பிரதமர் அலுவலகம்

பிரிட்டிஷ் பிரதமருடான கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

Posted On: 22 APR 2022 3:40PM by PIB Chennai

மேதகு பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்களே, சிறப்புமிக்க பிரதிநிதிகளே, ஊடக நண்பர்களே வணக்கம்!

முதலில் இந்தியாவுக்கு வருகை தந்திருக்கும் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் அவரது குழுவினரை நான் அன்புடன் வரவேற்கிறேன்.

பிரதமர் என்ற முறையில் இது அவரது முதலாவது பயணமாக இருக்கலாம். ஆனால், இந்தியாவின் பழைய நண்பர் என்ற முறையில் அவர் இந்தியாவைப்பற்றி நன்கு அறிந்தவராவார். பல ஆண்டுகளாக, பிரதமர் ஜான்சன், இந்தியாவுக்கும், பிரிட்டனுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதில் மிக முக்கிய பங்கை ஆற்றியுள்ளார்.

விடுதலையின் அமிர்த காலத்தை நாம் கொண்டாடும் வேளையில், பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்தியப் பயணம் வரலாற்று முக்கியத்துவத்தைக்கொண்டுள்ளது.

நண்பர்களே, கடந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே விரிவான மூலோபாய கூட்டாண்மையை நாம் ஏற்படுத்தினோம். நமது உறவுக்கு ஒரு திசையைக்காட்டும் வகையில் 2030 வழிகாட்டுதல் இலக்கை நாம் வகுத்துள்ளோம். நமது பேச்சுவார்த்தையில், வருங்காலத்துக்கான இலக்குகளையும் வகுத்துள்ளோம்.

கடந்த சில ஆண்டுகளில், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியா ஏற்படுத்தியுள்ளது. அதேவேகம் மற்றும் அர்ப்பணிப்புடன் இங்கிலாந்துடனும்  ஒப்பந்தம் மேற்கொள்ள விரும்புகிறோம்.

இந்தப் பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க இருதரப்பும் ஒப்புக்கொண்டுள்ளது. இதைப்போல பாதுகாப்புத் துறையிலும் ஒத்துழைப்பை அதிகரிக்க ஒப்புக்கொண்டுள்ளோம். இந்தத் துறையில் உற்பத்தி, தொழில்நுட்பம், வடிவமைப்பு மற்றும் மேம்பாடு ஆகியவற்றில் தற்சார்பு இந்தியாவுக்கான திட்டத்தில் பிரிட்டனின் ஆதரவை வரவேற்கிறோம்.

பிரிட்டனில் வசிக்கும் 16 லட்சம் இந்திய வம்சாவளியினர் பொருளாதாரத்தின் ஒவ்வொரு பிரிவிலும் தங்களது ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கி வருகின்றனர். அவர்களது சாதனைகளைக் கண்டு நாம் பெருமிதம் கொள்கிறோம். நமது இணைப்பு பாலத்தை மேலும் வலுப்படுத்த நாம் விரும்புகிறோம். இதில் பிரதமர் ஜான்சன் தனிப்பட்ட முறையில் பங்களித்துள்ளார். இதற்காக அவரை நான் வாழ்த்துகிறேன்.

நண்பர்களே, கிளாஸ்கோ சிஓபி-26 உச்சிமாநாட்டில் எடுத்துக்கொள்ளப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். இன்று பருவநிலை மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த நாம் இசைந்துள்ளோம்.

உக்ரைனில் உடனடியாக போர்நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முன்வரவேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். ஆப்கானிஸ்தான் குறித்தும் நாம் பேச்சு நடத்தியுள்ளோம். அங்கு அமைதி, நிலைத்தன்மையை வலியுறுத்துவதுடன், மற்ற நாடுகளில் பயங்கரவாதத்தைப் பரப்ப ஆப்கானிஸ்தானை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம்.

மீண்டும் ஒரு முறை உங்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். மிக்க நன்றி!

---- 



(Release ID: 1819284) Visitor Counter : 181