பிரதமர் அலுவலகம்
மத்திய பிரதேசத்தின் குனோ தேசியப் பூங்காவில் சிறுத்தைகளை விடுவித்து நாட்டு மக்களுக்குப் பிரதமர் உரையாற்றினார்
"சிறுத்தை இன்று இந்திய மண்ணுக்குத் திரும்பி வந்துள்ளது"
"நமது வேர்களிலிருந்து நாம் விலகும்போது, நாம் ஏராளமான இழப்புகளை சந்திக்கிறோம்"
"அமிர்தம் என்பது இறந்ததையும் கூட உயிர்ப்பிக்கும் சக்தி வாய்ந்தது"
"சர்வதேச விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன, இந்த சிறுத்தைகளை பாதுகாக்க இந்தியா சிறந்த முயற்சிகளை மேற்கொள்ளும்"
"சூழல் சுற்றுலா அதிகரிப்பதன் பயனாக வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்"
"இந்தியாவிற்கு இயற்கையும், சுற்றுச்சூழலும், அதன் விலங்குகளும், பறவைகளும் என்பவை வெறுமனே நீடித்த தன்மைக்கும் பாதுகாப்புக்கும் மட்டுமல்ல, இந்தியாவின் உணர்வுக்கும் ஆன்மீகத்திற்கும் அடிப்படையாகும்"
"இந்தச் சிறுத்தையின் மூலம் இன்று நமது வனம் மற்றும் வாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றிடம் நிரப்பப்பட்டுள்ளது"
"ஒரு பக்கம் உலகில் அதிவேகமாக வளரும் பொருளாதாரங்களில் நாம் சேர்ந்துள்ளோம், அதே நேரம் நாட்டின் வனப்பகுதிகளும் விரைவாக அதிகரித்து வருகிறது"
"2014 முதல் 250 புதிய பாதுகாக்கப்பட்ட பகுதிகள் நாட்டில் சேர்க்கப்பட்டுள்ள
Posted On:
17 SEP 2022 12:09PM by PIB Chennai
குனோ தேசியப் பூங்காவில் சிறுத்தைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று விடுவித்தார். இந்தியாவில் இவை அழிந்த இனமாக இருந்தன. சிறுத்தைகள் திட்டத்தின் கீழ், நமீபியாவிலிருந்து இந்தச் சிறுத்தைகள் இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. இது உலகிலேயே முதலாவதாக கண்டங்களுக்கு இடையே மாமிசப்பட்சிணி இடம்பெயர்க்கப்பட்டுள்ள திட்டமாகும்.
குனோ தேசியப் பூங்காவின் இரண்டு இடங்களில் இந்த சிறுத்தைகளைப் பிரதமர் விடுவித்தார். சிறுத்தை ஆர்வலர்கள், சிறுத்தைகள் மறுவாழ்வு நிர்வாகக் குழுமத்தினர் மற்றும் அந்த இடத்திற்கு வந்திருந்த மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வில் பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
கடந்த கால தவறுகளை சரி செய்து புதிய எதிர்காலத்தைக் கட்டமைககும் வாய்ப்புகளை மனித குலம் வழங்கியிருப்பதை நாட்டு மக்களுக்கு ஆற்றிய தமது உரையில் எடுத்துரைத்த பிரதமர்,அதற்கு நன்றி தெரிவித்தார். அத்தகைய தருணம் இன்று நம்முன் உள்ளதாக திரு மோடி குறிப்பிட்டார். "பல தசாப்தங்களுக்கு முன், தொன்மையான பல்லுயிர் பெருக்கத்தின் இணைப்பு துண்டிக்கப்பட்டு அழிந்து போய்விட்டது என்றும், அதனை மீட்பதற்கு நாம் ஒரு வாய்ப்பை பெற்றிருக்கிறோம் என்றும் கூறிய அவர், சிறுத்தை இன்று இந்திய மண்ணுக்குத் திரும்பியுள்ளது" என்றார். வரலாற்று சிறப்புமிக்க இந்தத் தருணம், இயற்கையை நேசிக்கும் இந்தியாவின் மன உணர்வை முழு ஆற்றலுடன் வெளிப்படுத்துவதாக பிரதமர் கூறினார். பல பத்தாண்டுகளுக்குப் பின் இந்திய மண்ணுக்கு சிறுத்தைகள் திரும்பவும் வருவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய நமீபியாவையும் அதன் அரசையும் சிறப்பித்துப் பேசிய திரு மோடி, நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். "இந்தச் சிறுத்தைகள் இயற்கை மீதான நமது பொறுப்புகள் குறித்த விழிப்புணர்வாக மட்டுமின்றி, மனித மாண்புகள் மற்றும் பாரம்பரியங்கள் குறித்த விழிப்புணர்வாகவும் மாறி இருக்கிறது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன்" என்று பிரதமர் தெரிவித்தார்.
