பிரதமர் அலுவலகம்

இக்ரிசாட்டின் 50-வது ஆண்டு விழாவைத் தொடங்கிவைத்த பிரதமர் இரண்டு ஆராய்ச்சி மையங்களைத் தொடங்கிவைத்தார்

“உங்களின் ஆராய்ச்சியும், தொழில்நுட்பமும் வேளாண்மையை எளிதாக்கவும், நீடித்ததாக்கவும் மாற்ற உதவி செய்துள்ளன”

“புவிக்கோளத்திற்கு ஆதரவான மக்கள் இயக்கம் வெறும் வார்த்தைகளோடு நிற்காமல், இந்திய அரசின் செயல்களிலும் பிரதிபலிக்கிறது”

“பருவநிலை மாற்றத்திலிருந்து தனது விவசாயிகளைப் பாதுகாக்க ‘மீண்டும் அடிப்படைக்கு’, ‘எதிர்காலத்திற்குப் பயணம்’ என்ற கலவையில் இந்தியாவின் கவனம் இருக்கிறது”

“டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்க இந்தியாவின் முயற்சிகள் பெருமளவு அதிகரித்து வருகிறது”

“அமிர்த காலத்தின் போது, அதிகபட்ச வேளாண் வளர்ச்சியுடன் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் இந்தியா கவனம் செலுத்துகிறது”

“ஆயிரக்கணக்கான எஃப்பிஓ-க்களை அமைப்பதன் மூலம் சிறு விவசாயிகளுக்கு விழிப்பையும், பலமான சந்தை சக்தியையும் உருவாக்க நாங்கள் விரும்புகிறோம்”
“உணவுப் பாதுகாப்பிலும், ஊட்டச்சத்து பாதுகாப்பிலும் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். இந்தத் தொலைநோக்குப் பார்வையுடன் கடந்த ஏழு ஆண்டுகளில் பல செறிவூட்டப்பட்ட ரகங்களை நாங்கள் உருவாக்கி உள்ளோம்”

Posted On: 05 FEB 2022 4:47PM by PIB Chennai

ஐதராபாதின் பதன்சேருவில் உள்ள வறண்ட நிலப் பகுதிக்கான சர்வதேச பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்திற்குப் (இக்ரிசாட்) பயணம் செய்த பிரதமர் திரு நரேந்திர மோடி இதன் 50-வது ஆண்டு விழாவைத் தொடங்கிவைத்தார். இக்ரிசாட்டின் தாவரப் பாதுகாப்பு குறித்தப் பருவநிலை மாற்ற ஆராய்ச்சி மையம், இக்ரிசாட்டின் துரித உற்பத்திக்கான நவீன மையம் ஆகியவற்றையும் பிரதமர் தொடங்கிவைத்தார். இந்த இரண்டு மையங்களையும் ஆசியா மற்றும் ஆப்பிரிக்க சஹாராவின் சிறு விவசாயிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டன.  தனித்துவத்துடன்  வடிவமைக்கப்பட்ட இக்ரிசாட்டின் இலச்சினையை வெளியிட்ட பிரதமர் இந்த விழாவையொட்டி நினைவு அஞ்சல் தலையையும் வெளியிட்டார்.  இந்த விழாவில் தெலங்கானா ஆளுநர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அமைச்சர்கள் திரு நரேந்திர சிங் தோமர், திரு கிஷண் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 வசந்த பஞ்சமி நாளின் புனிதத்தைக் குறிப்பிட்ட பிரதமர், 50 ஆண்டுகளுக்காக இக்ரிசாட்டிற்கு வாழ்த்து தெரிவித்தார். நாட்டிற்கும், இக்ரிசாட்டிற்கும் அடுத்த 25 ஆண்டுகளில் முக்கியத்துவத்தைக் கோடிட்டுக் காட்டிய பிரதமர் புதிய இலக்குகளும், அவற்றுக்காக பாடுபடுவதும் அவசியம் என்பதை வலியுறுத்தினார். இந்தியா உள்ளிட்ட உலகின் பெரும்பகுதியில் வேளாண்மைக்கு உதவுவதில் இக்ரிசாட்டின் பங்களிப்பைப் பிரதமர் பாராட்டினார். நீர் மற்றும் நில நிர்வாகம், பயிர்வகையில் மேம்பாடு, பலவகை வேளாண் கருவிகள் மற்றும் கால்நடை ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் இவர்களின் பங்களிப்பைப் பிரதமர் பாராட்டினார். ஆந்திரப் பிரதேசத்திலும், தெலங்கானாவிலும் விவசாயிகளை அவர்களின் சந்தைகளோடு ஒருங்கிணைத்தல், பயறுவகைகள் மேம்பாடு, கொண்டைக்கடலை உற்பத்தி ஆகியவற்றில் ஒட்டுமொத்த அணுகுமுறைக்காக அவர்களை அவர் பாராட்டினார். “உங்களின் ஆராய்ச்சியும், தொழில்நுட்பமும் வேளாண்மையை எளிதாக்கவும், நீடித்ததாக்கவும் மாற்ற உதவி செய்துள்ளன” என்று திரு மோடி கூறினார்.

  பருவநிலை மாற்றத்தால் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுவோர் குறைந்தபட்ச ஆதார வளங்களுடன் வளர்ச்சியின் கடைசி நிலையில் இருக்கும் மக்கள்தான் என்று பிரதமர் கூறினார். எனவே பருவநிலை மாற்றத்திற்கு சிறப்பு கவனம் செலுத்த உலகிற்கு இந்தியாவின் வேண்டுகோளைப் பிரதமர் வலியுறுத்தினார். சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை –லைஃப், புவிக்கோளுக்கு ஆதரவான மக்கள் இயக்கங்கள்- பி3, 2070-க்குள் கரியமிலவாயு வெளியேற்றத்தை முற்றிலுமாக நீக்கும் இந்தியாவின் இலக்கு ஆகியவை பற்றியும் அவர் பேசினார். “புவிக்கோளுக்கு ஆதரவான மக்கள் இயக்கம் என்பது பருவநிலை மாற்றத்தை சமாளிக்க பருவநிலை பொறுப்புடன்  ஒவ்வொரு சமூகத்தையும், ஒவ்வொரு தனிநபரையும் இணைப்பதாகும். இது வெறும் வார்த்தைகளோடு நிற்காமல், இந்திய அரசின் செயல்களிலும் பிரதிபலிக்கிறது” என்று அவர் மேலும் கூறினார்.

 நாட்டின் 15 வேளாண் பருவ மண்டலங்கள், ஆறு பருவங்கள் பற்றி குறிப்பிட்ட பிரதமர் இந்திய வேளாண்மையின் பண்டைக்கால அனுபவத்தின் ஆழத்தை எடுத்துரைத்தார். பருவநிலை மாற்றத்திலிருந்து தனது விவசாயிகளைப் பாதுகாக்க ‘மீண்டும் அடிப்படைக்கு’, ‘எதிர்காலத்திற்குப் பயணம்’ என்ற கலவையில் இந்தியாவின் கவனம் இருக்கிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். “நமது கவனம் என்பது 80 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ள சிறு மற்றும் நமக்கு மிகவும் தேவையான விவசாயிகளின் மீது இருக்கிறது” என்று பிரதமர் கூறினார்.

  மாறி வரும் இந்தியாவின் மற்றொரு பரிமாணம் பற்றி அதாவது, டிஜிட்டல் வேளாண்மை பற்றி குறிப்பிட்ட அவர், இது இந்தியாவின் எதிர்காலமாக உள்ளது என்பதால் திறமைமிக்க இந்திய இளைஞர்கள் இதனைக் கையாள மாபெரும் பங்களிப்பை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். பயிர் மதிப்பீடு, நில ஆவணங்கள் டிஜிட்டல் மயம், பூச்சிக்கொல்லி மற்றும் உரங்களை ட்ரோன்கள் மூலம் தெளித்தல் போன்றவற்றைப் பட்டியலிட்ட அவர், தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு அதிகரித்திருப்பதை இது காட்டுகிறது என்றார். “டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்க இந்தியாவின் முயற்சிகள் பெருமளவு அதிகரித்து வருகிறது” என்று அவர் கூறினார்.

அமிர்த காலத்தின் போது, அதிகபட்ச வேளாண் வளர்ச்சியுடன் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் இந்தியா கவனம் செலுத்துகிறது என்பதைப் பிரதமர் வலியுறுத்தினார். வேளாண்துறையில் உள்ள பெண்களுக்கு சுயஉதவிக் குழுக்கள் மூலம் ஆதரவு அளிக்கப்படுகிறது. “மக்கள் தொகையில் பெரும் பகுதியை வறுமையிலிருந்து வெளியேற்றி சிறந்த வாழ்க்கை முறைக்கு அவர்களைக் கொண்டு செல்ல விவசாயம் ஆற்றல் மிக்கதாக விளங்குகிறது. புவியியல் ரீதியாக சிக்கலான பகுதிகளில் விவசாயிகளுக்கு புதிய வழிமுறைகளையும் அமிர்தகாலம் வழங்கும்” என்று அவர் கூறினார்.

 இரட்டை உத்தியுடன் இந்தியா செயல்பட்டு வருகிறது என்று பிரதமர் கூறினார். ஒருபக்கம், தண்ணீர் சேகரிப்பு, நதிகள் இணைப்பு ஆகியவற்றின் மூலம் நிலத்தின் பெரும்பகுதி பாசனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மறுபக்கம் வரம்புக்கு உட்பட்ட பாசனப் பகுதிகளில் நுண்ணீர் பாசனம் மூலம் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவது ஊக்குவிக்கப்படுகிறது.

  சமையல் எண்ணெயில் தற்சார்புக்கான தேசிய இயக்கம் என்பது இந்தியாவில் புதிய அணுகுமுறையைக் குறிப்பதாக பிரதமர் கூறினார். இந்த இயக்கம் பனை எண்ணெய்ப் பகுதியை 6 லட்சம் ஹெக்டேர் அளவுக்கு உயர்த்துவதை நோக்கமாக கொண்டது. “அனைத்து நிலைகளிலும் இந்திய விவசாயிகளுக்கு இது உதவும் ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளது என்பதை நிருபிக்கும்” என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். 35 மில்லியன் டன் இருப்பு வைத்தல் திறன் கொண்ட குளிர்சாதனத் தொடர் வசதியை உருவாக்குதல், 1 லட்சம் கோடி ரூபாயில் வேளாண் அடிப்படை கட்டமைப்பு நிதியத்தை உருவாக்குதல் போன்ற அறுவடைக்குப் பிந்தைய கட்டமைப்பை வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதையும் அவர் எடுத்துரைத்தார்.

 வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள் (எஃப்பிஓக்கள்) மற்றும் வேளாண் மதிப்புத் தொடர் உருவாக்குதிலும் இந்தியா கவனம் செலுத்துகிறது. “ஆயிரக்கணக்கான எஃப்பிஓ-க்களை அமைப்பதன் மூலம் சிறு விவசாயிகளுக்கு விழிப்பையும், பலமான சந்தை சக்தியையும் உருவாக்க நாங்கள் விரும்புகிறோம்” என்று அவர் கூறினார்.

  இந்தியாவின் இலக்கு வெறுமனே உணவுத் தானிய உற்பத்தியை அதிகரிப்பது மட்டுமல்ல என்று பிரதமர் கூறினார். உலகின் மிகப்பெரிய உணவுப் பாதுகாப்பு திட்டங்களில் ஒன்றை செயல்படுத்துவதற்கு  இந்தியா போதிய அளவு உபரி உணவு தானியங்களைக் கொண்டிருக்கிறது. “உணவுப் பாதுகாப்பிலும், ஊட்டச்சத்து பாதுகாப்பிலும் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். இந்தத் தொலைநோக்குப் பார்வையுடன் கடந்த ஏழு ஆண்டுகளில் பல செறிவூட்டப்பட்ட ரகங்களை நாங்கள் உருவாக்கி உள்ளோம்”.

 இக்ரிசாட் என்பது ஆசியாவிலும், ஆப்பிரிக்க சஹாரா பகுதியிலும் வளர்ச்சிக்காக வேளாண் ஆராய்ச்சிகளை நடத்துகின்ற சர்வதேச அமைப்பாகும். மேம்படுத்தப்பட்ட, அதிக விளைச்சல் தரும் பயிர்வகைகளை வழங்க விவசாயிகளுக்கு இது உதவிசெய்வதோடு, தரிசு நிலங்களில் பருவநிலை மாற்றத்திற்கு எதிராகப் போராட சிறு விவசாயிகளுக்கு உதவியும் செய்கிறது.

***************



(Release ID: 1795795) Visitor Counter : 315