பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஸ்ரீராமானுஜாசாரியா நினைவாக 216 அடி உயரம் உள்ள ‘சமத்துவ சிலை’யைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்

Posted On: 05 FEB 2022 8:50PM by PIB Chennai

ஐதராபாதில் இன்று சமத்துவ சிலையைப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். சாதி, சமயம், நம்பிக்கை உள்ளிட்ட வாழ்க்கையில் அனைத்து அம்சங்களிலும் சமத்துவ சிந்தனையை மேம்படுத்திய 11-ம் நூற்றாண்டு பக்தி இயக்கத்தின் துறவி ஸ்ரீராமானுஜாசாரியாவின் நினைவாக 216 அடி உயரம் உள்ள சமத்துவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அமைச்சர் திரு ஜி.கிஷண் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் வசந்த பஞ்சமி புனித நாளில்  அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்ததோடு இத்தகைய நாளில் இந்தச் சிலையை அர்ப்பணித்ததற்கு தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

 “நாம் ‘அத்வைதத்தை’ பெற்றிருக்கும் அதே வேளையில் ‘த்வைதத்தையும்’ பெற்றிருக்கிறோம். மேலும் ‘த்வைதத்தையும்’, ‘அத்வைதத்தை’யும் இணைக்கும் ஸ்ரீராமானுஜாச்சாரியாவின் ‘விசிஷ்டாத்வைதத்தை’யும் கொண்டுள்ளோம். ஸ்ரீராமானுஜர் ஒரு பக்கம் மதிப்புமிக்க சன்னியாசிகள் பாரம்பரியத்தையும், மறுபக்கம் கீதா பாஸ்ய செயல்பாட்டின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் துறவியாக விளங்கினார். இந்தியாவின் சமுக சீர்திருத்தங்கள், முற்போக்கு அம்சங்கள் ஆகியவை அதன் வேர்களுக்கு அப்பாற்பட்டவை என்று கூறப்படுகிறது. ஆனால் ஸ்ரீராமானுஜரை நாம் காணும் போது முற்போக்கு மற்றும் பழமைக்கு இடையே முரண்பாடு இல்லை என்ற  உண்மையை  நாம் உணர்கிறோம்.

 சமூக சீர்திருத்தங்கள், தலித்கள் மற்றும் பிற்படுத்தப் பட்டோருக்கு பாடுதல் என்ற உண்மையான கோட்பாட்டை நாட்டுக்கு பரிச்சயமாக்கியவர் ஸ்ரீராமானுஜர். இன்று பிரம்மாண்டமான சமத்துவத்தின் சிலை வடிவில் சமத்துவச் செய்தியை அவர் வழங்கிக் கொண்டிருக்கிறார். அவரது செய்தியைத் தொடர்ந்து நாடு இன்று புதிய எதிர்காலத்திற்கு ‘அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி’ என்ற அடித்தளத்தை அமைத்திருக்கிறது. எந்த பாகுபாடும் இல்லாமல்  அனைவரின் வளர்ச்சிக்கும், சமூக நீதிக்கும் கூட்டாகப் பாடுபடுகிறோம். இதனால் பல நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்கள் முழுமையான கௌரவத்துடன் நாட்டின் வளர்ச்சியில்  பங்குதாரர்களாக மாறியிருக்கிறார்கள். கான்கிரீட் வீடுகள், விலையில்லா சமையல் எரிவாயு இணைப்புகள், ரூ.5 லட்சம் வரை கட்டணமில்லா மருத்துவச் சிகிச்சை, கட்டணமின்றி மின்சார இணைப்புகள், ஜன் தன் கணக்குகள், தூய்மை இந்தியா திட்டம் போன்றவை தலித்துகளையும், பிற்படுத்தப் பட்டவர்களையும், ஒடுக்கப்பட்டவர்களையும் வலுப்படுத்தி யிருக்கின்றன என்று பிரதமர் கூறினார்.

 இந்தியாவின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஒளிரும் ஊக்கமாக ஸ்ரீராமானுஜர் விளங்குகிறார் என்று  பிரதமர் குறிப்பிட்டார். தெற்கே பிறந்த அவரின் செல்வாக்கு, தெற்கே இருந்து வடக்கேயும், கிழக்கே இருந்து மேற்கேயும்  என இந்தியா முழுவதும் பரவியுள்ளது என்று அவர் கூறினார்.

  இந்தியாவின் விடுதலைப் போராட்டம் அதன் அதிகாரத்திற்கும், உரிமைகளுக்கும் மட்டுமானதாக இருக்கவில்லை. இந்தப் போராட்டத்தில் ஒரு பக்கம் காலனிய மனநிலையும், மறுபக்கம் வாழு, வாழவிடு என்ற கோட்பாடும் இருந்தது.  ஒரு பக்கம் இது இன ஆதிக்கம் மற்றும் பொருள்முதல்வாத எண்ணமாக இருந்தது. மறு பக்கம் மனிதகுலம் மற்றும் ஆன்மீகத்தின் மீதான நம்பிக்கையாக இருந்தது. இந்த போராட்டத்தில் இந்தியாவும் அதன் பாரம்பரியமும் வெற்றி கொண்டது. இந்தியாவின் விடுதலைப் போராட்டம் துறவிகளிடமிருந்து பெறப்பட்ட சமத்துவம், மனிதாபிமானம், ஆன்மீகம் என்ற சக்தியால் நடத்தப்பட்டது என்று பிரதமர் தெரிவித்தார்.

 இந்தச் சிலை தங்கம், வெள்ளி, செம்பு, வெண்கலம், துத்தநாகம் என்ற ஐந்து உலோகங்களின் கலவையான பஞ்சலோகத்தால் செய்யப்பட்டது. உலகிலேயே அமர்ந்தநிலையில் உள்ள மிக உயரமான சி்லைகளில் ஒன்றாக இது உள்ளது. ‘பத்ர வேதி’ என பெயரிடப்பட்டுள்ள 54 அடி உயரம் உள்ள அடிப்படை கட்டிடத்தின் மீது இந்த சிலை வைக்கப்பட்டுள்ளது. இதன் தளங்களில் வேதம் குறித்த டிஜிட்டல் நூலகம், ஆராய்ச்சி மையம், பண்டைக்கால இந்திய நூல்கள், திரையரங்கம், ஸ்ரீராமானுஜரின் பல படைப்புகளை விவரிக்கும் கல்விக்கூடம் ஆகியவை அமைந்துள்ளன. ஸ்ரீராமானுஜாச்சார்ய ஆசிரமத்தின் ஸ்ரீசின்ன ஜீயர் சுவாமி கருத்தாக்கத்தில் இந்தச் சிலை உருவாக்கப்பட்டது.

  இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீராமானுஜரின் வாழ்க்கைப் பயணம், போதனைகள் பற்றிய முப்பரிமாண வரைப்படக்காட்சி இடம் பெற்றது. சமத்துவச் சிலையை சுற்றி அமைக்கப்பட்ட 108 திவ்ய தேசங்களைப் பிரதமர் பார்வையிட்டார்.

  சமத்துவ சிலை திறப்பு தொடக்க நிகழ்வு, ஸ்ரீராமானுஜரின் ஆயிரமாவது பிறந்த ஆண்டையொட்டி நடைபெறும் 12 நாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகும்.

***************



(Release ID: 1795830)


(Release ID: 1796105) Visitor Counter : 296