தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு, வெளியுறவு மற்றும் பொது ஒழுங்கு தொடர்பாக தவறான தகவல்களை பரப்பிய 22 யுடியூப் சேனல்களை முடக்கி உள்ளது தகவல் ஒலிபரப்பு அமைச்சகம்
Posted On:
05 APR 2022 2:18PM by PIB Chennai
தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் 2021-ன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அவசர கால அதிகாரத்தைப் பயன்படுத்தி மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் 04.04.2022 அன்று 22 யுடியூப் செய்தி சேனல்கள், 3 டுவிட்டர் கணக்குகள், 1 பேஸ்புக் கணக்கு, ஒரு செய்தி வலைதளம் ஆகியவற்றை முடக்கி உத்தரவிட்டுள்ளது. முடக்கப்பட்டுள்ள யுடியூப் சேனல்களின் மொத்த பார்வையாளர்கள் எண்ணிக்கை 260 கோடிக்கும் அதிகமாகும். இந்த சேனல்கள் தவறான செய்திகளை பரப்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தன. தேசிய பாதுகாப்பு, இந்தியாவின் வெளியுறவு, பொது ஒழுங்கு ஆகியவற்றை மீறுவதாக இந்த செய்திகள் அமைந்திருந்தன.
இந்திய யுடியூப் அடிப்படையிலான செய்தி சேனல்கள் மீது முதன் முறையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த 22 சேனல்களில் 18 இந்தியாவை சேர்ந்தது என்பதுடன், 4 பாகிஸ்தானை சேர்ந்தவையாகும்.
இந்திய ஆயுதப்படைகள் ஜம்மு-காஷ்மீர் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து தவறான செய்திகளை இந்தச் சேனல்கள் பரப்பி வந்தன. இந்தியாவுக்கு எதிரான சில செய்திகள் உள்ளிட்டவற்றை வெளியிட்ட சமூக ஊடகக் கணக்குகள் பாகிஸ்தானிலிருந்து ஒருங்கிணைந்து இயக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. உக்ரைனில் தற்போது நிலவும் சூழல் குறித்தும் இந்த இந்திய யுடியூப் சேனல்கள் தவறான செய்திகளை வெளியிட்டு இந்தியாவின் வெளிநாட்டு உறவுகளை குலைக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
முடக்கப்பட்ட இந்திய யுடியூப் சேனல்கள் சில தொலைக்காட்சி செய்தி அலைவரிசைகளின் பெயர்களையும், அந்த சேனல்களின் செய்தி வாசிப்பவர்களின் படங்களையும் வெளியிட்டு, உண்மையான செய்தி என்ற தோற்றம் ஏற்படும் வகையில் பார்வையாளர்களுக்கு தவறான தகவல்களை பரப்பி வந்தன. தவறான செய்திகளுடன் இந்த சேனல்களின் சிறுபடங்களும், வீடியோ காட்சிகளும் சமூக ஊடகங்களில் இடம் பெற்றிருந்தன. இதில் சில, பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு எதிராகத் திட்டமிட்டு தவறான செய்திகளை பரப்பி வந்தது தெரிய வந்துள்ளது.
இந்த நடவடிக்கையையும் சேர்த்து, 2021 டிசம்பர் மாதம் முதல் அமைச்சகம் 78 யுடியூப் செய்தி சேனல்களை முடக்கியுள்ளது. நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை, ஒருமைப்பாடு, பொது ஒழுங்கு தொடர்பான அடிப்படையில் இவை முடக்கப்பட்டுள்ளன.
அதிகாரபூர்வமான, நம்பகத்தன்மை வாய்ந்த பாதுகாப்பான ஆன்லைன் செய்தி ஊடக சூழலை உறுதி செய்ய மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, தேசியப் பாதுகாப்பு, அண்டை நாடுகளுடனான உறவு, பொது ஒழுங்கு ஆகியவற்றை குலைக்கும் எந்த முயற்சிகளையும் அரசு முறியடிக்கும்.
முடக்கப்பட்ட சேனல்களின் பட்டியலை தெரிந்து கொள்ள ஆங்கில செய்திக் குறிப்பை பார்க்கவும். https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1813603
****
(Release ID: 1813643)
Visitor Counter : 337
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam