பிரதமர் அலுவலகம்

மத்தியப் பிரதேசத்தின் காரஹாலில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மாநாட்டில் பிரதமர் உரையாற்றினார்


பிரதம மந்திரி கௌசல் விகாஸ் யோஜனாவின் கீழ் குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியின குழுக்களுக்கான நான்கு திறன் மையங்களை பிரதமர் திறந்து வைத்தார்

‘இந்தியாவின் மகள்கள் மற்றும் தாய்மார்கள் எனது பாதுகாப்பு கவசம்’

"இன்றைய புதிய இந்தியாவில் பெண்கள் சக்தியின் கொடி பஞ்சாயத்து பவனில் இருந்து ராஷ்டிரபதி பவன் வரை பறக்கிறது"

"நீங்கள் எல்லா துன்பங்களையும் எதிர்கொள்வீர்கள், ஆனால் சிறுத்தைகளுக்கு எந்தத் தீங்கும் வர அனுமதிக்க மாட்டீர்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது"

"கடந்த நூற்றாண்டின் இந்தியாவிற்கும் இந்த நூற்றாண்டின் புதிய இந்தியாவிற்கும் இடையே பெண் சக்தி வேறுபடுத்தும் காரணியாக மாறியுள்ளது"

"ஒரு காலக்கட்டத்தில், 'சுய உதவிக் குழுக்கள்' 'தேச உதவி குழுக்களாக' மாறும்"

"கிராமப் பொருளாதாரத்தில் பெண் தொழில்முனைவோருக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்க அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது"

" வருகை தரும் வெளிநாட்டுப் பிரமுகர்களுக்கான மெனுவில் சிறு தானியங்களால் செய்யப்பட்ட சில பொருட்கள் எப்போதும் இருக்கும்"

&quo

Posted On: 17 SEP 2022 2:41PM by PIB Chennai

மத்தியப் பிரதேசத்தின் ஷியோபூரில் உள்ள கரஹாலில் ஏற்பாடு செய்யப்பட்ட சுயஉதவி குழு சம்மேளனத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில், பிரதமர் கௌஷல் விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்களுக்கான நான்கு திறன் மையங்களை பிரதமர் திறந்து வைத்தார். சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு வங்கிக் கடன் அனுமதி கடிதங்களையும் பிரதமர் வழங்கினார். ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் உபகரணங்களையும் அவர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சுய உதவிக்குழு உறுப்பினர்களாக உள்ள சுமார் ஒரு லட்சம் பெண்கள் கலந்து கொண்டனர்.மேலும் பல்வேறு மையங்களில் இருந்து சுமார் 43 லட்சம் பெண்கள் இணைக்கப்பட்டனர்.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், நேரம் கிடைத்தால் தமது பிறந்தநாளில் தாயாரிடம் ஆசி பெற முயற்சிப்பதாக கூறினார். இன்று தமது தாயாரைச் சந்திக்கச் செல்ல முடியாவிட்டாலும், லட்சக்கணக்கான பழங்குடியின தாய்மார்களின் ஆசிர்வாதம் தனக்கு கிடைப்பதில் அவர் மகிழ்ச்சி அடைவார் என்றார். இந்தியாவின் மகள்கள் மற்றும் தாய்மார்கள் எனது பாதுகாப்பு கவசம் என்று கூறிய அவர், விஸ்வகர்மா ஜெயந்தி அன்று சுயஉதவி குழுக்களின் இவ்வளவு பெரிய மாநாடு நடப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றார்.

எழுபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு சிறுத்தைகள் இந்தியாவுக்குத் திரும்பியது குறித்து பிரதமர் பெருமிதத்தையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தார். "இங்கு வருவதற்கு முன்பு, குனோ தேசிய பூங்காவில் சிறுத்தைகளை விடுவிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது" என்று கூறிய அவர்,கெளரவ விருந்தினர்கள் என்று அழைக்கப்பட்ட சிறுத்தைகளுக்காக, அரங்கத்தில் இருந்த அனைவரிடமும் நின்று கைதட்டல்களை கேட்டு பெற்றார். “உங்கள் மீது நம்பிக்கை இருப்பதால் சிறுத்தைகள் உங்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளன. நீங்கள் அனைத்து துன்பங்களையும் எதிர்கொள்வீர்கள் ஆனால் சிறுத்தைகளுக்கு எந்த தீங்கும் வர அனுமதிக்க மாட்டீர்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. அதனால்தான் இன்று இந்த எட்டு சிறுத்தைகளின் பொறுப்பை உங்களிடம் ஒப்படைக்க வந்துள்ளேன்” என்று அப்பகுதி மக்களிடம் கூறினார். சுய உதவிக் குழுக்கள் மூலம் இன்று 10 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டதைக் குறிப்பிட்ட பிரதமர், இது இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளுக்கு புதிய ஆற்றலை அளிக்கும் என்றார்.

இந்தியாவில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்து வருவதை எடுத்துரைத்த பிரதமர், கடந்த நூற்றாண்டின் இந்தியாவிற்கும் இந்த நூற்றாண்டின் புதிய இந்தியாவிற்கும் இடையே பெண்களின் சக்தி வேறுபடுத்தும் காரணியாக மாறியுள்ளது என்றார். "இன்றைய புதிய இந்தியாவில், பெண்களின் சக்தியின் கொடி பஞ்சாயத்து பவனில் இருந்து ராஷ்டிரபதி பவன் வரை பறக்கிறது" என்று திரு மோடி மேலும் கூறினார். சமீபத்தில் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் 17 ஆயிரம் பெண்கள் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இது ஒரு பெரிய மாற்றத்தின் அடையாளம் என்றார் அவர்.

சுதந்திரப் போராட்டம் மற்றும் தேசத்தின் பாதுகாப்பில் பெண்களின் பங்களிப்பை பிரதமர் நினைவு கூர்ந்தார். சமீபத்திய இல்லந்தோறும் மூவண்ணக்கொடி பிரச்சாரத்தில் பெண்கள் மற்றும் சுய உதவிக்குழுக்களின் பங்கையும், கொரோனா காலத்தில் அவர்களின் முயற்சிகளையும் அவர் பாராட்டினார். காலப்போக்கில் ‘சுய உதவிக் குழுக்கள்’ ‘தேசிய உதவிக் குழுக்களாக’ மாறும் என்று கூறிய அவர்,  எந்தவொரு துறையின் வெற்றியும் பெண்களின் பிரதிநிதித்துவ அதிகரிப்புடன் நேரடியாக தொடர்புடையது என்று குறிப்பிட்டார். இந்த மாதிரிக்கு ஒரு சிறந்த உதாரணம், பெண்கள் தலைமையிலான முயற்சியான தூய்மை இந்தியா இயக்கத்தின்  வெற்றியாகும். இதேபோல், இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் 7 கோடி குடும்பங்கள் குழாய் நீர் இணைப்புகளைப் பெற்றுள்ளன, அவற்றில் 40 லட்சம் குடும்பங்கள் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவை என்று தெரிவித்த பிரதமர்,  இந்த வெற்றிக்காக இந்தியப் பெண்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

கடந்த 8 ஆண்டுகளில், சுயஉதவி குழுக்களுக்கு அதிகாரம் அளிக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பதை பிரதமர் எடுத்துரைத்தார். “இன்று நாடு முழுவதும் 8 கோடிக்கும் அதிகமான சகோதரிகள் இந்தப் பிரச்சாரத்தில் இணைந்துள்ளனர். ஒவ்வொரு கிராமப்புற குடும்பத்திலிருந்தும் குறைந்தபட்சம் ஒரு சகோதரியாவது இந்த பிரச்சாரத்தில் சேர வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள்” என்று மோடி குறிப்பிட்டார்.

'ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு' முயற்சியை விளக்கிய பிரதமர், ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் உள்ளுர் பொருட்களை பெரிய சந்தைகளுக்கு எடுத்துச் செல்லும் முயற்சி இது என்றார். கிராமப் பொருளாதாரத்தில் பெண் தொழில்முனைவோருக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்க அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாக திரு மோடி கூறினார். சுய உதவிக்குழுக்கள் 500 கோடி மதிப்பிலான பொருட்களை குறிப்பாக தங்கள் தயாரிப்புகளுக்காக உருவாக்கப்பட்ட சந்தைகளில் விற்பனை செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். பிரதமரின் வன் தன் யோஜனா மற்றும் பிரதமரின்  கௌஷல் விகாஸ் யோஜனாவின் பலன்களும் பெண்களைச் சென்றடைவதாக அவர் கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபையை அணுகவும், அதன் மூலம் 2023 ஆம் ஆண்டை சிறுதானியங்களின் ஆண்டாக அறிவிக்கவும் இந்தியா மிகப்பெரிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்பதை பிரதமர் எடுத்துரைத்தார். நாட்டில் செப்டம்பர் மாதம் ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்பட்டு வருவதையும் பிரதமர் நினைவு கூர்ந்தார். வருகை தரும் வெளிநாட்டுப் பிரமுகர்களுக்கான  மெனுவில் சிறு தானியங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு பொருளாவது இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதாக பிரதமர் தெரிவித்தார்.

2014 ஆம் ஆண்டு முதல் அரசு மேற்கொண்ட  முயற்சிகளை நினைவுகூர்ந்த பிரதமர், பெண்களின் கண்ணியத்தை உயர்த்துவதற்கும், அவர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் சவால்களைத் தீர்ப்பதற்கும் நாடு தொடர்ந்து உழைத்து வருவதாகக் கூறினார். கழிவறை இல்லாதது மற்றும் சமையலறையில் உள்ள விறகிலிருந்து வரும் புகையால் ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பான பிரச்சனைகளில் பெண்கள் எப்படி மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டார்கள் என்பதை திரு மோடி நினைவு கூர்ந்தார். நாட்டில் 11 கோடிக்கும் அதிகமான கழிவறைகள் கட்டப்பட்டு, 9 கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்புகள், இந்தியாவின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு குழாயிலிருந்து தண்ணீர் வழங்குவது ஆகியவற்றின்  மூலம் அவர்களின் வாழ்க்கை எளிதாகிவிட்டது என்று பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். . மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் கீழ், ரூ.11000 கோடி நேரடியாக கர்ப்பிணித் தாய்மார்களின் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மத்தியப் பிரதேசத்தில் உள்ள தாய்மார்களுக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.1300 கோடி கிடைத்தது என்று கூறிய அவர், குடும்பங்களின் நிதி முடிவெடுப்பதில் பெண்களின் பங்கு அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டினார்.

ஜன்தன் வங்கிக் கணக்குகள் குறித்துப் பேசிய பிரதமர், இது நாட்டில் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் மிகப்பெரிய ஊடகமாக மாறியுள்ளது என்றார். கொரோனா காலத்தில், ஜன்தன் வங்கிக் கணக்குகளின் சக்தியே பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு பாதுகாப்பாகவும் நேரடியாகவும் பணத்தை மாற்றுவதற்கு அரசுக்கு உதவியது என்பதை பிரதமர்  நினைவு கூர்ந்தார். “இன்று, பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வீடுகளில் பெண்களின் பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளன. நாட்டிலுள்ள 2 கோடிக்கும் அதிகமான பெண்களை வீட்டு உரிமையாளர்களாக மாற்றுவதற்கு எங்கள் அரசு உதவியுள்ளது. முத்ரா திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் சிறு தொழில்கள் மற்றும் வணிகங்களுக்கு இதுவரை ரூ.19 லட்சம் கோடி  கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் 70 சதவீதம் பெண் தொழில் முனைவோர் மூலம் பெறப்பட்டுள்ளது. அரசின் இத்தகைய முயற்சிகளால், குடும்பத்தின் பொருளாதார முடிவுகளில் பெண்களின் பங்கு இன்று அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்றார்.

"பெண்களின் பொருளாதார வலுவூட்டல் சமூகத்தில் சமமாக அவர்களை வலுப்படுத்துகிறது" என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்தியாவின் மகள்கள் இப்போது சைனிக் பள்ளிகளில் சேர்வது, போலீஸ் கமாண்டோக்கள் மற்றும் ராணுவத்தில் சேர்வது எப்படி என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், மூடிய கதவுகளைத் திறந்து அவர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கியதற்காக அரசைப் பாராட்டினார். கடந்த 8 ஆண்டுகளில் ஒவ்வொரு துறையிலும் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றங்கள் பற்றி  அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பிரதமர், நாடு முழுவதும் காவல் துறையில் பெண்களின் எண்ணிக்கை 1 லட்சத்தில் இருந்து 2 லட்சத்துக்கும் அதிகமாக இரு மடங்காக உயர்ந்துள்ளது என்பதை அனைவருக்கும் தெரிவிப்பதில்  பெருமிதம் அடைவதாகத் தெரிவித்தார். நமது 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகள்கள் தற்போது ராணுவ படைகளில்  அங்கம் வகித்து நாட்டின் எதிரிகளுக்கு எதிராகப் போரிட்டு வருகின்றனர் என்பதையும் பிரதமர் எடுத்துரைத்தார். “இந்த எண்ணிக்கை 8 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட கிட்டத்தட்ட இரு மடங்காகும்”, என  பிரதமர் மேலும் கூறினார், “உங்கள் பலத்தில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. சப்கா பிரயாஸ் மூலம், ஒரு சிறந்த சமுதாயத்தையும், வலிமையான தேசத்தையும் உருவாக்குவதில் நிச்சயம் வெற்றி பெறுவோம்.

நிகழ்ச்சியில், மத்தியப் பிரதேச ஆளுநர் திரு  மங்குபாய் படேல், முதலமைச்சர்  திரு சிவராஜ் சிங் சவுகான், மத்திய அமைச்சர்கள் திரு நரேந்திர சிங் தோமர், திரு ஜோதிர் ஆதித்ய சிந்தியா, டாக்டர் வீரேந்திர குமார், திரு ஃபக்கன் சிங் குலாஸ்தே, திரு  பிரஹலாத் படேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

**************



(Release ID: 1860146) Visitor Counter : 201