பிரதமர் அலுவலகம்

குஜராத்தின் லோத்தலில் தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தை ஆய்வு செய்த போது காணொலி காட்சி மூலம் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

Posted On: 18 OCT 2022 7:49PM by PIB Chennai

வணக்கம்!

வரலாற்று சிறப்புமிக்க உலகப் பாரம்பரிய லோத்தலில் நீங்கள் அனைவரும் நேரடியாக நிகழ்வில் பங்கேற்றிருக்கிறீர்கள். ஆனால் நான் வெகு தூரத்தில் உள்ள தில்லியிலிருந்து  தொழில்நுட்பத்தின் மூலம் உங்களுடன் இணைக்கப்பட்டுள்ள போதும், உங்களிடையே நான் இருப்பதாக உணர்கிறேன். சற்று நேரத்திற்கு முன், ட்ரோன் மூலம் தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தில் பல்வேறு திட்டங்களை நான் பார்வையிட்டு அவற்றின்  முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தேன். இந்தத் திட்டத்தின் முன்னேற்றம் வெகு வேகமாக இருப்பது குறித்து நான் திருப்தி அடைந்துள்ளேன்.

நண்பர்களே,

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் கடல்வழி வணிகத்தை  கொண்டிருந்த லோத்தல், தோலாவிரா போன்ற மகத்தான பாரம்பரிய இடங்களை நாம் மறந்துவிட்டோம் தென்பகுதியிலிருந்த சேர, சோழ, பாண்டிய பேரரசுகள்  கடல்சார் வளங்களை அறிந்து அதற்கு மிக உயர்ந்த இடத்தை அளித்திருந்தனர். இவர்கள் தங்களின் கடல்சார் அதிகாரத்தை விரிவுபடுத்தியது மட்டுமின்றி வெற்றிகரமாக  தொலைதூர நாடுகளுக்கும் வர்த்தகத்தை கொண்டுசென்றனர்.  சத்ரபதி சிவாஜி மகராஜ் வலுவான  கடற்படையை உருவாக்கி அந்நிய ஆக்ரமிப்பாளர்களை எதிர்த்து போரிட்டார்.

இத்தகைய பெருமைமிகு இந்தியாவின் வரலாற்று அத்தியாயம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் கட்ச் பகுதி, கப்பல் கட்டும் தளத்தை கொண்டிருந்தது என்பதை நீங்கள் கற்பனை செய்து பார்த்ததுண்டா? பிரமாண்டமான கப்பல்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. பாரம்பரியம் குறித்த மாறுபட்ட கருத்துக்கள் நாட்டிற்கு ஏராளமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.  இந்த நிலையை மாற்றுவது அவசியமாகும். எனவே, தோலோவிராவையும், லோத்தாலையும் ஒரு காலத்தில் இருந்த அதே புகழுடன் இந்திய பெருமிதத்தின் மையங்களாக மாற்ற நாங்கள் முடிவு செய்தோம். இன்று அந்த இயக்கம் அதிக வேகத்தில், நடைபெற்று வருவதை, நாங்கள் காண்கிறோம்.

நண்பர்களே,

லோத்தாலில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள பாரம்பரிய வளாகம்  சாமானிய மக்களும் எளிதாக இந்திய வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்படுகிறது. இது உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மையமாக மாறும் என்று நான் நம்புகிறேன்.  இது ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளையும், சுயவேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். எதிர்காலத்தில் மற்ற நகரங்களிலிருந்து கூடுதலான மக்கள் இங்கே வருவார்கள்.  இது  சுற்றுலாவுக்கு உத்வேகத்தை அளிக்கும்.

நண்பர்களே,

கடந்த 8 ஆண்டுகளில் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள பாரம்பரிய இடங்கள், நமது பாரம்பரியத்தின் பெருமையை வெளிப்படுத்துகின்றன. லோத்தலில் கட்டமைக்கப்படும் தேசிய கடல்சார் வளாகம் இந்தியர்கள் அனைவரையும் பெருமிதத்தால் நிறைக்கும் என்று நான் நம்புகிறேன்.  லோத்தாலில் அமர்ந்துள்ள சகோதர சகோதரிகள் அனைவருரக்கும் மகிழ்ச்சியான வளமிக்க தீபாவளி நல்வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.  தீபாவளிக்கு அடுத்த நாள் வருகின்ற குஜராத்தின்  புத்தாண்டு விழாவிற்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி.

*************

SMB/GEE/SM/IDS
 



(Release ID: 1869659) Visitor Counter : 101