பிரதமர் அலுவலகம்

குஜராத்தின் ஜூனாகத்தில் ரூ.3580 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்


“இரட்டை என்ஜின் அரசு வளர்ச்சிப் பணிகளில் இரட்டை வேகத்தை கொண்டு வந்துள்ளது”

“விவசாயக் கடன் அட்டை வாழ்க்கையை மிகவும் எளிதாக்கியுள்ளது, குறிப்பாக நமது கால்நடை பராமரிப்புப் பணியாளர்கள் மற்றும் மீனவர் சமுதாயத்தினருக்கு”

“துறைமுகங்களுக்கான முன்முயற்சியை மட்டும் அரசு மேற்கொள்ளவில்லை, துறைமுகத்தை மையப்படுத்திய வளர்ச்சியையும் செயல்படுத்துகிறது”

“தொழில் தொடங்குவதற்கான அனைத்து நடவடிக்கையிலும் இளைஞர்களுக்கு அரசு உதவி செய்கிறது”

“அடிப்படை கட்டமைப்பின் வளர்ச்சி பெருமளவில் சுற்றுலாவை ஊக்கப்படுத்துகிறது”

“சில அரசியல் கட்சிகள் தங்களின் அரசியல் நிலைப்பாட்டுக்காக குஜராத்தை குறைகூறுகின்றன”

“சர்தார் படேலின் ஒரே இந்தியா- உன்னத இந்தியா உணர்வையும், கனவுகளையும் நீர்த்துப் போக நாம் அனுமதிக்கக்கூடாது”

Posted On: 19 OCT 2022 5:44PM by PIB Chennai

குஜராத்தின் ஜூனாகத்தில் ரூ.3580 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர்  திரு நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.  ஜூனாகத்தின் இந்த திட்டங்கள், கடலோர நெடுஞ்சாலைகளை மேம்படுத்துதல், இரண்டு நீர் விநியோகத் திட்டங்கள், வேளாண் பொருட்களை இருப்பு வைப்பதற்கான கிடங்கு கட்டுமானம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். மாதவ்பூரில் ஸ்ரீ கிருஷ்ண ருக்மணி ஆலயத்தின் ஒட்டுமொத்த மேம்பாடு, கழிவுநீர் அகற்றுதல் மற்றும் குடிநீர் விநியோகத் திட்டங்கள், போர்பந்தர் மீன்பிடித் துறைமுகத்தின் தூர்வாரும் பணி பராமரிப்பு ஆகியவற்றுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.  கீர் சோம்நாத்தில் மத்வாட் மீன்பிடித் துறைமுக மேம்பாடு உள்ளிட்ட 2 திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்வில் திரண்டிருந்தோர் இடையே உரையாற்றிய பிரதமர், தீபாவளியும் தந்தேராசும் விரைவாகவே வந்திருப்பதால், ஜூனாகத் மக்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளில் தீவிரமாக உள்ளனர் என்று குறிப்பிட்டார்.  இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ள அனைவருக்கும், தங்களின் ஆசிகளை வழங்கியிருக்கும் மக்களுக்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார். 

மத்திய அரசில் பொறுப்புகளை ஏற்பதற்காக குஜராத்தில் இருந்து சென்றுவிட்டபோதும், அதே மாண்புகள் மற்றும் பாரம்பரியங்களுடன் குஜராத்தின் நலனுக்கு முதலமைச்சர் பூபேந்திர பட்டேலும் அவரது குழுவினரும் பணியாற்றுவதை பிரதமர் எடுத்துரைத்தார்.  குஜராத் தற்போது அதிவேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் மிகப் பரந்த கடற்கரை பகுதி பற்றி குறிப்பிட்ட பிரதமர், குஜராத்தில் மிகப்பெரிய கடற்கரை இருப்பதை சுட்டிக்காட்டினார்.  கடந்த கால அரசுகள் கடல்களை சுமை போல கருதியதையும் அதன் தூய்மையான காற்றை விஷமாக்கியதையும் நினைவுகூர்ந்த திரு மோடி, அந்த காலம் மாறிவிட்டது என்றார்.    அதே கடல்கள் இப்போது நமது  முயற்சிகளால் பயன்களை அறுவடை செய்கின்றன என்று அவர் கூறினார். 

இரட்டை என்ஜின் அரசு  வளர்ச்சிப் பணிகளில்  இரட்டை வேகத்தை கொண்டு வந்துள்ளது என்று கூறிய பிரதமர், இன்றைய தினமே 3 மீன்பிடித் துறைமுகங்களுக்கான பணிகள் தொடங்கியுள்ளன என்றார்.  முன்னெப்போதும் இல்லாத வகையில் விவசாயிகளும் கால்நடை பராமரிப்புப் பணியாளர்களும் மீனவர் சமுதாயத்தினரும் விவசாயக் கடன் அட்டைகளை பெற்றுள்ளனர்.  இதனால், வங்கிகளில் இருந்து கடன் பெறுவதற்கான நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.  இதன்மூலம் 3.5 கோடி பேர் பயனடைகிறார்கள் என்று திரு மோடி மேலும் தெரிவித்தார். 

துறைமுகங்களுக்கான முன்முயற்சியை மட்டும் அரசு மேற்கொள்ளவில்லை, துறைமுகத்தை மையப்படுத்திய வளர்ச்சியையும் செயல்படுத்துகிறது என்று கூறிய பிரதமர், ஜூனாகத் தவிர புதிய கடலோர நெடுஞ்சாலை, போர்பந்தர், ஜாம் நகர், தேவ்பூமி துவாரகா, மார்பி ஆகிய மாவட்டங்களில் இருந்து மத்திய மற்றும் தெற்கு குஜராத் வழியாக செல்கிறது என்றார்.  இது குஜராத்தின் ஒட்டுமொத்த கடற்கரை பகுதியின் போக்குவரத்து தொடர்பை வலுப்படுத்தும் என்று அவர் தெரிவித்தார். 

அடிப்படை கட்டமைப்பின் வளர்ச்சி பெருமளவில் சுற்றுலாவை மேம்படுத்துகிறது என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.  தற்போது மிகப்பெரிய இழுவை போக்குவரத்து உள்ளவற்றில் ஒன்றாக இந்தப் பகுதியும் உள்ளது என்று அவர் கூறினார். பல ஆண்டுகளுக்குப் பின் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கெசோட் விமான நிலையத்தில் இருந்து மீண்டும் விமானங்கள் பறக்கத் தொடங்கின என்று பிரதமர் குறிப்பிட்டார்.  இந்த விமான நிலையம் மேலும் மேம்படுத்தப்பட்டு சரக்குப் போக்குவரத்து வசதி செய்யப்பட்டால், இந்தப் பகுதியில் உற்பத்தியாகும் பழங்கள், காய்கறிகள், மீன் மற்றும் இதர பொருட்களை ஏற்றுமதி செய்வது எளிதாக இருக்கும் என்று அவர் கூறினார். 

விண்வெளி, அறிவியல் மற்றும் விளையாட்டுத் துறைகளில் தேசம் சாதனைகளை புரிந்து வருகிறது.  இருப்பினும், குஜராத் மற்றும் அதன் மக்களின் சாதனைகள் சிலரால் அரசியலாக்கும் போக்கு அதிகரித்து வருகிறது என்று பிரதமர் கூறினார்.  சில அரசியல் கட்சிகள் தங்களின் அரசியல் நிலைப்பாட்டுக்காக குஜராத்தை குறைகூறுகின்றன என்றாலும்,  சர்தார் படேலின் ஒரே இந்தியா- உன்னத இந்தியா உணர்வையும், கனவுகளையும் நீர்த்துப் போக நாம்  அனுமதிக்கக்கூடாது என்று பிரதமர்  தெரிவித்தார். குஜராத்தின் ஒற்றுமையே அதன் பலம் என்றும் பிரதமர் கூறினார்.

குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர பட்டேல், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு ராஜேஷ்பாய் சுடாசமா, திரு ரமேஷ் தாடுக், மாநில அமைச்சர்கள் திரு ரிஷிகேஷ் பட்டேல், திரு தேவாபாய் மாலம் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

**************



(Release ID: 1869302) Visitor Counter : 151