பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

லோத்தலில் உள்ள தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தின் வளர்ச்சிப் பணிகளை அக்டோபர் 18-ஆம் தேதி பிரதமர் ஆய்வு

प्रविष्टि तिथि: 17 OCT 2022 7:25PM by PIB Chennai

குஜராத் மாநிலம் லோத்தலில் உள்ள தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தின் வளர்ச்சிப் பணிகளை அக்டோபர் 18-ஆம் தேதி மாலை 5 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் திரு நரேந்திர மோடி ஆய்வு செய்வார். இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் அவர் உரையாற்றுவார்.

ஹரப்பா நாகரிகத்தின் முக்கிய நகரங்களுள் ஒன்றான லோத்தல், மனிதனால் உருவாக்கப்பட்ட மிகப் பழமையான கப்பல் பட்டறையாக கருதப்படுகிறது. நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க மரபையும், பாரம்பரியத்தையும் போற்றும் வகையில் இங்கு கடல்சார் பாரம்பரிய வளாகம் அமையவிருப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

இந்தியாவின் வளமான மற்றும் பரவலான கடல்சார் பாரம்பரியத்தை எடுத்துரைப்பதற்கு மட்டுமல்லாமல், உலகத்தரம் வாய்ந்த சர்வதேச சுற்றுலா தலமாகவும் லோத்தல் நகரம் வளர்வதற்கு உதவும் வகையில் தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகம் அமைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் வாயிலாக சுற்றுலாவுக்கான வாய்ப்பு அதிகரிப்பதோடு, இப்பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சியும் மேம்படும்.

மார்ச் 2022-ல் தொடங்கிய வளாகக் கட்டமைப்புப் பணிகள், ரூ. 3500 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படுகிறது. ஹரப்பா கட்டிடக்கலை மற்றும் வாழ்க்கைமுறையை மீண்டும் புதுப்பித்தல்; நினைவகப் பொழுதுபோக்கு பூங்கா, கடல்சார் பொழுதுபோக்கு பூங்கா, பருவநிலை பொழுதுபோக்கு பூங்கா, மற்றும் சாகச பொழுதுபோக்கு பூங்கா உள்ளிட்ட நான்கு பூங்காக்கள்; உலகின் மிக உயரிய கலங்கரை விளக்க அருங்காட்சியகம்; ஹரப்பா தொடங்கி இந்நாள் வரையிலான இந்தியாவின் கடல்சார் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் 14 அரங்குகள்; மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பரவலான கடல்சார் பாரம்பரியத்தை விளக்கும் கடல்சார் மாநிலங்கள் காட்சிமாடம் முதலிய ஏராளமான புதுமையான மற்றும் தனித்தன்மையுடன் கூடிய அம்சங்கள் இந்த வளாகத்தில் இடம்பெறும்.

**************

(Release ID:1868589)

BL/Sri/RR


(रिलीज़ आईडी: 1868709) आगंतुक पटल : 224
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam