பிரதமர் அலுவலகம்
5-வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்த கருத்துக்களின் தமிழாக்கம்
Posted On:
30 MAR 2022 12:10PM by PIB Chennai
மேன்மை தங்கிய இலங்கை அதிபர் அவர்களே,
பிம்ஸ்டெக் உறுப்புநாடுகளைச் சேர்ந்த எனது நண்பர்களே, சக தலைவர்களே,
பிம்ஸ்டெக் தலைமைச்செயலாளர் அவர்களே,
வணக்கம்!
5-வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். பிம்ஸ்டெக் நிறுவப்பட்டதன் 25-வது ஆண்டு என்பதால் இன்றைய உச்சிமாநாடு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக நான் கருதுகிறேன். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த உச்சிமாநாட்டின் விளைவுகள் பிம்ஸ்டெக் வரலாற்றின் பொன்னான அத்தியாயத்தை எழுதும்.
தலைவர்களே,
கடந்த 2 ஆண்டுகளில் சவால் மிக்க சூழலில் பிம்ஸ்டெக் அமைப்புக்கு திறமையான தலைமைத்துவத்தை அதிபர் ராஜபக்சே வழங்கியிருக்கிறார். முதலில் அவருக்கு நான் பாராட்டுத்தெரிவிக்க விரும்புகிறேன். உலகளாவிய சவால்மிக்க இன்றைய சூழல் நமது பிராந்தியத்தையும் விட்டுவைக்கவில்லை. நமது பொருளாதாரமும், நமது மக்களும் கொவிட்-19 பெருந்தொற்றின் தாக்கங்களை இன்னமும் எதிர்கொண்டிருக்கிறார்கள்.
கடந்த சில வாரங்களாக ஐரோப்பாவின் நிகழ்வுகள் சர்வதேச ஒழுங்கின் நிலைத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்தச் சூழலில் பிம்ஸ்டெக் பிராந்திய ஒத்துழைப்பை மேலும் தீவிரமாக்குவது முக்கியமானதாக உள்ளது. நமது பிராந்திய பாதுகாப்புக்கு கூடுதல் முன்னுரிமை வழங்குவதும் முக்கியமாகும்.
தலைவர்களே,
நமது பிம்ஸ்டெக் சாசனம் இன்று ஏற்கப்பட்டுள்ளது. நிறுவன ரீதியான அமைப்பை உருவாக்கும் நமது முயற்சிகளில் இது முக்கியமானதாகும். இதற்காக தலைவருக்கு நான் நன்றி தெரி்விக்கிறேன். இந்த சாசனத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உச்சிமாநாட்டை நடத்தவும், ஒவ்வொரு ஆண்டும் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தை நடத்தவும் நாம் முடிவு செய்துள்ளோம். இந்த முடிவை நான் வரவேற்கிறேன். இந்த கட்டமைப்பை மேலும் எவ்வாறு வலுப்படுத்துவது என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
இந்த சூழலில் தொலைநோக்கு ஆவணத்தை தயாரிக்க முக்கியமான தலைவர்களின் குழு ஒன்றை அமைப்பதற்கு தலைமைச் செயலாளர் யோசனை கூறியிருக்கிறார். இதனை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
தலைவர்களே,
நமது பிராந்தியம் எப்போதும் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படுவதாக உள்ளது. பேரிடர் நிர்வாகத்தில் குறிப்பாக பேரிடர் அபாய குறைப்பில் ஒத்துழைப்பதற்கான அமைப்பாக வானிலை மற்றும் பருவநிலைக்கான பிம்ஸ்டெக் மையம் உள்ளது. இதனை மேலும் தீவிரமாக்க உங்களின் ஒத்துழைப்பை நான் நாடுகிறேன். இந்த மையத்தின் பணி்யை மீண்டும் தொடங்குவதற்கு 3 மில்லியன் டாலர் வழங்க இந்தியா தயாராக உள்ளது.
தலைவர்களே,
இன்றைய உச்சிமாநாட்டின் போது, கிரிமினல் விஷயங்கள் தொடர்பாக பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தில் நாம் கையெழுத்திட்டிருக்கிறோம். இத்தகைய நடவடிக்கைகளில் நாம் மேலும் வேகமாக முன்னேற வேண்டும். அப்போது தான் நமது சட்டஅமைப்புகளுக்கிடையே சிறந்த ஒத்துழைப்பு இருக்க முடியும்.
தூதரக ரீதியிலான பயிற்சி அமைப்புகளுக்கிடையே ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியுள்ளது. இதே போன்ற ஒப்பந்தத்தை சட்ட அமலாக்க பயிற்சி அமைப்புகளுக்கிடையேயும் உருவாக்க வேண்டும். இந்தியாவின் தடய அறிவியல் பல்கலைக்கழகம் தனித்துவமான, இந்தத் துறையில் உலகத்தரத்திலான நிறுவனமாகும். இதில் பிம்ஸ்டெக் நாடுகளின் தடயவியல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு திறன் மேம்பாட்டு பிரிவுக்கு நாம் ஏற்பாடு செய்யலாம்.
பிம்ஸ்டெக்-ன் அடுத்த தலைவராகியிருக்கும் தாய்லாந்து பிரதமர் பிரயூட் சான்-ஓ-சா அவர்களை வரவேற்று எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி!
***************
(Release ID: 1813566)
Visitor Counter : 129