சுதந்திரத்தின் அமிர்த காலம் பற்றி குறிப்பிட்ட பிரதமர், 'ஐந்து உறுதிமொழிகளை' நினைவு கூர்ந்தார். 'நமது பாரம்பரியத்தின் மீது பெருமிதம் கொள்வது', 'அடிமை மனப்பான்மையிலிருந்து விடுதலை பெறுவது' ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். ''நமது வேர்களிலிருந்து நாம் விலகி இருக்கும் போது ஏராளமானவற்றை நாம் இழக்கிறோம்" என்றும் அவர் தெரிவித்தார். கடந்த நூற்றாண்டுகளில் இயற்கையை அழிப்பது அதிகாரத்தின், நவீனத்தின் அடையாளமாகக் கருதப்பட்டதையும் அவர் நினைவு கூர்ந்தார். "1947-ல், நாட்டில் கடைசியாக இருந்த மூன்று சிறுத்தைகளும் இரக்கமின்றி, பொறுப்பற்ற தன்மையுடன் சால் வனப்பகுதிகளில் வேட்டையாடப்பட்டன" என்று அவர் மேலும் கூறினார்.
1952 ல் இந்தியாவிலிருந்து சிறுத்தைகள் அழிந்து போன போதும் கடந்த 70 ஆண்டுகளாக அவற்றுக்கு மறுவாழ்வு அளிக்க அர்த்தமுள்ள எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்று பிரதமர் கூறினார். சுதந்திரத்தின் 75 -ஆவது ஆண்டுப் பெருவிழா குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிரதமர், புதிய உத்வேகத்துடன் நாடு சிறுத்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கத் தொடங்கியது ஏன்றார். "அமிர்தம் என்பது இறந்ததையும் கூட உயிர்ப்பிக்கும் சக்தி கொண்டது" என்று திரு மோடி குறிப்பிட்டார். சுதந்திரத்தின் 75 -ஆவது ஆண்டுப் பெருவிழா காலத்தில் கடமை மற்றும் நம்பிக்கையின் அமுதம் என்பது நமது பாரம்பரியத்தை மீட்பதற்கு மட்டுமல்ல இப்போது சிறுத்தைகள் இந்திய மண்ணில் காலடி எடுத்து வைத்திருப்பதற்கும்தான் என்று பிரதமர் மேலும் கூறினார்.
இந்த மறுவாழ்வுப் பணி வெற்றிகரமாக நடப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட பல ஆண்டு கடின உழைப்பு பற்றி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பிரதமர், அதிக சக்தி செலவிடப்பட்ட இந்த செயலுக்கு அவ்வளவாக அரசியல் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றார். மிகவும் விரிவான சிறுத்தை செயல்திட்டம் தயாரிக்கப்பட்டது பற்றி குறிப்பிட்ட அவர், நமது திறமை மிக்க விஞ்ஞானிகள் விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்டனர்; தென்னாப்பிரிக்கா மற்றும் நமீபியாவின் நிபுணர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றினர் என்றார். நமது நாட்டில் சிறுத்தைகளுக்கு மிகவும் பொருத்தமான பகுதி எது என்பதைக் கண்டறிய நாடு முழுவதும் அறிவியல் பூர்வமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, இந்தப் புனிதமான தொடக்கத்திற்கு குனோ தேசியப் பூங்கா தெரிவு செய்யப்பட்டதாக பிரதமர் மேலும் கூறினார். "இன்று எங்களது கடின உழைப்பின் பயன் உங்கள் முன்னால் இருக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.
இயற்கையும் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்போது நமது எதிர்காலம் பாதுகாப்பானதாக மாறும், வளர்ச்சி மற்றும் வளத்திற்கான பாதைகளும் திறக்கும் என்று பிரதமர் உறுதிபட தெரிவித்தார். குனோ தேசியப் பூங்காவில் சிறுத்தைகளின் ஓட்டத்தால் புல்வெளியின் சூழல்முறை மீட்கப்படும், இது பல்லுயிர் பெருக்கத்தை அதிகரிக்க வழிவகுக்கும் என்று திரு மோடி மேலும் கூறினார். இந்தப் பகுதியில் சூழல் சுற்றுலா வளர்வதன் பயனாக வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும், இதன் மூலம் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் உருவாகும் என்றும் திருமோடி எடுத்துரைத்தார்.
