பிரதமர் அலுவலகம்
புதுதில்லியின் விக்யான் பவனில் ஈஷா அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த ‘மண்ணைக் காப்போம்’ என்ற நிகழ்ச்சியில் பிரதமரின் உரை
Posted On:
05 JUN 2022 2:14PM by PIB Chennai
வணக்கம்!
உங்கள் அனைவருக்கும் இனிய உலக சுற்றுச்சூழல் தின வாழ்த்துகள்! இந்த நன்னாளில் சத்குருவிற்கும், ஈஷா அறக்கட்டளைக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள். நாடு தனது 75-வது சுதந்திர ஆண்டைக் கொண்டாடும் வேளையிலும், இந்த அமிர்த காலத்தில் புதிய உறுதிப்பாடுகளை எடுத்து வரும் சூழலிலும், இதுபோன்ற இயக்கங்கள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.
நண்பர்களே,
கடந்த எட்டு ஆண்டுகளில் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் ஏதேனும் ஒரு வகையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி வருகின்றன. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகள், பல அம்சங்கள் நிறைந்தவை. பருவநிலை மாற்ற பிரச்சனையால் உலகம் பாதிக்கப்பட்டுள்ள வேளையில், இந்தியா இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
உலகின் மிகப்பெரிய நாடுகள் பூமியின் வளங்களை மேலும் மேலும் சுரண்டுவதோடு மட்டுமல்லாமல், உலகளவில் மிக அதிக கரியமிலவாயுவையும் வெளியிடுகின்றன. உலகின் சராசரி கரியமிலவாயு வெளியேற்றம் ஒரு நபருக்கு 4 டன்னாக உள்ள நிலையில், இந்தியாவில் ஒரு நபருக்கு சுமார் 0.5 டன் கரியமிலவாயு மட்டுமே வெளியேற்றப்படுகிறது. மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை நோக்கி நாட்டிற்குள் மட்டுமல்லாமல், உலக நாடுகளுடனும் இணைந்து முழுமையான அணுகுமுறையை இந்தியா பின்பற்றுகிறது.
நண்பர்களே,
கடந்த எட்டு ஆண்டுகளில் மண்ணை பாதுகாக்க நாடு அயராது பாடுபட்டுள்ளது. இதற்காக 5 முக்கிய விஷயங்களில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம்-
முதலாவது, மண்ணை ரசாயனம் இல்லாமல் ஆக்குவது எப்படி? இரண்டாவது, மண்ணில் வாழும் உயிரினங்களை காப்பது எப்படி? மூன்றாவது, மண்ணில் ஈரப்பதத்தை பராமரிப்பது எவ்வாறு? நான்காவது, நிலத்தடிநீர் குறைவால் மண் சேதமடைவதை தடுப்பது எவ்வாறு? ஐந்தாவது, காடுகள் குறைவதால் ஏற்படும் தொடர்ச்சியான மண் அரிப்பை தடுப்பது எவ்வாறு?
நண்பர்களே,
இந்த அனைத்து விஷயங்களையும் கருத்தில் கொண்டு கடந்த சில ஆண்டுகளில் நாட்டில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றம், வேளாண்மைக் கொள்கையாகும். முன்காலத்தில் மண்ணின் வகை, மண்ணில் உள்ள சத்துக் குறைபாடு குறித்து போதிய தகவல் நமது விவசாயிகளுக்கு கிடைக்காமல் இருந்தது. இந்தப் பிரச்சனையை எதிர்கொள்வதற்காக விவசாயிகளுக்கு மண்வள அட்டைகளை வழங்கும் நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்டது. 22 கோடிக்கும் அதிகமான அட்டைகள் நாடுமுழுவதும் வழங்கப்பட்டுள்ளன. மண்வள அட்டைகளிலிருந்து பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் கோடிக்கணக்கான விவசாயிகள் தற்போது உரங்களையும் நுண்- ஊட்டச்சத்துக்களையும் பயன்படுத்துகிறார்கள்.
நண்பர்களே,
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பூமி மற்றும் மண்ணை காப்பது பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்தால், மேலும் சிறந்த பலன்கள் ஏற்படும். தங்களது முயற்சிகளில் பள்ளி- கல்லூரிகள், நாட்டு நலப்பணி திட்டம், தேசிய மாணவர் படை முதலியவற்றை இணைக்குமாறு அனைத்து அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள், தன்னார்வ நிறுவனங்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.
உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.
நன்றி!
பொறுப்புதுறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.
***************
(Release ID: 1831292)
(Release ID: 1831462)
Visitor Counter : 175
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam