பிரதமர் அலுவலகம்
குஜராத் மாநிலம் புஜ்ஜில் பல்வேறு திட்டங்களின் அடிக்கல் நாட்டு மற்றும் துவக்க விழாவில் பிரதமர் உரையின் தமிழாக்கம்
Posted On:
28 AUG 2022 6:13PM by PIB Chennai
புகழ்பெற்ற முதலமைச்சர் திரு பூபேந்திர பாய் பட்டேல் அவர்களே, எனது நாடாளுமன்ற சகாவும், குஜராத் மாநில பிஜேபி தலைவருமான திரு சி. ஆர். பாட்டில் அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, குஜராத் அரசின் அமைச்சர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, சகோதர, சகோதரிகளே!
இன்று மிகுந்த உணர்ச்சிபூர்வமாக உள்ளேன். புஜ் பகுதியில் ஸ்மிருதி வன நினைவகம் மற்றும் அஞ்ஜாரில் வீர் பால் சமாரக் ஆகியவை குஜராத்தும் ஒட்டுமொத்த தேசமும் கட்ச் பகுதியின் வலியைப் பகிர்ந்து கொள்வதற்கான அடையாளங்களாகும். அவற்றின் கட்டமைப்பிற்கு பின்னணியில் உள்ள வியர்வை மற்றும் கடின உழைப்பை அவை நினைவூட்டுவதுடன், ஏராளமான குடும்பங்களின் கண்ணீர் துளிகளையும் நினைவூட்டுகின்றன. அஞ்ஜாரில் குழந்தைகள் நினைவகம் அமைக்க வேண்டும் என்று இந்த பகுதியைச் சேர்ந்த குழந்தைகளின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்திருந்ததை நினைவுகூர்கிறேன். கர சேவை வாயிலாக இதனை நிறைவேற்றுவோம் என்று அப்போது நாம் அனைவரும் முடிவு செய்திருந்தோம். தங்களது அன்பிற்குரியவர்களையும் குழந்தைகளையும் இழந்தோருக்காக மிகுந்த கனத்த இதயத்துடன் இன்று அந்த நினைவகங்களை அர்ப்பணிக்கிறேன்.
சகோதர, சகோதரிகளே,
இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு கட்ச் பகுதி எவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தது என்பதையும், அதன் பிறகு அந்தப் பகுதி எவ்வாறு உறுதியுடன் மீண்டது என்பதையும் ஸ்மிருதி வனம் பிரதிபலிக்கிறது. அமெரிக்காவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களுக்கு பிறகு அங்கு அமைக்கப்பட்ட நினைவகம், அதேபோல ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சுக்கு பிறகு ஜப்பானில் உருவாக்கப்பட்ட அருங்காட்சியகம் உள்ளிட்ட உலகின் தலைசிறந்த நினைவகங்களுக்கு நிகராக ஸ்மிருதி வனம் அமைந்துள்ளது என்பதை மிகுந்த பணிவுடன் நாட்டு மக்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இயற்கை, பூமி, வாழ்க்கை குறித்த முழு தகவல்களையும் இது வழங்குகிறது. பூமி மற்றும் இயற்கையின் குணங்களை பள்ளி மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில், கல்வி சுற்றுலாவிற்கு மாணவ, மாணவிகளை இங்கு அழைத்து வருவதை கட்ச் கல்வித்துறை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
இந்த ஸ்மிருதி வனம், உலகின் சிறந்த சுற்றுலா பகுதிகளுள் முக்கியமானதாகும். அதனை பராமரிக்கும் பொறுப்பு கட்ச் பகுதியின் நமது சகோதர, சகோதரிகளின் வசம் உள்ளது. இப்பகுதி முழுவதையும் அடர்ந்த காடாக, பசுமையானதாக மாற்ற வேண்டும். இதற்கு ஆக்கபூர்வமான பங்களிப்பும், தொடர் ஒத்துழைப்பும் அவசியம்.
உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக்க நன்றி!
பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்
***************
(Release ID: 1855055)
(Release ID: 1855412)
Visitor Counter : 134
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam