பிரதமர் அலுவலகம்

90-வது இன்டர்போல் பொதுச்சபையில் அக்டோபர் 18 அன்று பிரதமர் உரையாற்ற உள்ளார்

Posted On: 17 OCT 2022 3:51PM by PIB Chennai

புதுதில்லி பிரகதி மைதானத்தில் அக்டோபர் 18 அன்று பிற்பகல்  1:45 மணியளவில்  90-வது  இன்டர்போல் பொதுச்சபையில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார்.

90-வது  இன்டர்போல் பொதுச்சபை அக்டோபர் 18 முதல் 21 வரை நடைபெற உள்ளது. இன்டர்போல் அமைப்பின் 195 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், காவல்துறை தலைவர்கள், தேசிய மத்திய புலனாய்வு அமைப்புகளின் தலைவர்கள், காவல்துறையின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட பிரதிநிதிகள் இந்த பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பார்கள். இந்த பொதுச்சபை என்பது இன்டர்போல் அமைப்பின் உச்சநிலை நிர்வாக அமைப்பாகும். இது தனது செயல்பாடு தொடர்பாக, முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு ஆண்டுக்கு ஒரு முறை கூடுகிறது.

இன்டர்போல் பொதுச்சபை கூட்டம், 25 ஆண்டுகளுக்கு பின், இந்தியாவில் நடைபெற உள்ளது.  கடைசியாக 1997-ல் நடைபெற்றது.  இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டு கொண்டாட்டங்களுடன் இணையும் வகையில், இன்டர்போல் பொதுச்சபையை 2022-ல் புதுதில்லியில் நடத்தவேண்டும் என்ற இந்தியாவின் முன்மொழிவை மாபெரும் ஆதரவுடன் பொதுச்சபை ஏற்றுக்கொண்டது. இந்தியாவின் சட்டம்- ஒழுங்கு முறையின் மிகச்சிறந்த செயல்பாடுகளை ஒட்டுமொத்த உலகத்திற்கு, எடுத்துக்காட்டும் வாய்ப்பை இந்த நிகழ்வு வழங்கும்.

மத்திய உள்துறை அமைச்சர், இன்டர்போல் தலைவர் அகமது நாசர் அல் ரெய்சி, தலைமை செயலாளர் திரு ஜூர்கென் ஸ்டாக், மத்திய புலனாய்வுப் பிரிவு இயக்குனர் ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்பார்கள்.

**************

SMB/RS/SM

(Release ID: 1868498)



(Release ID: 1868525) Visitor Counter : 167