பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் 5ஜி சேவையை தொடங்கி வைத்து பிரதமர் உரை

Posted On: 01 OCT 2022 5:30PM by PIB Chennai

இந்த உச்சிமாநாடு உலகளாவியது, ஆனால் உள்ளூர் குரல், ஆரம்பமும் உள்ளூர்தான்.

21 ஆம் நூற்றாண்டில் வளரும் இந்தியாவின் திறனைக் காண்பதற்கும், வெளிப்படுத்துவதற்கும் இன்று ஒரு சிறப்பு நாள். இந்த சுதந்திரத்தின் அமிர்த பெருவிழா காலகட்டத்தில், 2022, அக்டோபர் 1 வரலாற்றில் பதிவாகப் போகிறது. இரண்டாவதாக, நவராத்திரி விழா தொடங்கியுள்ளது. இது சக்தியை வழிபடும் திருவிழா. அதேபோன்று, நாடு மற்றும் நாட்டின் தொலைத்தொடர்பு துறையின் சார்பாக, 130 கோடி இந்தியர்களுக்கு 5ஜி சேவை வடிவில் ஒரு அற்புதமான பரிசு கிடைக்கிறது. நாட்டில் புதிய சகாப்தத்தை 5ஜி தொடங்கியுள்ளது. 5ஜி என்பது எல்லையற்ற வாய்ப்புகளின் தொடக்கமாகும். அதற்காக ஒவ்வொரு இந்தியரையும் வாழ்த்துகிறேன்.

இந்த பெருமையான தருணங்களைத் தவிர, 5ஜி  அறிமுகப்படுத்தப்படுவதால், கிராமப்புற பள்ளிகள், கிராமங்கள், தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் இந்த நிகழ்வில் எங்களுடன் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் டிஜிட்டல் இந்தியா பற்றிப் பேசும்போது, அது வெறும் அரசின் திட்டம் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் டிஜிட்டல் இந்தியா என்பது வெறும் பெயரல்ல, நாட்டின் வளர்ச்சிக்கான பெரிய தொலைநோக்கு பார்வையாகும். மக்களுக்காக வேலை செய்யும், மக்களுடன் இணைந்து செயல்படும் அந்த தொழில்நுட்பத்தை சாமானிய மக்களிடம் கொண்டு செல்வதே குறிக்கோளாகும்.

டிஜிட்டல் இந்தியாவின் வெற்றிக்கு, இந்தத் துறையின் அனைத்து பரிமாணங்களையும் ஒரே நேரத்தில் உள்ளடக்குவது அவசியம். எனவே 4 தூண்களிலும் நான்கு திசைகளிலும் ஒரே நேரத்தில் கவனம் செலுத்தினோம். முதலாவது - சாதனத்தின் விலை, இரண்டாவது - டிஜிட்டல் இணைப்பு, மூன்றாவது - தரவு செலவு, நான்காவது மற்றும் மிக முக்கியமானது - 'டிஜிட்டல் முதலில்' யோசனை.

நாம் தன்னம்பிக்கையுடன் இருக்கும்போதுதான் சாதனத்தின் விலை குறையும். நான் சுயசார்பு பற்றி பேசிய போது பலர் என்னை கேலி செய்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். 2014ஆம் ஆண்டு வரை, வெளிநாடுகளில் இருந்து கிட்டத்தட்ட 100  சதவீத மொபைல் போன்களை இறக்குமதி செய்து வந்தோம். எனவே, இந்தத் துறையில் தன்னிறைவு பெற முடிவு செய்தோம். மொபைல் உற்பத்தி அலகுகளை அதிகரித்துள்ளோம்.

2014 ஆண்டில், நாட்டில் 2 மொபைல் தயாரிப்பு யூனிட்கள் இருந்தன, அதாவது 8 ஆண்டுகளுக்கு முன்பு 2 மட்டுமே இருந்தன. ஆனால் தற்போது அவற்றின் எண்ணிக்கை 200 தாண்டியுள்ளதுமொபைல் போன் தயாரிப்பில் உலக அளவில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. மேலும், முன்பு மொபைல்களை இறக்குமதி செய்தோம். இன்று மொபைல்களை ஏற்றுமதி செய்து உலகிற்கு எடுத்துச் செல்கிறோம். இந்த முயற்சிகள் அனைத்தும் சாதனத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

டிஜிட்டல் இணைப்பின் விரிவாக்கத்துடன், தரவுகளின் விலை சமமாக இருப்பது முக்கியமானதாகிறது. 4ஜி தொழில்நுட்பத்தை விரிவுபடுத்துவதற்கான கொள்கை ஆதரவை நாங்கள் வழங்கிய விதம் உங்களுக்கு நன்கு தெரியும். இது தரவுகளின் விலையில் கடுமையான வீழ்ச்சிக்கு  வழிவகுத்தது.

இந்த மூன்று காரணிகளைப் பார்க்கும்போது, சாதனத்தின் விலை, டிஜிட்டல் இணைப்பு மற்றும் தரவுகளின் விலை - ஆகியவற்றின் விளைவு எல்லா இடங்களிலும் தோன்றத் தொடங்கியது. இந்த விஷயங்களைத் தவிர, இன்னொரு முக்கியமான விஷயம் நடந்தது, அதாவது 'டிஜிட்டல் முதலில்என்ற எண்ணம் நாட்டில் உருவானது.

ஒரு காலத்தில் ஏழை மக்களுக்கு டிஜிட்டல் மயமாகும் திறன் இல்லை அல்லது அவர்களால் டிஜிட்டல் மயமாக முடியாது என்று சிலர் நினைத்தார்கள். இன்று நகரங்களில் இணையம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை விட கிராமப்புறங்களில் இணையம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இனிவரும் காலங்களில், இந்தியாவை உலக அளவில்  முக்கிய பங்காற்றும் நாடு என்ற பெருமையோடு, நம் நாட்டில் உருவாகும் இத்தகைய தொழில்நுட்பங்களை, நாடு தொடர்ந்து வழிநடத்தும். அந்த நம்பிக்கையுடன், நான் உங்களுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறேன்!

சக்தி வழிபாட்டின் மங்களகரமான திருநாளில், சக்தியின் சிறந்த ஊடகமான 5G அறிமுகப்படுத்தப்பட்டதற்காக, அனைத்து நாட்டு மக்களுக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக்க நன்றி!

**************

 


(Release ID: 1865788) Visitor Counter : 217