நாட்டு மக்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த பிரதமர், குனோ தேசியப் பூங்காவில் விடுவிக்கப்பட்ட சிறுத்தைகளைக் காண்பதற்கு சில மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்றார். "இந்தச் சிறுத்தைகள் இங்கே விருந்தினர்களாக வந்துள்ளன. இந்தப் பகுதியை பற்றி அவற்றுக்கு ஏதும் தெரியாது. குனோ தேசிய பூங்கா தங்களின் தாய் வீடு என்பதை உணர்வதற்கு சில மாத காலத்தை அவற்றுக்கு நாம் வழங்க வேண்டும்" என்று அவர் கூறினார். சர்வதேச விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன என்று கூறிய பிரதமர், இந்தச் சிறுத்தைகளைப் பாதுகாக்க சிறந்த அனைத்தையும் இந்தியா செய்யும் என்றார். "நமது முயற்சிகள் வீணாக நாம் அனுமதித்துவிடக் கூடாது" என்றும் பிரதமர் கூறினார்.
உலகம் இன்று இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பற்றி கவனிக்கும்போது, அது நீடித்த வளர்ச்சி பற்றி பேசுவதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார். "இந்தியாவிற்கு இயற்கையும் சுற்றுச்சூழலும் அதன் விலங்குகளும் பறவைகளும் என்பவை வெறுமனே நீடித்த தன்மைக்கும் பாதுகாப்புக்கும் மட்டுமல்ல, இந்தியாவின் உணர்வுக்கும் ஆன்மீகத்திற்கும் அடிப்படையாகும்" என்று அவர் கூறினார். "நம்மை சுற்றிலும் வாழ்கின்ற மிகச் சிறிய உயிரினங்கள் கூட கவனிக்கப்பட வேண்டும் என்று நாம் கற்றுத் தரப்பட்டுள்ளோம். நமது மரபுகள் அவ்வாறு இருந்துள்ளன. காரணம் ஏதும் இல்லாமல் ஒன்றின் உயிர் போனால் நாம் குற்ற உணர்வு கொள்கிறோம். அப்படி என்றால் ஒட்டுமொத்த உயிரினங்களும் அழிவதற்கு நாம் காரணமாக இருப்பதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்" என்று அவர் வினவினார்.
சிறுத்தைகள் இன்று ஆப்பிரிக்க நாடுகள் சிலவற்றிலும் ஈரானிலும் காணப்படுகின்றன. இருப்பினும் வெகுகாலத்திற்கு முன்பே இந்தப் பட்டியலிலிருந்து இந்தியாவின் பெயர் நீக்கப்பட்டு விட்டது என்று பிரதமர் கூறினார். "வரும் ஆண்டுகளில் இந்த ஏமாற்றம் குழந்தைகளுக்கு ஏற்படாது. அவர்கள் தங்களின் சொந்த நாட்டில், குனோ தேசியப் பூங்காவில், சிறுத்தைகள் ஓடுவதைக் காண முடியும். இந்தச் சிறுத்தைகள் மூலம், நமது வனத்திலும் வாழ்க்கையிலும் பெரிய இடைவெளி நிரப்பப்பட்டுள்ளது" என்று திருமோடி கூறினார்.
21ம் நூற்றாண்டின் இந்தியா ஒட்டுமொத்த உலகத்திற்கும் ஒரு செய்தியை வழங்குகிறது; அதாவது பொருளாதாரமும் சுற்றுச்சூழலும் ஒன்றோடொன்று முரண்பட்டவை அல்ல என்று பிரதமர் குறிப்பிட்டார். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் இணைத்துக் கொண்டுசெல்ல முடியும் என்பதற்கு வாழும் உதாரணம் இந்தியா என்றும் அவர் கூறினார். "ஒரு பக்கம் உலகில் அதிவேகமாக வளரும் பொருளாதாரங்களில் நாம் சேர்ந்துள்ளோம், அதே நேரம் நாட்டின் வனப்பகுதிகளும் விரைவாக அதிகரித்து வருகிறது" என்பதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
அரசால் மேற்கொள்ளப்பட்ட பணிகளை கவனப்படுத்திய பிரதமர், 2014-ல் தமது அரசு அமைந்த பின் 250 புதிய பாதுகாக்கப்பட்ட பகுதிகள் நாட்டில் இணைக்கப்பட்டுள்ளன என்றார். இங்கும், குஜராத்திலும் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளன என்று கூறிய அவர் நாட்டில் ஆசிய சிங்கங்கள் ஆதிக்கம் செலுத்துவதாக உள்ளன என்றார். தசாப்தங்களின் கடின உழைப்பு, ஆராய்ச்சி அடிப்படையிலான கொள்கைகள், மக்களின் பங்கேற்பு ஆகியவை இதில் பெரும் பங்கு வகித்துள்ளதாக திரு மோடி மேலும் கூறினார். நாம் வனவிலங்குகளுக்கான மதிப்பை அதிகரிப்போம், மோதலை குறைப்போம் என்று குஜராத்தில் நாங்கள் ஓர் உறுதிமொழி ஏற்றோம். இன்று அதன் பயன் நமக்குக் கிடைத்திருப்பதாக நான் நினைக்கிறேன் என்று அவர் கூறினார். உரிய காலத்திற்கு முன்னதாகவே புலிகளின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக்கும் இலக்கை நாம் எட்டியிருக்கிறோம் என்று பிரதமர் குறிப்பிட்டார். அசாமில் ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களின் இருப்பு அபாய கட்டத்தில் இருந்தது, ஆனால் அவற்றின் எண்ணிக்கையும் கூட இப்போது அதிகரித்துள்ளது என்பதை அவர் நினைவுகூர்ந்தார். கடந்த சில ஆண்டுகளில் யானைகளின் எண்ணிக்கையும் 30 ஆயிரத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. விரிவாக்கப்பட்ட சதுப்பு நிலங்களில் தாவர வகைகளின் பாதுகாப்புப் பணிகள் நடைபெற்று வருவதையும் திரு மோடி சுட்டிக்காட்டினார். உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையும் தேவைகளும் சதுப்புநிலச் சூழலைச் சார்ந்துள்ளன என்று அவர் கூறினார். நாட்டில் இன்று 75 சதுப்பு நிலப் பகுதிகள் ராம்சார் இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 26 இடங்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் சேர்க்கப்பட்டவை என்று பிரதமர் கூறினார். நாட்டின் இந்த முயற்சிகளின் பயன் வரும் நூற்றாண்டுகளில் கண்கூடாகத் தெரியும் என்றும் இது வளர்ச்சிக்குப் புதிய பாதைகளை வகுக்கும் என்றும் அவர் கூறினார்.
இந்த திசையில் ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் இந்தியாவின் முயற்சிகளும் பாரம்பரியங்களும் வழிகாட்டும் என்றும் சிறந்த உலகத்தின் கனவுக்கு வலுசேர்க்கும் என்றும் நான் நிச்சயமாக நம்புகிறேன் என்று கூறி பிரதமர் உரையை நிறைவு செய்தார்.
பின்புலம்
குனோ தேசிய பூங்காவில் பிரதமர் சிறுத்தைகளை விடுவிப்பது இந்தியாவின் வனவிலங்குகளை புத்துயிர் பெறச் செய்வது அவற்றின் இனப்பெருக்கத்தையும் வாழ்விடத்தையும் அதிகப்படுத்துவது என்ற அவரின் முயற்சிகளில் ஒரு பகுதியாகும். இந்தியாவில் சிறுத்தைகள் அழிந்துவிட்டதாக 1952-ல் அறிவிக்கப்பட்டது. தற்போது விடுவிக்கப்படும் சிறுத்தைகள் நமீபியாவிலிருந்து கொண்டுவரப்பட்டன. இதற்காக இந்த ஆண்டு தொடக்கத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது. சிறுத்தைகள் திட்டத்தின் கீழ், இந்தியாவின் சிறுத்தைகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. உலகிலேயே முதல் முறையாக கண்டங்களுக்கு இடையே மாமிச உண்ணியான விலங்கு மாற்று இடங்களுக்கு கொண்டுவரப்படுகிறது.
இந்தியாவுக்கு மீண்டும் சிறுத்தைகளை கொண்டுவந்திருப்பது வனம் மற்றும் புல்வெளி சூழலை மீட்டமைக்க உதவும். இது பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்க உதவுவதுடன் தண்ணீர் பாதுகாப்பு, கரியமில வாயு சமநிலைப்படுத்தல், மண்ணின் ஈரப்பதத்தைப் பாதுகாத்தல், ஒட்டுமொத்தமாக சமூகத்திற்கு பயனளித்தல் போன்ற சூழல் சேவைகளை விரிவுப்படுத்தும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வன விலங்குகள் பாதுகாப்புக்கான பிரதமரின் உறுதிமொழி அடிப்படையிலான இந்த முயற்சி, சுற்றுச் சூழல் மேம்பாடு மற்றும் சூழல் சுற்றுலா மூலம் உள்ளூர் சமூகத்திற்கான வாழ்வாதார வாய்ப்புகளை விரிவுபடுத்தவும் வழிவகுக்கும்.
******
(Release ID: 1860158)
Visitor Counter : 245
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam