பிரதமர் அலுவலகம்

குஜராத்தில் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம் – முதலமைச்சர் அமிர்த திட்ட ஆயுஷ்மான் அட்டைகள் விநியோகத்தை பிரதமர் காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார்

“உலகின் பல நாடுகளில் சுகாதாரக் காப்பீடு பற்றி பேசப்படுகிறது, ஆனால் இந்தியா அதற்கும் அப்பால் சுகாதாரகக் காப்பீட்டை உறுதி செய்துள்ளது”
“நமது திட்டங்கள் சாமானிய குடிமக்களின் தேவைகளுக்கு இன்று நேரடியாகத் தீர்வு காண்கின்றன”
“நாட்டின் குடிமக்கள் அதிகாரம் பெற்றால் நாடு பலம்வாய்ந்ததாக மாறும்”
“ ஆயுஷ்மான் அட்டை என்பது 5 லட்சம் ரூபாய்க்கான ஏடிஎம் போன்றது. இந்த ஏடிஎம் அட்டை ஒவ்வொரு ஆண்டும் கட்டணமில்லா சிகிச்சை பயனை அளிக்கிறது”
“ 30-40 ஆண்டு காலத்தில் ரூ.1.5-2 கோடி மதிப்பிலான சிகிச்சையை உறுதி செய்கிறது”

Posted On: 17 OCT 2022 5:59PM by PIB Chennai

குஜராத்தில் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம்முதலமைச்சர் அமிர்த திட்ட ஆயுஷ்மான் அட்டைகள் விநியோகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி  இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார். இந்த திட்டத்தின் பயனாளிகளுடனும், அவர் இணையம் வழியாக கலந்துரையாடினார்.

பனஸ்கந்தாவின் துவாரைச்சேர்ந்த திரு பியூஷ்பாயுடன் கலந்துரையாடிய பிரதமர், அவரது குடும்பம் மற்றும் அண்மைக்கால சுகாதார நிலமை குறித்தும் விசாரித்தார். ஆயுஷ்மான் பாரத் திட்டம் அவருக்கு புதிய வாழ்க்கையை அளித்திருப்பதை அறிந்து பிரதமர் மகிழ்ச்சியடைந்தார். இவரை போலவே, அனைவரையும் எப்போதும் அரசு கவனித்துக்கொள்ளும் என்று பிரதமர் உறுதியளித்தார்.

மகிசாகரைச் சேர்ந்த திரு தாமோர் லாலாபாய்  சோமாபாயுடன் கலந்துரையாடிய பிரதமர், அவரது புற்றுநோய் சிகிச்சை நல்ல முறையில் நடந்ததா என்பது பற்றி விசாரித்தார். திரு தாமோரின் சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் நடைபெற்றதாகவும், ஒரு பைசா கூட அவர் செலவு செய்யவில்லை என்பதையும் அறிந்து பிரதமர் பெருமகிழ்ச்சியடைந்தார். புகையிலையை விட்டு விட உறுதி எடுக்குமாறு திரு தாமோரை வலியுறுத்திய அவர், இந்த திட்டம் குறித்த விழிப்புணர்வை பரவலாக்குமாறு கேட்டுக்கொண்டார்.

ஆயுஷ்மான் அட்டை கிடைக்காதிருந்தால், தமது சிகிச்சைக்கு கடன் பெற வேண்டி இருந்திருக்கும் என்றும், அறுவை சிகிச்சையை தவிர்ப்பதற்கான வாய்ப்பும் இருந்திருக்கும் என்றும் காந்தி நகரின் டார்ஜியைச் சேர்ந்த திருமதி ரமிலாபென் பிரதமரிடம் தெரிவித்தார். அன்னையரும், சகோதரிகளும் இந்த திட்டத்தால் பயனடைந்திருப்பது குறித்து பிரதமர் மகிழ்ச்சி வெளியிட்டார்.

தந்தேரா மற்றும் தீபாவளிக்கு முன்னதாக பொது சுகாதாரம் பற்றி இவ்வளவு பெரிய நிகழ்ச்சி நடைபெறுவது தமக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக திரண்டிருந்த மக்களிடையே  உரையாற்றிய பிரதமர் தெரிவித்தார். ஆயுர்வேதத்தின் மூலகர்த்தாவாக கருதப்படும் பகவான் தன்வந்திரியை வழிபடும் விழாவாக தந்தேரா நடைபெறும் நேரத்தில் இந்த நிகழ்வும் இசைவாக நடைபெறுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.  சாஸ்திரங்களை மேற்கோள் காட்டிய பிரதமர், “ஆரோக்கியம் பரமம் பாக்யம்” என்றார்.  குஜராத்தின் லட்சக்கணக்கான மக்களுக்கு  ஆரோக்கிய செல்வத்தை வழங்க  முதலமைச்சர் பூபேந்திர படேல் தலைமையின் கீழ், மாபெரும் நிகழ்வு நடப்பது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

அனைவருக்கும் நோயற்ற வாழ்வு என்ற உணர்வு பற்றி குறிப்பிட்ட பிரதமர், அனைவருக்கும் ஆரோக்கியம் என்பதே ஆயுஷ்மான் திட்டத்தின் நோக்கம் என்றார். இந்த மாநிலத்தில் 50 லட்சம் அட்டைகளை மக்களுக்கு வழங்குவதற்கான இயக்கம் குறித்து அவர் பாராட்டு தெரிவித்தார். குஜராத் அரசின் நல்லுணர்வுக்கு இது சான்றளிக்கிறது. உலகின் பல நாடுகளில் சுகாதாரக் காப்பீடு பற்றி பேசப்படுகிறது, ஆனால் இந்தியா அதற்கும் அப்பால் சுகாதார காப்பீட்டை உறுதி செய்துள்ளது”.

அரசியல் சிந்தனையிலும், பணிக் கலாச்சாரத்திலும், மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதையும் பிரதமர் எடுத்துரைத்தார். முந்தைய அரசுகள், சாமானிய மக்களின் நலனுக்கான திட்டங்கள் என்றது வெறும் கண்துடைப்புதான். இந்த திட்டங்களுக்காக செலவு செய்யப்பட்ட தொகை குறிப்பிட்ட பகுதி அல்லது அரசியல் நலனை மனதில் கொண்டதாகவே இருந்தது. “இந்த நிலைமையை மாற்றுவது அவசியம். மாற்றத்திற்கு நாம் வழிவகுக்கவேண்டும். தற்போது திட்டமிடும்போது முதலில் சாமானிய குடிமக்களின் நிலையையும் அவர்களின் தேவைகளையும் ஆய்வு செய்கிறோம்” என்று அவர் கூறினார். நமது திட்டங்கள்  சாமான்ய குடிமக்களின் தேவைகளுக்கு இன்று நேரடியாக தீர்வு காண்கின்றனஎன்று பிரதமர் மேலும் கூறினார்.

நாட்டின் குடிமக்கள் அதிகாரம் பெற்றால் நாடு பலம்வாய்ந்ததாக மாறும். எனவே, நாட்டின் சாமானிய குடிமக்கள் குறிப்பாக, பெண்கள் அதிகாரம் பெறுவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்.” என்பதை பிரதமர் வலியுறுத்தி கூறினார். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இதுவரை 4 கோடி ஏழை நோயாளிகள் பயனடைந்திருப்பதாகவும், இவர்களில் சுமார் 50 லட்சம் பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்தார். ஆயுஷ்மான் பாரத் பயனாளிகளில் பாதி பேர் எனது அன்னையராகவும், சகோதரிகளாகவும் இருப்பது திருப்தி அளிக்கிறது என்று அவர் தெரிவித்தார். இந்த அன்னையரும், சகோதரிகளும் குடும்ப நலனுக்காக தங்களின் நோய்களை மறைத்து துயரடைவதாக குறிப்பிட்ட திரு மோடி, சிகிச்சைக்கான அதிக செலவு கடன் சுமையை ஏற்றி விடும் என்று அவர்கள் அஞ்சுவதாகவும் கூறினார். “இந்த பிரச்சனையிலிருந்து ஏழை தாய்மார்களையும், சகோதரிகளையும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் விடுதலை செய்துள்ளது” என்று பிரதமர் தெரிவித்தார். “எளிதாக கூறவேண்டுமென்றால், ஆயுஷ்மான் அட்டை என்பது 5 லட்சம் ரூபாய்க்கான ஏடிஎம் போன்றது. இந்த ஏடிஎம் அட்டை ஒவ்வொரு ஆண்டும் கட்டணமில்லா சிகிச்சை பயனை அளிக்கிறதுஎன்று  அவர் மேலும் கூறினார். ஒரு நபர் 30-40 ஆண்டுகள் வாழ்கிறார் என்றால், அந்த காலகட்டத்தில், ரூ.1.5-2 கோடி மதிப்பிலான சிகிச்சை அவருக்கு  உறுதி செய்யப்படுகிறது என்று பிரதமர் தெரிவித்தார்.

தாம், குஜராத் முதலமைச்சராக இருந்த போது, சிரஞ்சீவி, பால்போக், கில்கிலாத் போன்ற திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டதை பிரதமர் நினைவுகூர்ந்தார். முதலமைச்சரின் அமிர்த திட்டம் பல் ஆண்டுகளுக்கு முன் குஜராத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம்- முதலமைச்சரின் அமிர்த திட்ட அறிமுகம், குஜராத் மக்களும் குஜராத்துக்கு வெளியே உள்ள மக்களும் கட்டணமின்றி சிகிச்சை பெற வழிவகுக்கும்.

பின்னணி

மருத்துவ செலவு மற்றும் நோய்களிலிருந்து ஏழ்மையான குடிமக்களை பாதுகாக்க தற்போதைய பிரதமர் 2012-ல் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, முதலமைச்சரின் அமிர்த திட்டத்தை தொடங்கினார். இந்த திட்டத்தின் வெற்றி அனுபவத்திலிருந்து ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம் 2018-ல் பிரதமரால் தொடங்கப்பட்டது.

**************

(Release ID: 1868557)

SMB/RS/ANAND



(Release ID: 1868611) Visitor Counter : 230