பிரதமர் அலுவலகம்
காந்திநகரின் கிப்ட் நகரில் ஐஎப்எஸ்சிஏ தலைமையகத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்
Posted On:
29 JUL 2022 6:19PM by PIB Chennai
காந்திநகரில் உள்ள கிப்ட் நகரில் சர்வதேச நிதிச் சேவை மையங்கள் ஆணையத்தின் (ஐஎப்எஸ்சிஏ) தலைமையக கட்டிடத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்தியாவின் முதல் சர்வதேச தங்க பரிவர்த்தனை நிலையத்தையும் அவர் தொடங்கி வைத்தார். மேலும் அவர் தேசிய பங்கு சந்தை,சர்வதேச நிதிச்சேவை மையம் –சிங்கப்பூர் பங்கு சந்தை இணைப்பையும் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல், மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், மத்திய, மாநில அமைச்சர்கள், தூதரக அதிகாரிகள், தொழில் அதிபர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப வலிமைக்கு இந்த நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், இந்தியாவின் வல்லமையின் மீதான உலகளாவிய நம்பிக்கையை அதிகரிப்பதற்கும் இது மிகவும் முக்கியமானது என்றும் கூறினார். “இன்று, கிப்ட் நகரில், சர்வதேச நிதிச் சேவை மையங்கள் ஆணையத்தின் தலைமையக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் அதன் கட்டிடக்கலையில் எவ்வளவு பிரமாண்டமாக இருக்கிறதோ, அதே அளவு இந்தியாவை பொருளாதார வல்லரசாக மாற்றுவதற்கு வரம்பற்ற வாய்ப்புகளை உருவாக்கும் என்று நான் நம்புகிறேன்”, என்றார் அவர் . சர்வதேச நிதிச்சேவை மையம் புதுமைகளை ஊக்குவிக்கும் என்றும், வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருக்கும் என்றும் பிரதமர் கூறினார். இன்று தொடங்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் தளங்கள் 130 கோடி இந்தியர்கள் நவீன உலகப் பொருளாதாரத்துடன் இணைக்க உதவும். "உலகளாவிய நிதிக்கு வழிகாட்டும் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளின் குழுவில் இந்தியா இப்போது நுழைகிறது" என்று அவர் மேலும் கூறினார்.
கிப்ட் நகர் வணிகத்திற்காக மட்டுமல்லாமல் , நாட்டின் சாமானியர்களின் அபிலாஷைகளுக்கு உரிய ஒரு பகுதியாகவும் உள்ளது என்று கூறிய அவர், இந்தியாவின் எதிர்காலம் பற்றிய பார்வை இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் இந்தியாவின் பொன்னான கடந்த கால கனவுகளும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளன என்றார்.
இன்று இந்தியா உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இருப்பதாக பிரதமர் கூறினார். எனவே எதிர்காலத்தில், நமது பொருளாதாரம் இன்று இருப்பதை விட பெரியதாக இருக்கும் போது, அதற்கு இப்போதே தயாராக இருக்க வேண்டும். இதற்கு உலகப் பொருளாதாரத்தில் நமது தற்போதைய மற்றும் எதிர்காலப் பங்கைப் பூர்த்தி செய்யக்கூடிய நிறுவனங்கள் தேவை. இந்த நடவடிக்கைகள் அந்த திசையில் ஒரு முக்கியமான படியாகும் என்றார். இந்தியப் பெண்களின் பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்வதில் தங்கத்தின் பங்கை அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் அடையாளம் ஒரு பெரிய சந்தையாக மட்டும் நின்றுவிடாமல் அது ஒரு 'சந்தை தயாரிப்பாளராக' இருக்க வேண்டும் என்றார். அவர் மேலும் கூறுகையில், “ஒருபுறம், உள்ளூர் நலனுக்காக உலகளாவிய மூலதனத்தைக் கொண்டு வருகிறோம். மறுபுறம், உலக நலனுக்காக உள்ளூர் உற்பத்தித்திறனையும் பயன்படுத்துகிறோம் என்று அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
***************
(Release ID: 1846486)
Visitor Counter : 204
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam