பிரதமர் அலுவலகம்

பிரதமர் நாட்டு மக்களுக்கு உரை

15-18 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும். இது கல்வி பயில ஆதரவளிக்கும்

சுகாதாரம் மற்றும் முன்கள பணியாளர்கள், இணை நோயுடன் கூடிய முதியோர்கள் ஆகியோருக்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசி வழங்க பிரதமர் அறிவிப்பு

Posted On: 25 DEC 2021 10:53PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றுகையில், 15 - 18 வயதுடைய குழந்தைகளுக்கு 2022 ஜனவரி 3ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவித்தார்.

 

இந்த நடவடிக்கை, இயல்பான முறையில் பள்ளியில் கல்வி பயில உதவுவதோடு, பெற்றோர்களுக்கு பள்ளி செல்லும் குழந்தைகள் குறித்த அச்சத்தை குறைக்கும் என்று தெரிவித்தார்.

 

மேலும் 2002 ஜனவரி 10ஆம் தேதி முதல், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் அறிவித்தார்.

 

கொரோனா நோயாளிகளுடன் இருந்து அவர்களுக்கு சேவையாற்றும் முன்கள மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

 

 

இந்தியாவில் இது பூஸ்டர் தடுப்பூசி என்றில்லாமல் முன்னெச்சரிக்கை தடுப்பூசி என அழைக்கப்படும். முன்னெச்சரிக்கை தடுப்பூசி நடவடிக்கை சுகாதார பணியாளர் மற்றும் முன் களப் பணியாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் என பிரதமர் கூறினார்.

 

இந்த முன்னெச்சரிக்கை தடுப்பூசியானது மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், 60 வயதுக்கு மேற்பட்ட, இணை நோயுடன் கூடிய முதியவர்களுக்கு, ஜனவரி 10ஆம் தேதி முதல் செலுத்தப்படும் என பிரதமர் தெரிவித்தார்.

 

இந்தியாவில் ஓமைக்ரான் குறித்து பொதுமக்கள் யாரும் பீதியடைய தேவையில்லை என்றும், முகக் கவசம் அணிதல், கைகழுவுதல் ஆகிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் எனவும் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.

 

பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், உலக அளவிலான அனுபவம் கூறுவது என்னவெனில், அனைத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் கடைப்பிடிப்பதே மிகப்பெரிய ஆயுதம் எனவும், இரண்டாவது ஆயுதம் தடுப்பூசி எடுத்துக்கொள்ளுதல் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

 

தடுப்பூசி முகாம் இந்த வருடம் ஜனவரி 16 ஆம் தேதி ஆரம்பித்து, தற்போது 141 கோடி தடுப்பூசியை கடந்துள்ளது என்று கூறிய பிரதமர், இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பொதுமக்கள், விஞ்ஞானிகள், சுகாதார பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.

 

 தடுப்பூசியின் முக்கியத்துவம்  ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டது மேலும், தடுப்பூசி பற்றிய ஆராய்ச்சியுடன், ஒப்புதல் செயல்முறை, விநியோகச் சங்கிலி, விநியோகம், பயிற்சி, தகவல் தொழில்நுட்ப ஆதரவு அமைப்பு மற்றும் சான்றிதழ் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டது என்ற அவர், இந்த முயற்சிகள் காரணமாகவே, நாட்டின்  61 சதவீதம் பேர் 2 தடுப்பூசிகளையும், 90 சதவீதம் பேர் குறைந்தது ஒரு தடுப்பூசியாவது  பெற்றுள்ளனர் என்று பிரதமர் தெரிவித்தார்.

 

வைரஸ் உருமாறுவதைப்போலவே, சவால்களை எதிர்கொள்வதில் நமது செயல்திறன் மற்றும் நம்பிக்கை ஆகியவை புதுமை உணர்வோடு பெருகி வருகிறது என்று பிரதமர் தெரிவித்தார்.

 

 

18 லட்சம் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், 5 லட்சம் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஐசியு படுக்கைகள், குழந்தைகளுக்காக 90 ஆயிரம் ஐசியு மற்றும் ஐசியு அல்லாத படுக்கைகள், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ ஆக்ஸிஜன் தொழிற்சாலைகள், 4 லட்சம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் ஆகியவை நம்நாட்டில் உள்ளது என தெரிவித்த பிரதமர், உயிர்காக்கும் தடுப்பூசி, சோதனைகள் ஆகியவற்றுக்காக மாநிலங்களுக்கு தேவையான உதவியும் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

 

 கொரோனாவுக்கு மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பு மருந்தையும், உலகின் முதல் டிஎன்ஏ தடுப்பூசியையும்,  நம்நாடு விரைவிலேயே தயாரிக்கும் என பிரதமர் உறுதிபட கூறினார்.

 

கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் ஆரம்பம் முதலே, அறிவியல் கொள்கைகள், அறிவியல் பரிந்துரைகள் மற்றும் அறிவியல் முறைகளையே கொண்டுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

 

11 மாதங்கள் நடந்து வரும் இந்த தடுப்பூசி இயக்கம் நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரிய நிம்மதியையும், இயல்பு நிலையையும் கொண்டு வந்துள்ளது என்றும், உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், நமது நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் முன்னேற்றம் காண்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

 

மேலும், கொரோனா இன்னும் விலகவில்லை, அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என பிரதமர் எச்சரித்தார்.

 

கொரோனா குறித்து வதந்தி, குழப்பம், பயம் ஏற்ப்படுத்தி வருவோரை எச்சரித்த அவர், வரும் நாட்களில் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை வேகப்படுத்த வேண்டுகோள் விடுத்தார்.

***



(Release ID: 1785295) Visitor Counter : 264