பிரதமர் அலுவலகம்
கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா நினைவு மண்டபத்தில் பிப்லோபி பாரத் காட்சிக் கூடத்தை திறந்து வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
Posted On:
23 MAR 2022 9:14PM by PIB Chennai
மேற்கு வங்க ஆளுநர் திரு ஜகதீப் தன்கர் அவர்களே, மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர், திரு கிஷன் ரெட்டி அவர்களே, விக்டோரியா நினைவு மண்டபத்துடன் தொடர்புடைய அனைத்து முக்கிய பிரமுகர்களே, பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களே, கலை மற்றும் கலாச்சாரத்தின் தலைசிறந்தவர்களே, தாய்மார்களே மற்றும் பெரியோர்களே!
முதலில் மேற்கு வங்க மாநிலம் பிர்பூமில் நடந்த வன்முறை சம்பவத்திற்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். வங்காளத்தில் இதுபோன்ற கொடூரமான குற்றத்தைச் செய்த குற்றவாளிகளுக்கு மாநில அரசு நிச்சயம் தண்டனையை உறுதி செய்யும் என்று நம்புகிறேன்.
இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களையும், குற்றவாளிகளை ஊக்குவிப்பவர்களையும் ஒருபோதும் மன்னிக்க வேண்டாம் என்று வங்காள மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன். குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்படுவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்திய அரசு செய்யும் என்று மத்திய அரசின் சார்பில் மாநிலத்திற்கு உறுதியளிக்கிறேன்.
சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழா சமயத்தில் இந்த மண்ணின் மாபெரும் புரட்சியாளர்களுக்கும் அவர்களின் தியாகங்களுக்கும் இந்திய மக்கள் சார்பாக நான் தலை வணங்குகிறேன். தியாகிகள் தினத்தில், நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த அனைத்து வீரர்கள், வீராங்கனைகளுக்கும் நன்றியுள்ள தேசத்தின் சார்பாக அஞ்சலி செலுத்துகிறேன். “எந்த ஆயுதத்தாலும் அவனைத் துண்டு துண்டாக வெட்ட முடியாது, நெருப்பால் எரிக்க முடியாது,” என்று ஸ்ரீமத் பகவத் கீதையில் எழுதப்பட்டுள்ளது. இப்படிப்பட்டவர்கள் தான் நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்பவர்கள். அவர்கள் அமரத்துவத்தை அடைகிறார்கள். உத்வேகத்தின் மலராக அவர்கள் மாறி தலைமுறை தலைமுறையாக தங்கள் வாசனையைப் பரப்புகிறார்கள். அதனால்தான் அமர் ஷஹீத் பகத் சிங், ராஜ்குரு, சுகதேவ் போன்றோரின் தியாகங்களின் வரலாறு இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் ஒவ்வொரு குழந்தையின் உதடுகளிலும் உள்ளது.
இந்த மாவீரர்களின் கதைகள் நம் அனைவரையும் நாட்டிற்காக அயராது உழைக்க தூண்டுகிறது. சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவின் போது தியாகிகள் தினம் மிகவும் முக்கியமானது. இன்று, சுதந்திரத்திற்கு பங்களித்த மாவீரர்களுக்கு தேசம் அஞ்சலி செலுத்துவதோடு அவர்களின் பங்களிப்புகளை நினைவுக் கூர்கிறது.
பங்கிம் பாபுவின் வந்தே மாதரம் இன்று இந்தியர்களின் வாழ்க்கை மந்திரமாக மாறிவிட்டது. ஜான்சி ராணி லக்ஷ்மிபாய், ஜல்கரிபாய், சித்தூரின் ராணி சென்னம்மா, மாதங்கினி ஹஸ்ரா, பினா தாஸ், கமலா தாஸ் குப்தா, கனக்லதா பருவா போன்ற துணிச்சலான பெண்கள் சுதந்திரப் போராட்டச் சுடரைப் பெண் சக்தியால் பற்றவைத்தனர்.
அப்படிப்பட்ட அனைத்து மாவீரர்களின் நினைவாக இன்று காலை முதல் பல இடங்களில் ‘பிரபாத் பெரிஸ்’ (சிறு ஊர்வலம்) நடைபெற்றது. நமது இளம் நண்பர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர். அமிர்தப் பெருவிழாவின் இந்த வரலாற்றுக் காலத்தில், தியாகிகள் தினத்தன்று விக்டோரியா நினைவிடத்தில் பிப்லோபி பாரத் காட்சிக் கூடம் திறக்கப்பட்டுள்ளது. இன்று இந்த இடம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், அரவிந்தோ கோஷ், ராஸ் பிஹாரி போஸ், குதி ராம் போஸ், பாகா ஜதின், பினோய், பாதல், தினேஷ் போன்ற பல சிறந்த போராளிகளின் நினைவுகளால் புனிதப்படுத்தப்பட்டுள்ளது.
நமது பண்டையப் பெருமை நமது நிகழ்காலத்தை வழிகாட்டி அழைத்துச் சென்று சிறப்பான எதிர்காலத்தை கட்டமைக்க நம்மை ஊக்குவிக்கிறது. எனவே, தனது கடந்தகாலத்தை உந்துசக்தியின் ஆதாரமாக நாடு பார்க்கிறது.
கடந்த காலங்களில் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகளைப் புதிய இந்தியா மீட்டு வருகிறது. மேற்கு வங்கத்தின் பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் அரசு கொண்டுள்ள உறுதியின் ஆதாரமாக பிப்லோபி பாரத் காட்சிக் கூடம் விளங்குகிறது.
பாரம்பரியச் சுற்றுலாவை ஊக்குவிக்கும் நாடு தழுவிய பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. பாரதம், பக்தி, ஒற்றுமை, ஒழுக்கம் உள்ளிட்டவை நமது முன்னுரிமைகளாக இன்றும் இருக்கவேண்டும்.
தன்னம்பிக்கை, தற்சார்பு, பண்டைய அடையாளம் மற்றும் எதிர்கால மேன்மை ஆகியவை புதிய இந்தியாவின் லட்சியங்களாக உள்ளன. கடமை உணர்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1808917
***********
(Release ID: 1810005)
Visitor Counter : 230
Read this release in:
Urdu
,
English
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam