இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

வங்கதேச இளைஞர் பிரதிநிதிகள் குழுவுடன் மத்திய அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் கலந்துரையாடல்

Posted On: 20 OCT 2022 9:02AM by PIB Chennai

100 பேர் கொண்ட வங்கதேச இளைஞர் பிரதிநிதி குழுவிற்கு 2022 அக்டோபர் 12 முதல் 19 வரை மத்திய இளைஞர் விவகாரங்கள் துறை வரவேற்பு அளித்தது. இறுதி நாளான நேற்று மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் வங்கதேசத்திலிருந்து வந்திருந்த இளைஞர் பிரதிநிதிகளுக்கு புதுதில்லியில் இரவு விருந்து வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை இணையமைச்சர் திரு நிசித் பிரமானிக்கும் கலந்து கொண்டார்.

மத்திய அமைச்சர்களுடனான கலந்துரையாடலின் போது இந்திய அரசின் இந்த ஏற்பாட்டிற்கு வங்கதேச பிரதிநிதிகள் பாராட்டு தெரிவித்தனர். வங்கதேசம் மற்றும் இந்திய கலைஞர்களின்  கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இந்தியாவில் ஒரு வார காலம் தங்கியிருந்த அனுபவங்களைப் பிரதிநிதிகள் பகிர்ந்ததை கலந்துரையாடலின் போது திரு அனுராக் சிங் தாக்கூர் கேட்டறிந்தார். இந்தியாவும், வங்கதேசமும் நீண்ட காலமாக பொதுவான கலாச்சாரம், பொருளாதாரம் மற்றும் அரசியல் வரலாற்றைக் கொண்டுள்ளன. இரு நாடுகளுக்கு இடையே உள்ள சிந்தனைகள், கலாச்சாரம், அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளைப் பகிர்வதற்கான வாய்ப்பாக வங்கதேச பிரதிநிதிகளின் பயணம் அமைந்தது.

 

அக்டோபர் 14-ஆம் தேதி இந்திய குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்துப் பேசிய வங்கதேச இளைஞர் பிரதிநிதிகள் குழுவினர், ஆக்ராவின் தாஜ்மகால், பெங்களூருவில் உள்ள இந்திய மேலாண்மை கழகம் மற்றும் மைசூருவில் உள்ள இன்ஃபோசிஸ் உட்பட ஏராளமான கலாச்சார, கல்வி மற்றும் தொழில்துறை வளாகங்களை நேரில் சென்று பார்வையிட்டதோடு, கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களுடனும் கலந்துரையாடினார்கள்.

 

**************

 

BG/SM/IDS



(Release ID: 1869527) Visitor Counter : 134