இந்தியா நூறு டிரில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளது. எந்தவொரு உள்கட்டமைப்பு திட்டத்திலும் சம்பந்தப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. இந்தியாவின் பாரம்பரியமாக பெருந்திட்டங்கள் தாமதமாவது வழக்கமான ஒன்று. செலவுகள் அதிகரிப்பதும், காலஅவகாசம் நீட்டிக்கப்படுவதும் வழக்கம். ஆனால் தற்போது விரைவு சக்தி பகிரப்பட்ட தளத்தை நாங்கள் கொண்டுள்ளோம். மத்திய அரசு, மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகங்கள், பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து ஒத்துழைக்க முடியும். மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை ஒவ்வொரும் அறிவார்கள். நிலப்பயன்பாடு, நிறுவனங்கள் உள்ளிட்ட திட்டங்கள் தொடர்பான தகவல்கள், ஒரேஇடத்தில் கிடைக்கும். ஆகவே, சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் இந்த தரவுகளை ஒரேசமயத்தில் காணமுடியும். இது ஒத்துழைப்பை மேம்படுத்துவதுடன், பிரச்சினைகள் வருவதற்கு முன்பே தீர்வு காண உதவுகிறது. இது ஒப்புதல்களையும், அனுமதிகளையும் விரைவுபடுத்துகிறது.

நண்பர்களே..

இந்தியாவில் சிகப்பு நாடா முறைக்கு இனி இடமில்லை. அந்நிய நேரடி முதலீட்டு சீர்திருத்தமாக இருந்தாலும், அல்லது ட்ரோன் விதிகளை தாராளமயமாக்குவதாக இருந்தாலும், அல்லது செமிகண்டக்டர் துறையில் நடவடிக்கைகளாக இருந்தாலும், அல்லது பல்வேறு துறைகளில் உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டங்களாக இருந்தாலும், அல்லது எளிதாக தொழில்புரிதல் அதிகரிப்பதாக இருந்தாலும், இவை அனைத்திலும் முதலீட்டாளர்களுக்கு சிகப்புக் கம்பளம் விரிக்கப்படுகிறது என்ற பெயரை  இந்தியா தற்போது பெற்றுள்ளது.

நண்பர்களே..

இந்தியா ஏராளமான ஒன்றுபட்ட சிறந்த அம்சங்களைக் கொண்டுள்ளது. உங்களது முதலீடுகளும், எங்களது புத்தாக்கமும் அதிசயங்களை நிகழ்த்தக் கூடும். உங்களது நம்பிக்கையும், எங்களுடைய தொழில்நுட்பத் திறமையும் இதனை சாத்தியமாக்கும்.பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் உலகுக்கே நாங்கள் முன்னோடியாக இருப்பதால் உங்கள் அனைவரையும் எங்களுடன் சேர்ந்து உழைக்க வருமாறு நான் அழைப்பு விடுக்கிறேன். பெங்களூரு தொழில்நுட்ப உச்சிமாநாட்டில் உங்களுடைய விவாதங்கள் சுவையானதாகவும், நலன் பயப்பதாகவும் இருக்கும் என உறுதியாக நம்புகிறேன். அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

**************

MSV/PKV/KRS

(Release ID: 1876323)



(Release ID: 1876489) Visitor Counter : 179